Published : 24 Nov 2018 11:32 AM
Last Updated : 24 Nov 2018 11:32 AM
சில வீடுகளில் பால்கனி என்பது சொர்க்கம். அங்கு சென்றால் நம்மை வருடிச் செல்லும் காற்றும் இளம் வெயிலும் தனிச் சுகம் தரும். பால்கனியில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் ஒரு கப் காபியோ தேநீரோ குடிப்பது என்பது தனிச்சுவைதான்.
பலருக்கும் பால்கனியில் ஒரு சிறிய தோட்டம் வளர்ப்பது என்பது கனவு. அப்படிப்பட்டவர்களுக்குச் சில ஆலோசனைகள். தோட்டம் வைத்துவிட்டால் போதாது. அதைப் பராமரிக்கவும் வேண்டும். “எனக்கு ஆசைதான். ஆனால் நேரமே இல்லை’’ என்பவர்கள் பால்கனித் தோட்டத்தை மறந்து விடுங்கள்.
இதையும் மீறி பால்கனித் தோட்டம் வளர்க்கத் தீவிரம் காட்டினால் எந்தவகைச் செடி, கொடிகள் குறைவான பராமரிப்பிலேயே தாக்குப் பிடித்து வளரும் என்பதை அறிந்து கொண்டு அவற்றை மட்டுமே வளருங்கள்.
தோட்டம் என்றால் தண்ணீர் ஊற்றத்தான் வேண்டும். ஒருவேளை உங்கள் பால்கனி தெற்கு அல்லது மேற்குப் புறத்தைத் பார்த்துக் கொண்டிருக்கலாம். அல்லது காற்று அதிகம் வீசும் இடமாக அது இருக்கலாம். இப்படியெல்லாம் இருந்தால் பால்கனித் தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றுவது ஒரு நாளைக்கு இருமுறை தேவைப்படும்.
விடுமுறைக்குக் குடும்பத்தோடு வெளியே செல்கிறீர்கள் என்றால் மிகவும் தெரிந்த அண்டை வீட்டுக்காரரிடம் உங்கள் பால்கனி தோட்டத்தை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லலாம். அப்படி யாரையும் நம்பி ஒப்படைக்க முடியாது என்றால் தானாகவே நீரைச் சொட்டு சொட்டாகச் செடிகளின்மீது இறக்கும் வகையிலான ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம்.
பூந்தொட்டிகளை பால்கனியின் வெளிப்புறச் சுவர்களின்மீது வைப்பது எப்போதுமே பாதுகாப்பானதல்ல. மீறிவைத்தால் எதிர்பாராது தொட்டியின் சமச்சீர் தன்மையைக் குலைந்து கீழே விழுந்துவிடும். பலவித வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கொண்ட செடி என்றால் உங்கள் பால்கனி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
சில தாவரங்கள் மேற்புறமாக வளரும். வேறு சில தாவரங்கள் கிடைமட்டமாக வளர்வதற்கு இடம் தேவை. உங்கள் பால்கனியிலுள்ள இடத்தை அனுசரித்து அதற்கேற்ற தாவரங்களைத் தேர்ந்தெடுங்கள்.
முதலில் சில தாவரங்களை வைத்துப் பார்த்து அவற்றை ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் பால்கனியின் சூழல் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அதன் பிறகு அதிகத் தாவரங்களை அங்கு வைக்கலாம்.
தாவரங்களுக்கு வெளிச்சம் தேவைப்படுமா இல்லையா என்பது குறித்தும் தெளிவு தேவை. உங்கள் பால்கனி கிழக்குப் பார்த்ததாக இருந்தால் அங்கு காலையில் சூரிய வெளிச்சம் நான்கு மணி நேரங்களுக்காவது இருக்கும்.
பால்கனியின் எடை, தாங்கும் திறன் என்பது முக்கியம். பால்கனியில் தோட்டம் வளர்க்க வேண்டுமென்றால் அந்த பால்கனி கான்கிரீட்டில் இருப்பது நல்லது. பால்கனியில் வைப்பதற்கு டெரகோடா பூந்தொட்டிகள் நல்லது. அவை மண்ணையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதிகப்படி நீரையும் வெளியேற்றிவிடும்.
ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாதீர்கள். தக்காளி, மிளகு, மிளகாய், கத்தரி போன்றவற்றை உங்கள் பால்கனியில் தாராளமாக வளர்க்கலாம். சரியான உரம் கிடைக்கவில்லை என்றால் மக்கிய தேயிலைகளைக்கூட உரமாகப் பயன்படுத்தலாம். தண்ணீரைத் தாவரங்களுக்கு ஊற்றும்போது சிறிது சிறிதாக ஊற்றுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT