Last Updated : 16 Aug, 2014 02:10 PM

 

Published : 16 Aug 2014 02:10 PM
Last Updated : 16 Aug 2014 02:10 PM

சாதிக்குமா ஸ்மார்ட் சிட்டி?

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 8 மெட்ரோபாலிடன்கள், 26 இரண்டாம் தர நகரங்கள், 33 மூன்றாம் தர நகரங்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான டவுன்கள் உள்ளன. இவற்றில், பெரு நகரங்களுக்கு அருகில் இருக்கும் டவுன்கள் எனப்படும் புறநகர்ப் பகுதிகள் விரைவான வளர்ச்சியை எட்டி வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு பெரு நகரங்களுக்கு அருகே ஸ்மார்ட் சிட்டிகளை (திறன்மிகு நகரம்) உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றாக, ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக ரூ.7,060 கோடியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், கட்டுமானத் துறையைச் சேர்ந்த சிலர் இதுகுறித்த மாற்றுக் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

மத்திய அரசின் திட்டப்படி, நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்ட முதற் கட்ட நிதி, 7 ஆயிரம் கோடிக்குச் சற்றே அதிகம். அதாவது, ஒரு நகரத்திற்குச் சராசரியாக 70 கோடி ரூபாய்.

முதற்கட்ட ஒதுக்கீடு என்றாலும் கூட, 70 கோடி ரூபாய் என்பது மிகக் குறைந்த அளவிலான நிதிதான் என்றும், இதனை வைத்து, ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்குவதே சிரமம் என்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டு மின்றி, பல்வேறு விஷயங்களில் அவர்கள் முன்வைக்கும் காரணம் வெவ்வேறு விஷயங்களைப் பிரதிபலிக்கிறது.

பொதுவாக, எந்த ஒரு பகுதியும், அனைத்து வசதிகளும் கூடிய நகரமாகக் குறுகிய காலத்தில் உருவெடுத்துவிட முடியாது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அடிப்படை வசதி இல்லாமல் இருந்தாலும், அங்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்காக மக்கள் அதே பகுதியிலேயே தொடர்ந்து தங்குவார்கள்.

குறிப்பாக, முந்தைய காலங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை என்பதே அரிதான விஷயமாக இருந்தது. எனவே, மக்கள் அதனைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஒரு இடத்தில் மக்கள் பெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அடிப்படை வசதிகளும் சிறிது சிறிதாக மேம்படும் அல்லது மத்திய, மாநில அரசுகளால் மேம்படுத்தப்படும்.

இப்படிப் பல ஆண்டுகள் மக்கள் பெருக்கத்தால் திளைக்கும் ஒரு இடம்தான் பின்னாளில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களாக அல்லது தலைநகரங்களாக உருவெடுக்கின்றன. ஆனால், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பு இதற்கு நேர் மாறானதாக இருப்பதாக ரியல் எஸ்டேட் முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

அதாவது, கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்தி, அதனை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றி விட்டு மக்களை அங்கே குடியிருக்கச் செய்வதே மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது.

அதே நேரத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி அறிவிப்புக்கு ஆதரவான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் தற்போதே கடுமையான மக்கள் நெருக்கடியும், போக்குவரத்து நெருக்கடியும் இருப்பதாகவும்,

இதனைக் கட்டுக்குள் வைப்பதற்கு, புறநகர்ப் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவதே சிறந்த தீர்வாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெரு நகரங்களுக்கு சற்றே தொலைவில் இருக்கும் ஏதோ ஒரு பகுதியை ஸ்மார்ட் சிட்டி எனப் பெயரிட்டு அதற்கெனப் பல கோடி ரூபாயைச் செலவு செய்து அதனை மேம்படுத்த வேண்டிய அவசியமில்லை.

அதற்குப் பதிலாகப் பெருநகரங்களுக்குச் சற்றே தொலைவில் இருந்தாலும், ஏற்கனவே வளர்ச்சியடையத் தொடங்கி விட்ட பகுதிகளை மையப்படுத்தி அவற்றை மேலும் மேம்படுத்தினாலே, பெரு நகரங்களில் இருக்கும் மக்களின் நெருக்கடியும், போக்குவரத்து சிக்கலும் தீர்ந்து விடும். இதற்கு சில உதாரணங்களும் உள்ளன.

இந்தியாவில், 1950களில் ஜாம்ஷெட்பூர், பொகாரோ போன்ற நகரங்களில் உருக்காலைகள் தொடங்கப்பட்டதால், அவை பல்வேறு பகுதிகளிலும் இருந்த தொழிலாளர்களையும், மக்களையும் தங்களை நோக்கி ஈர்த்தன. சண்டிகர், காந்திநகர், புவனேஸ்வர் போன்ற நகரங்கள், பலவேறு வகையிலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததையடுத்து அவை தலைநகரங்களாக உருவெடுத்தன.

அதே நேரத்தில், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையின் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, அதற்கு அருகிலேயே அமைக்கப்பட்ட நவி மும்பை பகுதிக்கு, தொடக்கத்தில் மக்கள் அதிகளவில் குடிபெயரவில்லை. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னரே, அனைத்து வகையிலும் பெரு நகரமாக நவி மும்பை உருவெடுத்தது.

ஆசிய அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதார வளர்ச்சியில் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறும் இந்தியாவில், நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப புதிய நகரங்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமான விஷயம் என ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர். வணிகமயமாக மாறிவிட்ட இன்றைய நவீன யுகத்தில், வசதி வாய்ப்புள்ள இடங்களில் தங்களின் குடியிருப்பை மாற்றிக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை.

பெரு நகரங்களுக்குச் சற்றுத் தொலைவில் ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்பட்டாலும், போக்குவரத்து வசதி, போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தால், மக்கள் தயக்கமின்றி ஸ்மார்ட் சிட்டிகளுக்குக் குடிபெயர்வார்கள். இதன் காரணமாக மக்கள் நெருக்கத்தால் சிக்கித் தவிக்கும் பெரு நகரங்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓரளவு ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x