Published : 02 Jun 2018 10:48 AM
Last Updated : 02 Jun 2018 10:48 AM
ஓ
வியக் கலை அரிதான கலை ஒன்றும் இல்லை. ஆனால் அதை இயற்கையுடன் சேர்ப்பதில்தான் ஓர் அபூர்வம் இருக்கிறது. அப்படியான அபூர்வமான கலைஞர் பர்வதவர்த்தினி. தலைகிழாகக் கிடக்கும் இளநீர்த் தோடு அதனால்தான் அவருக்கு பூவாகத் தெரிகிறது. சுவரில் திட்டுத் திட்டாகத் தோன்றும் கரைகளைக்கூட தனித்துவமான ஓவியமாக்க அவரால் முடிகிறது. பனை ஓலை, மரப்பலகை, இளநீர்த் தோடு, குக்கர் கேஸ் கட் எனப் பயன்பாட்டுக்கு உதாவது எனக் குப்பையில் வீசும் பொருள்களுக்குத் தன் கலையில் மறுவாழ்வு கொடுக்கிறார் என்றே சொல்ல வேண்டும். திருச்செங்கோட்டைச் சேர்ந்த இவர் இப்போது வசிப்பது சென்னையில்.தன் சொந்த ஆர்வத்தால் இந்தக் கலைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
பொதுவாக வீட்டிலிருந்து ஓவியங்கள், கைவினைப் பொருட்களை கற்றுக்கொள்ளும் சிலர் இணையம் வழியாக கற்றுக்கொள்வார்கள். ஆனால் பர்வதவர்த்தினி தன்னைச் சுற்றியுள்ள இயற்கை சார்ந்த விஷயங்களில் இருந்தே ஓவியம் வரையை கற்றுக்கொண்டாராம்.
“எங்கள் வீட்டில் யாருக்கும் ஓவியம் பற்றியெல்லாம் பெரியளவுக்கு தெரியாது. ஆனால் இயற்கையின் மீது எனக்கு சிறுவயதிலிருந்தே ஆர்வம் அதிகம். ஒரு பூ எப்படி பூக்கிறது, இலைகளின், சறுகுகளின் அழகு, நீரோடையின் வளைவு என இயற்கை சார்ந்த அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனிப்போன். இதுவே பின்னாளில் சுயமாக ஓவியம் வரையவும், இலை, பூக்களை கொண்டு கைவினைப் பொருட்களை செய்யவதற்கும் ஆதாரம் எனத் தோன்றுகிறது” என்கிறார் பர்வதவர்த்தினி.
பர்வதவர்த்தினியின் இந்த ஓவியத் திறமை, பாட்னாவில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் வரை கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. அங்கு ஆடை அலங்கார வடிவமைப்பியல் துறையில் முதுலைப் பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றுத் தேர்ந்திருக்கிறார். அதற்கு அவரது இந்த ஓவியம் ஆர்வம் ஒரு முக்கியக் காரணம்.
பொதுவாக ஆடை வடிவமைப்பியல் படித்தவர்கள் பெரும்பாலும் பிரபல ஆடை நிறுவனங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவிடும் சூழ்நிலையில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தாலும் சுயதொழில் புரிவதே தன்னுடைய விருப்பம் என்கிறார் அவர்.
“எனக்கு இந்த கார்ப்பரேட் சூழ்நிலையில் வேலைபார்ப்பதில் ஈடுபாடு கிடையாது. அதனால்தான் நானே சுயமாக அலங்கார பொருட்கள் செய்யத் தொடங்கினேன். பின்னர் அருகில் உள்ள பள்ளிகளுக்கு இயற்கை சார்ந்த சுவர் ஓவியங்களையும், கார்ட்டூன் கதாபாத்திரங்களையும் வரைந்து வருகிறேன்.
அதேபோல் திருமணங்களுக்குச் செய்யப்படும் நுழைவாயில் வரவேற்பு போன்ற அலங்காரங்களையும் செய்துவருகிறேன். என்னுடைய இந்த அலங்காரங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் கலப்படம் அறவே கிடையாது” என்கிறார் அவர்.
பனை ஓலை, தென்ன ஓலையால் செய்யப்பட்ட விநாயகர், தோரணங்களால் ஆன நுழைவாயில், வீணாகும் மரப்பலகையை வீட்டின் பெயர் பலகையாக மாற்றுவது என இயற்கையான முறையில் அலங்காரங்கள் செய்துவருகின்றனர். அதேபோல் சிப்பிகளைக் கொண்டு மரப்பலகையில் ஓவியங்கள் வரைவது பர்வர்த்தினியின் விசேஷமான அம்சம்.
உபயோகப்படாது எனத் தூக்கிப்போட்ட பொருட்களை மட்டும் பர்வதவர்த்தினி ஐந்து, ஆறு பெட்டிகளில் சேகரித்து வைத்திருந்தாராம். “ என்னுடைய கைவினைக்கு மூலதனமே வீணாகும் பழைய பொருட்கள்தான். திருமணத்துக்கு பிறகு அந்த பெட்டிகளையும் சீதனமாகக் கணவர் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன்” எனச் சிரிப்புடன் சொல்கிறார். மேலும் பழைய நாளிதழ்களைக் கூழாக்கி அதைக் கொண்டு குத்துவிளக்கு, அம்மிக்கல் பொம்மைகளைச் செய்து அசத்தியிருக்கிறார்.
பிளாஸ்டிக் பயன்பாடு, சுற்றுச் சூழல் போன்றவை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தனது லட்சியங்களுள் ஒன்றாகக் கொண்டிருக்கிறார் பர்வதவர்த்தினி. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கருங்குழி அரசுப் பள்ளியில் கடந்த வாரம் இந்தச் சமூகப் பணியைத் தொடங்கியிருக்கிறார். ஜூன் மாதத்துக்குள் 20 பள்ளிகளை தனது ஓவியக் கரங்களால் தட்டவுள்ளார்.
இயற்கையுடனான அவரது இந்தப் ப்ரியத்தை அவர் தனது கைவினைப் பொருள்கள், ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார் பர்வதவர்த்தினி. இந்த ஓவியங்கள், கைவினைப் பொருள்களையே கைகளாகக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தையும் அணைத்துவிட முயல்கிறார். அதுவே அவரது லட்சியமும்கூட.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT