Published : 15 Dec 2018 01:30 PM
Last Updated : 15 Dec 2018 01:30 PM
வீடு என்பது கற்களால் எழுப்பப்பட்ட சுவர் மட்டுமல்ல. நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் நிரம்பிய ஒன்று அது. ஒரு வீட்டை ஏதோ காரணங்களுக்காக விற்க வேண்டிய நிலை வரும்போது மனம் வேதனைப்படும். எனவே இப்படி நேரும்போது அந்தச் சூழலுக்கு நம் மனதைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நமக்கு ‘வசதியான, வழக்கமான வாழ்வு’ என்ற ஒன்று உண்டு. இதை ஆங்கிலத்தில் ‘Comfort Zone’ என்பார்கள். ஒரு வசதிகளற்ற வீடாகவே இருந்தால்கூட அதில் வருடக்கணக்காகத் தங்கும்போது அதுவே பழக்கமாகி விடும்.
‘ஆகி வந்த வீடு’!
எப்போதுமே இந்த Comfort Zone-ஐ மீறிச் செல்லும்போதுதான் முன்னேற்றம் ஏற்படும் என்பார்கள். இல்லையேல் தேங்கி விடுவோம். வீட்டை விற்று வரும் தொகையைக் கொண்டு ஏதோ சாதகமான விஷயத்தைச் செய்யப் போகிறீர்கள். அல்லது மேலும் வசதியான ஒரு வீட்டுக்குக் குடிபோகிறீர்கள்.
இப்படி வீட்டை விற்பதால் உண்டாகக் கூடிய நன்மைகளை உட்கார்ந்து பட்டியலிடுங்கள். அதைப் பார்த்து மனம் ஆறுதல் அடையும். அதேபோல அந்த வீட்டில் உங்களுக்கு உள்ள அசவுகரியங்களையும் எண்ணிப் பாருங்கள். அதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதும் ஆறுதல் தரும்.
இது தொடர்பாகத் தங்கள் வீடுகளை விற்ற சிலரது எண்ணப் போக்குகளை அறிய நேர்ந்தது. அவை வீட்டை விற்கும் சூழல் அமைந்த பலருக்கும் மருந்தாக அமையலாம்.
அவற்றைக் கேட்போமா?
“சொந்தமான வீட்டை விட்டுவிட்டு ஒரு ஃப்ளாட்டை வாங்க வேண்டும் என்பது குடும்பத்தினரின் வற்புறுத்தல். என்னைத் தவிர மீதி அத்தனை பேரும் எனக்கு எதிரணியில் நின்றார்கள். ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல் வீட்டை விற்று விட்டேன். தொடக்கத்தில் மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், என் குடும்பத்தினர் எனக்குச் செய்த நல்ல செயல்களையும், அவர்களால் உண்டான பாசப் பிணைப்பையும் சிந்தித்துப் பார்த்தேன். வீட்டின் மீதுள்ள பிடிப்பு குறைந்தது. புதிய ஃப்ளாட்டில் நிம்மதியாகத்தான் இருக்கிறேன்’’ என்கிறார் ஒருவர்.
“நான் பழைய வீட்டில் இருந்தபோது நிறைய உறவினர்களும் நண்பர்களும் வந்து செல்வார்கள். புதிய வீட்டுக்கு மாறிய பிறகு அவர்கள் வரத்து குறைந்து விட்டது. என்றாலும், காலப்போக்கில் எப்படியும் பலரும் பல்வேறு திசைகளுக்குச் சென்றுவிடுவதுதான் இயல்பு. பழைய வீட்டில் தொடர்ந்து இருந்தாலும் இந்தச் சந்திப்புகள் குறைந்திருக்கும்’’ என்கிறார் இன்னொருவர்.
ஒருவர் தத்துவத்தைத் தன் துணைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். “ஆன்மாவைப் பொறுத்தவரை இந்த உடலே வீடுதான். இந்த வீட்டைவிட்டு உயிர் ஒரு நாள் வெளியே வரத்தான் போகிறது. அப்படியிருக்க வீட்டை விற்பது என்பதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவே கூடாது’’.
நினைவுகள்தாம் பலருக்கும் நெருடலைத் தருகின்றன. “நான் குடியிருந்த வீட்டின் ஒவ்வொரு சுவரும், ஒவ்வோர் அறையும் அப்படியே என் மனத்தில் பதிந்திருக்கின்றன. அப்படியிருக்க நான் எதையும் இழந்து விட்டதாகவே நினைக்கவில்லை’’ என்றார் ஒருவர்.
புதிய வீட்டில் உங்களுக்குப் புதிய நட்புகள் ஏற்படக் கூடாதா என்ன? அவை உங்களுக்கு மேலும் மேலும் மனமகிழ்ச்சியை அளிக்கக் கூடாதா என்ன?
ஆக ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ இயல்பான விஷயங்கள் என்பதை எடுத்துக் கொள்ளும்போது உணர்வுகளை நம்மால் சீராக வைத்துக் கொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT