Last Updated : 17 Nov, 2018 11:33 AM

 

Published : 17 Nov 2018 11:33 AM
Last Updated : 17 Nov 2018 11:33 AM

கடலுக்குள் எழும் கட்டுமானம்

உறுதியான பாலங்கள் கடலுக்கு நடுவிலும், பிரம்மாண்ட நதிகளின் மீதும் எழுப்பப்படுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இது எப்படிச் சாத்தியம் என்பதை யோசித்து இருக்கிறீர்களா?

நீருக்கு அடியில் கட்டுமானம் எப்படிச் சாத்தியம்? கட்டக்கட்ட அது கரைந்து விடாதா? நீரில் அடித்துக் கொண்டு சென்று விடாதா? நாம் சிலவற்றைப் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.

இருபது அடி உயரத்துக்கு வட்டவடிவில் ஒரு கட்டுமானத்தை நீருக்கு அடியில் எழுப்ப வேண்டும் என்பதாகவும், அந்தக் கட்டுமானத்தின் விட்டம் ஆறு அடி என்பதாகவும் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது எட்டு அடி விட்டத்துக்கு 21 அடி உயரத்துக்கு அந்த இடத்தில் ஒரு தடுப்பை எழுப்புவார்கள். அதற்கு உள்ளே உள்ள தண்ணீரை நீக்கிவிட்டுக் கட்டுமானத்தை தொடங்குவார்கள்.

அப்படியே இருந்தாலும் தண்ணீர் கொஞ்சமாவது நுழையாதா என்று கேட்டால் சில வேதியல் மாற்றங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பொதுவாக நாம் நினைத்துக் கொள்வது என்னவென்றால் ‘சிமெண்ட்டில் தண்ணீரைக் கலந்தவுடன் அந்த நீர் ஆவியாக மாறி வெளியேறுகிறது. சிமெண்ட் கெட்டிப்படுகிறது’ என்றுதான். இல்லை. நீரோடு வேதியல் வினைபுரிவதால் சிமெண்ட் கெட்டிப்படுவதில்லை.

சிமெண்ட் தண்ணீரோடு கலக்கும்போது ட்ரைகால்ஷியம் சிலிகேட் என்ற பொருள் உருவாகிறது. அதனால் சிமெண்டின் மேற்புறம் ஒரு படலம்போல் உருவாகிறது. எனவே, அதற்குள் செல்லும் தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது சிமெண்டால் அதிகம் நீர்த்துப் போய்விட முடியாது.

நீர் மட்டத்துக்குக் கீழே கட்டுமானங்கள் எழுப்பப்படும்போது போர்ட்லேண்ட் சிமெண்ட் (Portland Cement) என்பது பயன்படுத்தப்படுகிறது. இதற்கான காப்புரிமையை ஆங்கிலேயப் பொறியாளரான ஜோசப் ஆஸ்ப்டின் என்பவர் வாங்கி வைத்திருக்கிறார். சாக்பீஸ் அல்லது சுண்ணாம்புத் தூள் என்பதைக் களிமண்ணோடு கலந்து கொதிக்க வைப்பதன் மூலம் இந்த சிமெண்ட் கிடைக்கிறது. எந்த அளவுத் தண்ணீரைத் தன்னுடன் வினையாற்ற வைக்கலாம் என்பதை இந்த சிமெண்டே தீர்மானிக்கிறது.

போர்ட்லேண்ட் சிமெண்டைக் கொண்டு நீருக்கு அடியில் எழுப்பபடும் கட்டுமானங்கள் மிக வலிமையாக விளங்குகின்றன. நீர் இதன் உள்ளே அதிகம் உட்புகுவதில்லை. மிகப் பெரிய குழாய்கள் மூலம் இந்த கான்கிரீட் நதி அல்லது கடலில் மிக ஆழமான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே கொட்டப்படுகின்றன. அது அங்கே செட்டாகி விடுகிறது.

அடுத்த முறை அணைகளையோ, கடற்கரைக்கு வெகு அருகில் இருக்கும் கலங்கரை விளக்கங்களையோ, கடலில் உள்ள பெட்ரோலியக் கிணறுகளையோ பார்க்கும்போது அந்தக் கட்டுமான ரகசியத்தின் ஒரு பகுதி உங்களுக்கு விடுபட்டிருக்கும் அல்லவா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x