Published : 09 Jun 2018 10:54 AM
Last Updated : 09 Jun 2018 10:54 AM
இ
ளையராஜா கோலோச்சிய காலத்தில், வேறு இசையமைப்பாளர்களால் இசைக்கப்பட்டு புகழ்பெற்ற பல பாடல்கள் ‘ராஜாவின் இசை’ என்ற பேரலையோடு அவர் பெயரிலேயே அடையாளம் பெற்றுவிட்டதும் உண்டு. இளையராஜா மலையாளத்தில் நிறைய ஹிட் பாடல்களைத் தந்திருக்கிறார். அப்படி இளையராஜாவின் பாடல் என்று தவறாக நான் மயக்கம் கொண்ட பாடல்களில் ஒன்று இது.
சமீப காலத்தில் புகழ்பெற்ற பாடல்களுக்கு ‘ஆடியோ கவர்’, ‘வீடியோ கவர்’ வெர்ஷன் வெளியிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. பக்கத்து மாநிலமான கேரளத்திலோ புகழ்பெற்ற பாடலுக்கு சினிமாவிலேயே மீண்டும் மீண்டும் ‘கவர் வெர்ஷன்’ வெளியிடுகிறார்கள்.
1984-ல் வெளியான ‘ஆயிரம் கண்ணுமாய்’ என்ற பாடல் குழந்தைத் தாலாட்டு, மலையாள ஆர்கெஸ்ட்ராக்கள், திருவிழாக்கள் என எங்கெங்கும் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் பாடல். மலையாளத்தில் ‘சிறந்த 5’, ‘சிறந்த 10’ திரைப்பாடல்கள் வரிசையில் இடம்பிடிக்கக்கூடியது. சற்றே சோக ரசம் நிறைந்த இந்தப் பாடலுக்கு ரசனையாகவும் இனிமையாகவும் பாடப்பட்ட பல வெர்ஷன்கள் உண்டு.
வருகைக்கான ஏக்கம்
தமிழில் நதியா, பத்மினி நடித்து வெளியான ‘பூவே பூச்சூடவா’ ஒரு தழுவல் படம். மலையாளத்தில் ‘நோக்கெத்தா தூரத்து கண்ணும் நட்டு’ என்ற பெயரில் வெளியானது. இரண்டையுமே இயக்கியிருந்தவர் ஃபாஸில்.
மலையாளப் படத்தில்தான் பிச்சு திருமலா எழுதிய ‘ஆயிரம் கண்ணுமாய் காத்திருந்நு நின்னே ஞான்’ (ஆயிரம் கண்களோடு உனக்காக நான் காத்திருந்தேன்) என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்றது. அதிக மலையாளப் பரிச்சயம் இல்லாததால், படத்தின் மலையாள வடிவத்துக்கும் இளையராஜாவே இசையமைத்திருந்தார் என்று நம்பிக்கொண்டிருந்த ஆட்களில் நானும் ஒருவன்.
எந்தப் பாடலைப் பாடினாலும் அத்துடன் சற்றே சோகத்தையும் சேர்த்துக் குழைத்து தரும் கே.ஜே. யேசுதாஸ் பாடிய இப்பாடல், தன் பேத்தியின் வருகைக்காகக் காத்திருக்கும் பத்மினியின் தீராத ஏக்கத்தை நம் மனதுக்குள் ஆழமாகக் கடத்திவிடுகிறது.
தனிமையில் இருந்த பத்மினி, அன்புக்காக ஏங்கித் தவித்ததை இந்தப் பாடலைப் போல் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது. குழந்தைகளின் நெருக்கத்துக்குத் தவிப்பவர்கள், அவர்களைக் குறித்த ஏக்கத்தைக் கொண்டவர்களது உணர்வுகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் பாடல் இது. இதைப் புரிந்துகொள்வதற்கு மலையாளம் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. படத்திலேயே இந்தப் பாடலுக்கு மூன்று வெர்ஷன்கள் உண்டு. பெண் குரல் பாடலைப் பாடியிருந்தவர் சித்ரா. இந்தப் படத்தில் பாடிய பிறகே மலையாளத்தில் அவர் பிரபலமடைந்தார்.
இந்தப் படத்தில்தான் ஸ்பெஷல் கண்ணாடி ஒன்றைப் போட்டால், ஆட்கள் டிரெஸ் இல்லாமல் தெரிவார்கள் என்ற கேளிக்கையான விஷயம் முதலில் முன்வைக்கப்பட்டது. மலையாளப் பதிப்பில் நதியாவையும் பத்மினியையும் சுற்றிவரும் இந்தப் படத்தில் தனக்கு இருக்கும் முக்கியத்துவம் பற்றிக் கவலைப்படாமல் நடித்திருந்தவர் மோகன்லால். அன்றைக்கு வளர்ந்துவரும் நடிகராக அறியப்பட்டிருந்த அவர், அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். தமிழில்? எஸ்.வி. சேகர். நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்.
மலையாள மண்ணை ஆட்கொண்ட எளிமையான ‘ஆயிரம் கண்ணுமாய்’ பாடலின் மெட்டு, தேவாலய சேர்ந்திசைப் பாடலை ஒத்திருக்கும் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால் விமர்சனங்களைத் தாண்டி, இந்தப் பாடல் இன்றைக்கும் கேரளத்தில் தாலாட்டு முதல் மெலடிவரை அனைத்து வகைகளிலும் முணுமுணுக்கப்படும் பாடலாக இருக்கிறது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஜெர்ரி அமல்தேவ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2016-ல் ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ என்ற படத்துக்கு இசையமைத்து மீண்டும் ஹிட் பாடல்களைத் தந்தவர் இவர்.
2012-ல் தான் இயக்கிய ‘தட்டத்தின் மறயத்து’ படத்தில் ‘ஆயிரம் கண்ணுமாய்’ பாடலுக்கு இன்னொரு வெர்ஷனை வெளியிட்டு, இப்பாடலுக்குப் புத்துயிர் ஊட்டினார் வினீத் ஸ்ரீனிவாசன். அவரே பாடிய இந்த மெதுவான வெர்ஷன் கேரளமெங்கும் ‘ஆயிரம் கண்ணுமாய்’ மீண்டும் பாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தப் படத்தைத் தாண்டியும் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT