Published : 02 Jun 2018 10:43 AM
Last Updated : 02 Jun 2018 10:43 AM
ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள்
கத்தரி வெயில் முடிந்துவிட்டது என்று செய்தியில்தான் சொல்கிறார்கள். ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தால், இன்னமும் வெயில் உச்சி மண்டையைப் பிளக்கிறது. சென்னையைத் தவிர, பிற மாவட்டங்கள் ஒரு சிலவற்றில் பரவலாக மழை பெய்துவருகிறது. இருந்தும் அங்கும்கூட வெயில் தணிந்தபாடில்லை.
பருவமழை தொடங்கிவிட்ட தமிழகத்திலேயே இப்படி என்றால், தக்கான பீடபூமியில் இருக்கும் தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அடிக்கிற வெயிலைப் பற்றிக் கேட்கவா வேண்டும்..? ஆனால், தெலங்கானாவில், அதுவும் ஹைதராபாத்வாசிகள், ‘வெயிலா… என்னப்பா சொல்றீங்கலு..? எங்க வீட்டுக்குள்ளாற வந்து பாருங்கலு. ஏ.சி.யே இல்லாம என்னா இதமா இருக்கு தெரியுமாலு..’ என்று கோங்குரா சட்னியைச் சாப்பிட்டுவிட்டு ‘குளிர்ச்சி’யாகப் பேசுகிறார்கள்.
அவர்களின் ரகசியத்தைத் தேடி ஹைதராபாத்திலுள்ள தேவரகொண்டா குடிசைப் பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள சில மக்களின் வீடுகள், உண்மையிலேயே அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கின்றன. மின்விசிறிகூட இல்லை. ‘என்ன மாயம் இது..?’ என்று ஆச்சரியப்பட்டால், அதற்கு விளக்கம் தருகிறார், பேராசிரியர் ராஜ்கிரண் பிலோலிகர். இவர், ஹைதராபாத்தில் உள்ள ‘அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஸ்டாஃப் காலேஜ் ஆஃப் இந்தியா’ (ஏ.எஸ்.சி.ஐ.) நிறுவனத்தில், ‘ஆற்றல் சேமிப்பு’ துறையில் பணிபுரிந்து வருகிறார். நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் போன்றவர்களுக்குப் பயிற்சியளிக்கும் கல்வி நிறுவனம் அது.
வெப்ப அலைக்கு முற்றுப்புள்ளி
“நாளுக்கு நாள் பூமி சூடாகி வருவது அனைவரும் அறிந்ததே. பருவநிலை மாற்றத்தின் முக்கிய அறிகுறி இது. 2015-ம் ஆண்டு நாட்டில் மிதமிஞ்சிய அளவுக்கு வெயில் அடித்தது. அதனால் ஏற்பட்ட வெப்ப அலையில் நாடு முழுக்க சுமார் 2,300 பேர் உயிரிழந்தனர். இதை நம்மால் தடுத்திருக்க முடியுமா? முடியும். எப்படி? கூல் ரூஃப் என்று சொல்லப்படும் குளுமையான கூரைகளை அமைத்தால் போதும்” என்கிறார் ராஜ்கிரண்.
“நகர்ப்புற இந்தியாவில் சுமார் 60 சதவீதக் கட்டிடங்கள், பல்வேறு உலோகங்கள், ஆஸ்பெஸ்டாஸ், கான்கிரீட் போன்றவற்றைப் பயன்படுத்தித்தான் கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கூரைகளால், வீட்டுக்குள் வெப்பம் படர்வதைத் தடுக்க முடியவில்லை. மின்விசிறி போன்றவற்றை வைத்துச் சமாளிக்கலாம் என்றால், பல நேரம் மின்சார வசதியும் இருப்பதில்லை. இப்படியொரு இக்கட்டான சூழலில், குறைந்த செலவில், அதிக வேலைப்பாடுகள் தேவைப்படாமல், வீட்டைக் குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது கூல் ரூஃப்” என்றார் ராஜ்கிரண்.
கோடையில் ‘விரிப்பு’, மழையில் ‘மடிப்பு’
அதென்ன கூல் ரூஃப்? இவை, சுண்ணாம்பு அல்லது அக்ரிலிக் பாலிமர் அல்லது பிளாஸ்டிக் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘கோட்டட்’ கூரைகளாகவோ அல்லது பாலிவினைல் குளோரைடு அல்லது ‘ஹை டென்ஸிட்டி பாலிஎத்திலின் போன்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெம்பரேன் ஷீட்’ கூரைகளாகவோ அல்லது சைனா மொஸைக் டைல்ஸ் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கூரைகளாகவோ இருக்கலாம். இந்தவிதமான கூரைகளுக்கு, கீழே விழுகிற வெப்பத்தை, வீட்டுக்குள் பரவவிடாமல், திரும்ப வளி மண்டலத்துக்கே அனுப்பும் திறன் உண்டு.
“மேற்கண்ட கூரை வகைகளில், ‘பெம்பரேன் ஷீட்’ கூரைகள்தான் மிகவும் விலை குறைந்தவை. இது படுக்கை விரிப்பு போன்று இருக்கும். ஒரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை கொண்ட வீடு ஒன்றுக்கு, சுமார் ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.4 ஆயிரத்துக்குள், இந்த விரிப்புக்காகச் செலவிட வேண்டியிருக்கும். வெயில் காலங்களில் இதை வீட்டின் கூரையின் மீது விரித்து வைத்துவிட வேண்டும். அப்போது, வீட்டுக்குள் வெப்பம் பரவுவது தடுக்கப்பட்டு, குளுமை பரவும். பொருளாதாரத்தில், கீழ் நிலையில் உள்ளவர்கள், மழைக்காலங்களில் இந்த விரிப்பை, படுக்கை விரிப்பாகவும், போர்வையாகவும்கூடப் பயன்படுத்திக் கொள்வதை நாங்கள் கண்டிருக்கிறோம்” என்கிறார் ராஜ்கிரண்.
பரிசோதனை முயற்சியின் பலன்
2017-ம் ஆண்டு இப்படியான ‘குளுமைக் கூரைகள்’ முயற்சி, அகமதாபாத் நகரத்தில், பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே, அங்கு தற்போது, இதைப் பரவலாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே – ஜூன் மாதங்களில், ஹைதராபாத்தில், ராஜ்கிரண் பிலோலிகர், ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த பேராசிரியர் விஷால் கார்க் ஆகிய இருவரும் தேவரகொண்டா குடிசைப் பகுதியில் சுமார் 50 வீடுகளில் இதைப் பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டார்கள்.
“அந்த 50 வீடுகளில் சுமார் 4 வீடுகளில் சென்ஸார்கள் பொருத்தி, வீடுகளுக்குள் நிலவும் வெப்பத்தைக் கணக்கிட்டோம். இந்த விரிப்பைப் பயன்படுத்தாத வீடுகளைக் காட்டிலும், விரிப்பைத் தங்கள் கூரைகளில் பயன்படுத்திய வீடுகளில் வெப்பம் குறைவாகவே இருந்தது தெரியவந்தது. இந்தப் பரிசோதனை முயற்சியின் முடிவுகளை தெலங்கானா அரசு அதிகாரிகளிடம் விளக்கினோம். அதைத் தொடர்ந்து, குளுமைக் கூரைகள் தொடர்பாக விரைவில் கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுக்க இது நடைமுறைக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார் ராஜ்கிரண் பிலோலிகர். இந்தக் குளுமை நாடெங்கும் பரவட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT