Last Updated : 23 Jun, 2018 10:20 AM

 

Published : 23 Jun 2018 10:20 AM
Last Updated : 23 Jun 2018 10:20 AM

துணியைப் போல் ஒரு கான்கிரீட்

கா

ன்கிரீட் கான்வாஸ், முக்கியமான மாற்றுக் கட்டுமானப் பொருள். இதைச் சுருக்கமாக ‘சிசி’ என அழைக்கிறார்கள். துணியைப் போன்ற தோற்றம் கொண்ட இதில் வேறு எந்த மூலப்பொருளையும் சேர்க்க வேண்டியதில்லை.

இந்தத் தொழில்நுட்பம் மூலம் அதிகமாகக் கூடாரங்கள் அமைக்கப் பயன்பட்டன. இதை நமக்குத் தேவையானது போல மிக எளிதாகக் கையாள முடியும். இருக்கக்கூடிய பரப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி உபயோகப்படுத்தலாம். இப்படியாக அமைத்து, அதன் மேல் தண்ணீர் தெளித்தால் போதுமானது.

அது சேர்ந்து கொள்ளும். அதாவது ‘U’ கால்வாய் என வைத்துக்கொண்டால், அதில் அப்படியே இந்த கான்வாஸை விரித்துத் தண்ணீரைத் தெளித்தால் போதுமானது. அளவுக்குத் தகுந்தாற்போல ஒன்றின் மேல் ஒன்றை வைத்து எளிதாக இணைக்கலாம். ஒரு நாளுக்குள் இவை தன் உறுதிநிலையைப் பெற்றுவிடும்.

சுருட்டப்பட்ட நிலையில் கிடைக்கும் இதை ஒருவர் மட்டும் எளிதாகத் தூக்கிச் செல்ல முடியும். இதற்காக பிரத்யேகமான போக்குவரத்து செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீருக்கு அடியிலும் இந்த கான்வாஸைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்ல கடினமான உப்பு நீரிலும் இது அதே உறுதியுடன் செயலாற்றும். இது எளிதில் கீறல் விடக்கூடியது அல்ல. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. இதைத் தயாரிக்கும்போது கேடு விளைவிக்கக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடு அவ்வளவாக வெளியேற்றுவதில்லை.

அரிப்பைத் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் வேதிப் பொருட்கள் இதன் மீது படுவதால் சேதம் ஏற்படாது. இதை நிறுவ பிரத்யேகமான சாதனங்கள் தேவையில்லை. அதனால் மின்சக்தி, இயந்திர சக்தி சேமிக்கப்படும். தற்காலிகப் பயன்பாட்டுக்கு இதைப் பயன்படுத்தினால் இதை அப்புறப்படுத்துவதும் மிக எளிது.

கால்வாய் அமைக்க இவற்றைப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் கால்வாய் அமைக்க கான்கிரீட் கான்வாஸைப் பயன்படுத்தும்போது நேர விரயம் தவிர்க்கப்படும். மேலும் கால்வாயின் கரடுமுரடான மேற்பரப்புக்குத் தகுந்தாற்போல் இதை விரித்துக்கொள்ள முடியும். தண்ணீர்க் குழாய் பதிக்கும்போது பாதுகாக்க அதைச் சுற்றி கான்கிரீட் கான்வாஸ் அமைக்கலாம். தற்காலிகமாகத் தரையைச் சமன்படுத்த வேண்டும் எனில், அதற்கும் நேரம் எடுக்கும்.

சட்டென கான்கிரீட் கான்வாஸை விரித்துவிட்டால் உடனடியாகத் தரை சமமாகும். இதைத் தற்காலிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டு பிறகு அகற்றிவிடலாம். தண்ணீருக்கு அடியில் பிவிசி பைப்புகளைப் பதிக்க வேண்டிய சூழலில் இதைப் பயன்படுத்தலாம். விரிசல்களால் கட்டிடம் விழுந்துவிடாமல் இருக்க ஆதாரமாக இந்த கான்வாஸைக் கொண்டு கட்டலாம். எளிய வகையில் கூடாரம் அமைக்க இதைப் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x