Last Updated : 28 Apr, 2018 11:23 AM

 

Published : 28 Apr 2018 11:23 AM
Last Updated : 28 Apr 2018 11:23 AM

வீட்டுக்குள்ளே பசுமைக் கூட்டம்

கோடை வெயில் உச்சத்துக்கு ஏறிவருகிறது. பசுமையாகச் சிறிய நிழல் கிடைத்தாலும் மனம் குதூகலிக்கிறது. இந்த வெயிலைச் சமாளிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மண் பானைத் தண்ணீர், கூழ் என உணவு முறையையும் மாற்றிப் பார்க்கலாம். அதுபோல வீட்டுக்குள் குளிர்ச்சியாகச் சிறு தாவரங்களை வளர்க்கலாம். அவை கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமல்லாது வீட்டுக்குள் இருக்கும் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன.

மணி பிளாண்ட்

பலவிதமான செடிகள் சந்தையில் கிடைக்கின்றன. மணி பிளாண்ட், அவற்றுள் ஒன்று. வீட்டின் உள்ள காற்றைச் சுத்தமாக்க இந்தச் செடி உதவுவதாகச் சொல்லப்படுகிறது. மணி பிளாண்ட், பிரான்ஸைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இப்போது உலகத்தில் பல நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது தொட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.200-லிருந்து சந்தையில் கிடைக்கிறது. இது வெறும் தண்ணீரில் வளரக்கூடியது.

சீன மூங்கில்

சீன மூங்கில் என அழைக்கப்படும் இது பார்ப்பதற்கு மூங்கிலைப் போல் இருக்கும். ஆனால் இதற்கும் மூங்கிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது வீட்டுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. அது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. ஆனால், அதற்கு அதிர்ஷ்ட மூங்கில் என்ற பெயரும் உண்டு. இதுவும் ரூ.200-லிருந்து கிடைக்கிறது.

சைங்கோனியம் பிங்க்

சைங்கோனியம் பிங்க் எனப்படும் இந்தச் செடி குரோட்டன் செடியைப் போல் இருக்கும். இது லத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வீட்டுக்குள் வளர்க்கும் செடியாக உள்ளது. இது மண்ணில் வளரக்கூடியது. அதேபோல் இதற்கு நேரடியாக சூரிய வெளிச்சமும் அவசியமல்ல. இதன் இலைகள் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இது ரூ.150லிருந்து கிடைக்கிறது.

ஜேடு பிளாண்ட்

தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி, தடிமனான இலைகளைக் கொண்டது. இந்தச் செடியும் மண்ணில் வளரக்கூடியது. நேரடியான சூரிய வெளிச்சம் தேவை இல்லை. அதனால் இந்தச் செடியை வீட்டுக்குள் வளர்க்கலாம். இது ரூ.190 முதல் கிடைக்கிறது.

அரக்கா பனை

தென்னை மரத்தைப் போன்று உள்ள இந்தச் செடி வீட்டுக்குள் வளர்க்கும் செடியில் மிகப் பிரபலமானது. இதன் பூர்வீகம் மடகாஸ்கர். ஆனால், அந்தமான் பகுதிகளிலும் இது காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செடி மற்ற செடிகளைப் போல் மேஜை மீது வளர்க்கக்கூடியது அல்ல. குட்டைத் தென்னையைப் போல் 4,5 அடிகள் வளரக் கூடும். அதனால் பெரிய தொட்டியில் வளர்க்க வேண்டும். இதன் விலை மற்ற மேஜைத் தொட்டிச் செடிகளைக் காட்டிலும் சற்று அதிகம். ரூ.500லிருந்து கிடைக்கும்.

பீஸ் லில்லி

அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தச் செடி அழகாக வெள்ளை நிறத்தில் வளரக் கூடியது. அதனால் இது அமைதி லில்லி (Peace lilly) என அழைக்கப்படுகிறது. இது மேஜைத் தொட்டிச் செடிதான். இது ரூ. 180லிருந்து கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x