Published : 20 Oct 2018 11:59 AM
Last Updated : 20 Oct 2018 11:59 AM
வாடிக்கையாளருக்கும் கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இடையில் முறையான கட்டுமான ஒப்பந்தம் (CONSTRUCTION AGREEMENT) ஏற்படுத்திக் கொள்ளாததால், பல வீட்டுக் கட்டுமானப் பணிகள் சிக்கலாவதுண்டு. உங்கள் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
சட்டவிதிகளை உண்டாக்கி அதனை நெறிப்படுத்த தனித்துறைகளை அமைக்கும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே, வேலை தொடங்கும் முன்பாக இரண்டு தரப்பிலும் ஒப்புக்கொண்ட தகவல்களை ஒரு பத்திரத்தில் எழுதிக் கையெழுத்திட்டு வைத்துக்கொள்வது இருவருக்குமே மிகவும் நல்லது.
கட்டுமான ஒப்பந்தத்தில் கட்டாயம் கீழ்க் கண்ட இந்த 10 விஷயங்களை எழுதிக்கொள்ள வேண்டியது அவசியம்.
1. வீட்டு உரிமையாளர், ஒப்பந்ததாரரின் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், வயது, முகவரி,ஆதார் எண் போன்ற அடிப்படைத் தகவல்கள்
2. நாம் வீடு கட்டப்போகும் இடம் பற்றிய முழு விவரம்.
3. கட்டுமான வேலையின் மொத்த மதிப்பு (TOTAL CONTRACT VALUE). எந்தெந்தத் தனிப்பட்ட வேலைக்கு எவ்வளவு என்கிற விவரம். உதாரணத்துக்குச் சதுர அடி முறையில் வேலை என்றால், கூடுதலாக வர வாய்ப்புள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வேலைகள் குறித்த தனிச் செலவுகள் பற்றிய குறிப்புகள்.
4. எந்தெந்த வேலை முடிந்த பின் எவ்வளவு சதவீதப் பணம் கொடுக்கப்பட வேண்டும் (PAYMENT STAGES) என்பது பற்றிய தெளிவான குறிப்பு. எந்தெந்த நாட்களில் பணம் கொடுக்க வேண்டிய கட்டுமான நிறைவு எட்டப்படும் என்கிற விவரமும் எழுதப்படுவது சாலச் சிறந்தது..
5. தரம், கட்டுமானப் பொருட்கள் குறித்த விரிவான விவரம் (DETAILED SPECIFICATIONS). உதாரணத்துக்குத் தரையில் பதிக்கக்கூடிய டைல்ஸ் என்றால் அதன் விலை எவ்வளவு என்கிற விவரம். நீர்க் குழாய்கள் , மின்சாரம் போன்ற பொருட்கள் என்றால், அவற்றின் BRAND மட்டுமல்லாமல் எந்த MODEL என்கிற கூடுதல் விவரம்.
6. கட்டப்போகும் வீட்டின் மொத்த தளங்களின் வரைபடம். மொட்டை மாடியில் வரக்கூடிய படிக்கட்டுக்கு மேல் இருக்கும் HEAD ROOM உள்ளிட்டவை அடங்கிய மொத்த வரைபடங்கள். வாய்ப்பு இருப்பின் கம்பி வரைபடமும் (STRUCTURAL DRAWING) வெளிப்புறத் தோற்ற வரைபடமும் (ELEVATION) இணைப்பது சிறப்பு.
7. எந்தெந்த வேலைகள் இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பணத்தில் செய்து தர முடியாது என்கிற விவரம். உதாரணம்: உள் அலங்கார வேலைகள் (INTERIOR WORKS, MODULAR KITCHEN)
8. வீடு கட்டத் தேவையான கால அளவு – எத்தனை மாதங்கள் என்ற விவரம். ஒரு வேளை காலம் கடந்தால் கூடுதல் கால கட்டத்துக்கு ஒப்பந்ததாரர் கொடுக்க வேண்டிய ஈட்டுப் பணம் (COMPENSATION).
9. வீட்டு வேலை நடக்கும் கால கட்டத்தில் ஒரு வேளை அடிப்படைக் கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் ஏற்பட்டால் அதை யார் பொறுப்பேற்கிறார்கள் என்கிற குறிப்பு. வீட்டு உரிமையாளர் - ஒப்பந்ததாரர் இருவரும் குறிப்பிட்ட விகிதத்தில் அதை ஏற்றுக் கொள்ளலாம்.
10. வீட்டு உரிமையாளர் - ஒப்பந்ததாரர் தவிர இரண்டு சாட்சிதாரர்களின் கையொப்பமும் அவர்களின் தெளிவான விவரங்களும் (பெயர் முகவரி).
ஒரு சட்ட வல்லுனருடன் கலந்தாலோசித்து கட்டுமான ஒப்பந்தத்தை அமைத்துக்கொள்வது நல்லது. மேற்கண்ட 10 விதமான விவரங்களும் கட்டாயம் அமையப்பெறுவது வீடு கட்டும் வேலையை மேலும் எளிமைப் படுத்தும்.
தொடரும்…
- கட்டுரையாளர், கட்டுமானப் பொறியாளர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT