Published : 16 Jun 2018 11:09 AM
Last Updated : 16 Jun 2018 11:09 AM
கோ
யம்புத்தூர் ஆனைக்கட்டிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது வடகோட்டதர. நிர்வாகப்படி இந்த ஊர் கேரளாவாக இருந்தாலும், ஊர் முழுக்கத் தமிழ்மணம்தான். குன்றுகள் சூழ்ந்திருக்கும் ஏற்ற, இறக்கமான கேளரச் சாலை விநோதமான ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அந்த வழியிலிருந்து சற்றே விலகிக் கீழே இறங்கினால் ஒரு குன்றின் தாழ்வாரத்திலிருக்கிறது ‘சத் தர்ஷன்’.
இதை ஒரு வாசஸ்தலம் எனச் சொல்லலாம். மனப் புத்துணர்ச்சிக்கான மையம் எனலாம். கலைகளை, தியானத்தை, தற்காப்புக் கலைகளை, இயற்கையைக் கற்றுக்கொள்ளக்கூடிய இடம் எனலாம். அல்லது ஊர்க்காரர்கள் சொல்வதுபோல ‘காத்தாடி வீடு’, ‘ஆசிரம வீடு’ போன்ற பெயர்களிலும் அழைக்கலாம். ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா, ரோஜாதானே?
எட்டுத்திக்கும் இயற்கை வியாபித்துக் கிடக்கும் சூழலில் இருக்கிறது சத் தர்ஷன். தேன் கூட்டை ஒத்த ஒரு கட்டுமானம் அது. கேரள நாலுகெட்டு வீட்டைப் போல், இது ஆறுகட்டு வீடு. நடுப்பகுதியில் வான்வெளியும் அதைச் சுற்றி ஆறு அறைகளையும் கொண்டுள்ளது. ‘கட்டிடவியல் காந்தி’யான லாரி பேக்கரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீட்டை உருவாக்கியிருக்கிறார்கள் சத் தர்ஷனின் நிறுவனர்கள் இரா. ஆனந்தக்குமாரும் அவரது மனைவி மஞ்சு பாரதியும். இந்த வீட்டின் நடுவிலுள்ள வான்வெளியில் மூங்கில்கள் அடைந்திருக்கின்றன. அது தனது கைகளை உயர்த்தி இந்த வீட்டையும் இயற்கையின் ஓர் அங்கமாக ஆக்கியிருக்கிறது.
இதிலுள்ள ஆறு அறைகளில் நடுவில் நூலகமும் மீதமுள்ள ஐந்து அறைகளும் விருந்தினர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது அல்லாது, இன்னும் இரு அறைகள் காட்டுப் பாதையில் உள்ளன. ஒரே நேரத்தில் 15-லிருந்து 20 விருந்தினர்கள்வரை இங்கே தங்க முடியும்.
இந்த முகப்புக் கட்டுமானத்தைச் சுற்றி 3 ஏக்கரில் அடர்ந்த காடு விரிந்து கிடக்கிறது. தேக்கு, கொய்யா, மா, எலுமிச்சை, மூங்கில், வேம்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்களின் சரணாலயமாக இருக்கிறது இந்தக் காடு. இது உருவாக்கப்பட்ட காடு. விவசாய நிலமாக இருந்த நிலத்தை வாங்கி, காடாக ஆனந்த் மாற்றியிருக்கிறார். இதற்காகப் பல வருடங்கள் செலவழித்திருக்கிறார்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை சத் தர்ஷனுக்கு அழைத்து வந்து, அவரது மேற்பார்வையில்தான் இந்தக் காட்டை உருவாக்கியிருக்கிறார். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்ற ஜெகதீஸ் சந்திரபோஸின் கண்டுபிடிப்பை, இந்தக் காடுதான் நமக்கு உணர்வுபூர்வமாக உணர்த்துகிறது. காட்டைச் சீராக்கிக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை ஆனந்த் இதற்கு உதாரணமாகச் சொல்கிறார்.
பாதையிலிருந்த தேக்குக் கன்றுகள் இரண்டைப் பிடுங்கி எறிய தொழிலாளர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால், ஆனந்த் அதற்குச் சம்மதிக்கவில்லை.தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு அவை இடைஞ்சலாக இருப்பதாக அங்கலாய்த்துவந்திருக்கிறார்கள். “அந்த ஒரு வார காலத்தில், இரு தேக்குக் கன்றுகளும் அளவுக்கு மீறி மரத்தைப் போன்ற பெரிய இலைகளுடன் வளர்ந்து தங்கள் இருப்பைக் காட்டின” என்கிறார் ஆனந்த். இந்தக் காட்டுக்குப் பின்னால் பவானி ஆறு சலசலத்து ஓடுகிறது. விருந்தினர்கள் கால் நனைக்கவும் ஒரு ஏற்பாடுசெய்திருக்கிறார்கள்.
முகப்புக் கட்டிடத்தின் பக்கவாட்டுப் பாதை வழியே சென்றால், சமையலறை. இதன் கட்டுமானமும் விசேஷமானது. வெட்டுக்கல்லால் கட்டப்பட்ட இந்த அறைக்குப் கைவிடப்பட்ட கொல்லம் ஓடுகளை வாங்கிக் கூரை வேய்ந்திருக்கிறார்கள். தரைத் தளம் ரெட் ஆக்சைடால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் இருபுறமும் கிராமத்து வீட்டைப் அழகான திண்ணைகளை உருவாக்கியிருக்கிறார் ஆனந்த்.
சமையல் தயாரானதும் இந்த அறைக்கு எதிரே கட்டியிருக்கும் வெங்கல மணியை ஒலிக்கிறார்கள். சத் தர்ஷனில் தங்கியுள்ள விருந்தினர்கள், அவர்களாகவே தேவையான அளவு எடுத்து உண்ணலாம். மிக எளிய, ஆரோக்கியமான உணவை ஆனந்தின் குடும்பத்தினரே தயாரித்துத் தருகின்றனர். தங்குமிடத்துக்கும் மூன்று வேளை உணவுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.350தான் வசூலிக்கப்படுகிறது. தியானத்துக்கான ஒரு கூடத்தையும் இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
“சத் தர்ஷன் ஆசிரமம் அல்ல. தன்னையறியும் முயற்சியிலிருப்பவர்களுக்கான இடம். பொதுவாகவே இது போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்குப் போதிய பணம் இருக்காது. அதற்காகத்தான் நானாவித சிரமத்துக்குள்ளேயும் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இயல்பவர்கள், விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தரலாம். விருந்தினர்கள் தினமும் இரு வேளை தலா அரைமணி நேரம் இந்தத் தியானக் கூடத்துக்குள் அமர வேண்டும். அவர்கள் எந்தத் தியான முறையையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
சும்மா உட்கார்ந்திருந்தால் போதும். அதுபோல் தினமும் 1 மணி நேரம் ஏதாவது ஒருவிதத்தில் செயலாற்ற வேண்டும். காட்டுப் பாதையைச் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடலாம். இது விருந்தினர்களுக்கும் மன ஆரோக்கியம் தரும்” என்கிறார் ஆனந்த்.
ஆனந்த், எழுத்தாளரும்கூட. ஆத்ம தரிசனம் குறித்து ‘சூன்யப் பிரவாகம்’ உள்ளிட்ட இரு நூல்களை எழுதியிருக்கிறார். அவரது சமீபத்திய நூலான ‘ஒரு போக்கிரியின் கதை’, கோயம்புத்தூர் விஜயா பதிப்பக வெளியீடாக விரைவில் வெளியாகவுள்ளது. இரண்டாவது நூலை முழுமையாக சத் தர்ஷனில் இருந்துதான் எழுதியுள்ளார். இந்த உற்சாகத்தில் எழுத்தாளர்களுக்காக உறைவிட முகாமைத் தொடங்கலாம் என்ற எண்ணமும் ஆனந்துக்கு உருவாகியுள்ளது.
ஆனந்த், சத் தர்ஷன் மூலம் பலவிதமான பயிலரங்குகளையும் முன்னெடுத்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான குமார் அம்பாயிரம் இங்கு பயிலரங்கை நடத்தியிருக்கிறார். தேங்காய்ச் சிரட்டையில் சிற்பங்கள் செய்வது குறித்த பயிற்சி வகுப்பும் இங்கு நடத்தப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை மண் குளியல், மலையேற்றப் பயிற்சியும் நடத்தப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்புகளை https://www.facebook.com/sat.darshan.18 என்ற முகப்புத்தக முகவரியில் பதிந்துவருகிறார் | இணையதள முகவரி: www.satdarshan.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT