Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM
ராஜீவ் காந்தி சாலையும் ஜிஎஸ்டி சாலையும் ச் முக்கிய முதலீட்டுக்கான இடங்களாக எப்போதும் எல்லோரையும் கவர்ந்துவருகின்றன.
ஆனால் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள வீடுகளுக்கான அடிப்படை வசதிகள், கட்டுநர்களின் வாக்குறுதிப்படி இல்லை என்கிறார் இந்திய ரியல் எஸ்டேட் கட்டுநர்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.நந்தகுமார்.
மேலும் “மக்கள் குடி நீருக்காகத் தனியார் தண்ணீர் லாரிகளையே பெரும்பாலும் நம்பியிருக்கிறார்கள்” என்கிறார் அவர். இதே போலத்தான் ஜிஎஸ்டி சாலையும். அதனால் இப்போது கட்டுநர்கள் தங்கள் தொழிலை வளர்க்க இந்த இரு சாலைகளுக்கும் மாற்றான ஒரு பகுதியை நோக்கிச் செல்ல நினைக்கிறார்கள்.
இந்த இரு பகுதிகளின் அசுர வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது செம்பரம்பாக்கமும் அதன் சுற்றுப் பகுதியான பெங்களூர் நெடுஞ்சாலையும் வளர்ச்சி அடைந்துவருகின்றன. இன்னொரு பக்கம் பொன்னேரியும் அதன் சுற்றுப் பகுதியான வட சென்னைப் பகுதிகளும் வளர்ச்சியை நோக்கி முன்னேறிவருகின்றன.
செம்பரம்பாக்கம்
சென்னையின் தென் மேற்குப் பகுதியில் பூந்தமல்லிக்கும் குத்தம்பாக்கத்திற்கும் அருகில் செம்பரம்பாக்கம் அமைந்துள்ளது. மேலும் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலைப் பகுதியை ஒட்டி அது அமைந்துள்ளது.
இந்தப் பகுதியின் வளர்ச்சிக்குக் காரணம் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் அமைந்த இந்தத் தேசிய நெடுஞ்சாலைதான். இப்போது புதிதாகத் திறக்கப்பட்டுள்ள வண்டலூர் - நெமிலிசேரி வெளிவட்டச் சாலை (Outer ring road) செம்பரம்பாக்கத்தைச் சென்னையுடன் எளிதாக இணைக்கிறது.
இந்தக் காரணங்களுக்காகப் பல கட்டுமான நிறுவனங்கள் இப்போது செம்பரம்பாக்கத்தைக் குறிவைத்துள்ளன. கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் அங்கு வேகமாக நடந்துவருகின்றன. மேலும் இவற்றுக்கு அருகில் 484 வீடுகள் கொண்ட காத்ரேஜ் நிறுவனத்தின் புதிய கட்டுமானத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
மேலும் 55 ஏக்கர் பரப்பில் வில்லாக்களும் கட்டப்பட உள்ளன. காத்ரேஜ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இதுதான் சென்னையின் முதல் திட்டம். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமையவுள்ள விமான நிலையமும் இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. சென்னையை இணைக்கும் பேருந்து வசதிகள் ஏற்கனவே இந்தப் பகுதியில் உள்ளன.
இந்தப் பகுதியில் போதிய கல்வி வசதிகளும் உள்ளன. இண்டெர்நேஷனல் பள்ளிகளும், மருத்துவக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரியும் செம்பரம் பாக்கம் பகுதியில் அமைந்துள்ளன. பொழுதுபோக்குப் பூங்காக்கள், மருத்துவமனைகள், உணவு விடுதி கள் ஆகிய வசதிகளும் உள்ளன.
பொன்னேரி
வடசென்னைப் பகுதியான பொன்னேரிக்கு இந்த பட்ஜெட்டில் அடித்திருக்கிறது யோகம். ஆம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி அமையுள்ள இடங்களில் ஒன்று பொன்னேரி. பொன்னேரி, பெங்களூர் - சென்னை தொழில் தடத்தை ஒட்டியுள்ள முக்கியமான பகுதி.
ஜப்பான் நிறுவனமான ஜே.ஐ.சி.ஏ. (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்) ஏற்கனவே 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ஸ்மார்ட் சிட்டி பணியைத் தொடங்கிவிட்டது. ஸ்மார் சிட்டியால் தொழில் பூங்காகளும் வர்த்தக கட்டிடப் பணிகளும் குடியிருப்புகளும் புதிதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போதே பொன்னேரிக்கு வெளியே டவுன்ஷிப் கட்டிடப் பணிகள் தொடங்கிவிட்டன.
தி இந்து (ஆங்கிலம்)
சுருக்கப்பட்ட வடிவம்
தமிழில்: குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT