Published : 02 Jun 2018 10:48 AM
Last Updated : 02 Jun 2018 10:48 AM
அய்கிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே...
துர்க்கையைத் துதித்துப் பாடும் ‘மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம்’ என்று அறியப்படும் இந்தப் பாடலைப் பூஜையறைகள் வழியாகக் கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்காதவர்கள், ரஜினி-கமல் வழியாகப் புகழ்பெற்ற இந்தப் பாடலைக் கேட்டிருப்பார்கள். ‘அவ்வை சண்முகி'யில் சண்முகிப் பாட்டி முணுமுணுத்த வகையில் பலரது நினைவில் இந்தப் பாட்டு பதிந்தது.
அப்படியும்கூட அந்தப் பாடலைக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், ஐ.நா. சபையில் ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஆடிய ‘புகழ்பெற்ற பரதநாட்டிய’த்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐஸ்வர்யா தனுஷ் நடனம் ஆடியது (!), இந்தப் புகழ்பெற்ற பாடலுக்குத்தான்.
ஆன்மிகம் தாண்டிய அர்த்தம்
இந்தப் பாடல் ஆன்மிகப் பாடலாக அறியப்பட்டிருக்கும் அதேநேரம், எந்த ஒன்றையும் அதன் மூலப்பொருளில் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மத நம்பிக்கைகள், புராணக் கதைகளைத் தாண்டியும் பல படைப்புகள் புரிந்துகொள்ளப்படுகின்றன. நவீன காலத்தில் பாரம்பரியப் புரிதல்களுக்கு புது அர்த்தம் கொடுக்கப்படுவது புதிதல்ல.
அப்படி புது அர்த்தம் தேடும் பாடல்களில் ஒன்று ‘அய்கிரி நந்தினி’. மொழி புரியாவிட்டாலும், இந்தப் பாடலைப் பாடும்போது அடுத்தடுத்து எதுகை மோனையுடன் வந்து விழும் வார்த்தைகள் ஏற்படுத்தும் ஒலியால் உருவாகும் சித்திரம் உத்வேகம் ஊட்டக்கூடியது. அதைப் பற்றிக்கொண்டு இந்தப் பாடலை நவீன வடிவத்தில் பலர் யூடியூபில் பதிவேற்றி இருக்கிறார்கள்.
பெண்மைக்குச் சமர்ப்பணம்
எளிய பெண்களையும் பெண் உழைப்பின் முகங்களையும் வலுவான காட்சிகளாகப் பதிவு செய்திருக்கிறது ‘அய்கிரி நந்தினி’யின் ராக் வெர்ஷன் வீடியோ. நட்சத்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாடகி சௌரபா பாடி, ஸ்ரீநாத் குலால் தயாரித்திருக்கும் இந்த வீடியோ, பெண்மையின் கொண்டாட்டத்துக்குச் சிறந்த சமர்ப்பணங்களில் ஒன்று. பெண்களைத் தாண்டி திருவிழா, அன்றாட - யதார்த்தக் காட்சிக்கோவையாக இப்பாடல் விரிகிறது.
அதிவேகமாக மாறும் காட்சிகள் மூலம் எப்படிப்பட்ட உணர்வை நம் மனதில் கிளர்த்த முடியும் என்பதற்கு இந்தப் பாடலின் காட்சி சிறந்த உதாரணம். பாடலின் தொடக்கம் முதல் தொடர்ந்து ரீங்கரிக்கும் எலெக்ட்ரானிக் கிதாரும் பாடலுக்குத் தனி அடையாளம் சேர்க்கிறது.
உற்சாகம், உத்வேகம்
ராக் வெர்ஷன் மட்டுமில்லை, இந்தியாவின் முன்னணி ராப் பாடகர் புரோதா. வி இதே பாடலுக்கு ‘ஹிப் ஹாப்’ வெர்ஷனையும் வெளியிட்டுள்ளார். அவருடைய அதிவேக ராப் வரிகள் மூலப் பாடலுக்கு இடையில் புகுந்து அதிவேகமாகப் புறப்பட்டு வருகின்றன. ஆங்கில ராப் வரிகள் சட்டென்று புரியாவிட்டாலும், அய்கிரி நந்தினியை அவருடைய குழு பாடும் முறை நிச்சயமாக உற்சாகமும் உத்வேகமும் ஊட்டக்கூடியது.
பெண் அடையாளம்
கடந்த ஆண்டு பீஜாய் நம்பியார் இயக்கி துல்கர் சல்மான் நடித்து மலையாளத்திலும் தமிழிலும் வெளியான ‘சோலோ’ படத்திலும் ‘அய்கிரி நந்தினி’ பாடல் இடம்பெற்றுள்ளது. நான்கு கதைகளின் தொகுப்பான இந்தப் படத்தில் ‘வேர்ல்ட் ஆஃப் சிவா’ என்கிற கிரைம் துணைக் கதையில் இடம்பெற்ற பாடல் இது. துல்கர் சல்மான் ரவுடியாக நடித்திருக்கும் இந்தக் கதையில், பழிவாங்கும் பின்னணியில் இடம்பெற்ற இந்த நீண்ட பாடலுக்கு இசையமைத்தது கேரளத்தின் பிரபலமான மியூசிக் பாண்டான தய்க்குடம் பிரிட்ஜ் . ‘எங்கேயும் எப்போதும்’ பாடலின் கிதார் மீட்டல்களை சில இடங்களில் நினைவுபடுத்தும் இந்தப் பாடல், ரசிக்கத்தக்க ஒரு திரைப்பாடல் வடிவம்.
அநீதிகளுக்கு எதிராகப் பொதுவெளிகளுக்கு வந்து போராடும் பெண்களுக்குத் துப்பாக்கித் தோட்டக்களைப் பரிசாகத் தரும் காலத்தில், ‘அய்கிரி நந்தினி’ போன்ற பாடல்கள் பெண்மைக்குப் புது அர்த்தமும் உருவமும் தருகின்றன.
நட்சத்திரா புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட அய்கிரி நந்தினி பாடலைக் காண
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT