Published : 03 Feb 2018 10:23 AM
Last Updated : 03 Feb 2018 10:23 AM
ந
வீன வீட்டின் சிறப்பம்சங்கள் ஸ்மார்ட் கருவிகள். நமது சோம்பேறித்தனத்தை நன்கு உணர்ந்தே, நமது அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளை எளிமையாகச் செய்து முடிக்கும்வகையிலேயே இந்த ஸ்மார்ட் கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை நமக்குப் பல வசதிகளை அளிக்கின்றன. நமது பல சிரமமான வேலைகளை மிக எளிதானதாக மாற்றுவதில் இந்த ஸ்மார்ட் கருவிகளின் பங்கு அதிகம். ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் சமையலறை, ஸ்மார்ட் ஸ்டவ், ஸ்மார் ஷவர் எனப் பல ஸ்மார்ட் சாதனங்களைப் பார்த்தோம். அந்த வரிசையில் இப்போது ஸ்மார்ட் செருகி. அதென்ன ஸ்மார்ட் செருகி? ஸ்மார்ட் செருகி என்பது வேறெதுவுமல்ல, அது ஸ்மார்ட் ப்ளக் அவ்வளவுதான்.
வீட்டில் எத்தனையோ இடங்களின் ப்ளக் பாயிண்ட் இருந்தும் அவசியப்படும் இடத்தில் ப்ளக் பாயிண்ட் இல்லையே எனப் பெரும்பாலான நேரத்தில் அலுத்துக்கொள்கிறோம். ஏனெனில், மொபைல் சார்ஜ் போட, மடிக் கணியை மின்னேற்ற, எமர்ஜென்சி விளக்கை சார்ஜ் போட, தொலைக்காட்சியை இயக்க, மியூசிக் சிஸ்டத்தைச் செயல்படுத்த எனப் பல வேலைகளுக்கு இந்த ப்ளக் பாயிண்ட் தேவைப்படும். என்னதான் பார்த்துப் பார்த்துத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் ப்ளக் பாயிண்ட் பொருத்தினாலும் சில வேளைகளில் நமக்குத் தேவையான இடங்களில் ப்ளக் பாயிண்ட் அமையாமல் நம்மை அலுப்படைய வைத்துவிடும். ஸ்மார்ட் ப்ளக் இருந்தால் இத்தகைய அலுப்புக்கு வேலையே இல்லை.
அதென்ன ஸ்மார்ட் ப்ளக் என்று தோன்றுகிறதா? இதுவும் வீட்டில் வழக்கமாகக் காணப்படும் ப்ளக் போன்றதுதான். வீடுகளுக்குக் கிடைக்கும் மின்சாரத்தை நமது மின் சாதனங்களுக்குப் பெற்றுத் தர ப்ளக் பாயிண்டில் கருவிகளைப் பொருத்துவோம். இந்த ஸ்மார்ட் ப்ளக் ஆனது மின் சாதனங்களுக்கும் ப்ளக் பாயிண்டுகளுக்கும் இடையே அமர்ந்து ஓர் இடைத் தரகர் போல் செயல்படும்.
ஆனால், இதன் நவீனச் செயல்திறன் தான் இதை வழக்கமான ப்ளக்கில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பொதுவாகவே இந்த ப்ளக் ஆனது பயன்படுத்த அதிகச் சிக்கல் இல்லாமல் மிகவும் எளிமையான தன்மையுடன் இருந்தால் பயன்படுத்துவது எளிதாகும். ஸ்மார்ட் ப்ளக் ஆனது பயன்படுத்த மிகவும் எளிதாக அமைந்திருக்கிறது. வெறும் ப்ளக் பாயிண்ட் தானே என எளிதாக எண்ணிவிடாதீர்கள்.
இது பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால், ஸ்மார்ட் மின் சாதனங்களைக் கொண்ட ஒரு வீட்டில் இந்த ஸ்மார்ட் ப்ளக்கின் அதுவும் வைஃபை போன்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஸ்மார்ட் ப்ளக்கின் செயல்பாடு என்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.
வீட்டின் வழக்கமான சுவிட்சு போர்டுகளில் அமைந்துள்ள சாக்கெட்டில் (வீடுகளில் இதை நாம் ப்ளக் பாயிண்ட் என அழைப்போம்) இந்த ஸ்மார்ட் ப்ளக்கைச் செருகிவிட்டு, அதில் எந்த மின் சாதனத்தையும் செருகி அதை ஸ்மார்ட்டான பயன்பாட்டுக்கு உள்ளாக்கலாம். விளக்கிலிருந்து வெளிவந்து உதவும் பூதம் போல் இந்த ஸ்மார்ட் ப்ளக் நமது கட்டளைக்காகக் காத்திருக்கும். சும்மா சொல்லிக்கொண்டே போனால் அப்படியென்ன இதில் இருக்கிறது என உங்களுக்குத் தோன்றலாம்.
ஓர் எடுத்துக்காட்டுடன் இதைப் பார்த்தோம் எனில் அதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஸ்மார்ட் ப்ளக்கில் நாம் டிவிக்கான வயரைச் செருகுகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அந்த டிவியை நாம் நினைத்த நேரத்துக்கு ஆஃப் செய்யவோ ஆன் செய்யவோ முடியும். இதைத் தான் சாதாரண ப்ளக் பாயிண்டிலேயே செய்துகொள்ளலாமே அதற்கு எதற்கு ஸ்மார்ட் ப்ளக் என்று தோன்றுகிறதா? அவசரப்படாதீர்கள்.
வழக்கமான ப்ளக் பாயிண்ட் என்றால் ஒவ்வொரு முறையும் நாம் சுவிட்ச் அருகே சென்று ப்ளக் பாயிண்ட் சுவிட்சை ஆனோ ஆஃபோ செய்ய வேண்டும். ஆனால், இந்த ஸ்மார்ட் ப்ளக்கில் அந்த வேலை அவசியமே இல்லை. நாம் அருகிலேயே செல்ல வேண்டாம். நமது ஸ்மார்ட் போனிலிருந்தே இந்த ஸ்மார்ட் ப்ளக்கை இயக்க முடியும். ஸ்மார்ட் ப்ளக்குக்கான செயலியை மட்டும் பதிவிறக்கம் செய்து நமது ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொண்டால் போதும்.
நமது அறையின் விளக்கை இந்த ஸ்மார்ட் ப்ளக்கில் செருகினால் அந்த விளக்கு எவ்வளவு நேரம் ஒளியைப் பரப்ப வேண்டும் எப்போது தன் இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதையெல்லாம் நமது போன் மூலமாகவே கட்டுப்படுத்தலாம். வீட்டுக்கு வெளியே இருந்தும்கூட இந்த மின் சாதனங்களைக் கையாளலாம்.
இந்த ஸ்மார்ட் ப்ளக்கில் நமது காபி மேக்கரை இணைத்துவிடுகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நாம் எழும் நேரத்தை ஸ்மார்ட் போனில் செட் செய்து அந்த நேரத்துக்கு ஆட்டோமேட்டிக்காக இந்த காபி மேக்கரை இயக்கி நமக்குத் தேவையான காபியைத் தயாரித்துக்கொள்ளலாம்.
இவற்றின் வேலை இத்தகைய வசதிகளை அளிப்பது மட்டுமல்ல; மின்னாற்றலையும் 20 சதவீதம் அளவுக்குச் சேமிக்கவும் இவை உதவுகின்றன. வீட்டின் மின் சாதனங்களை நாம் ஸ்மார்ட் ப்ளக்கில் செருகிப் பயன்படுத்தினால் தேவையில்லாமல் ஒரு கணப் பொழுதில்கூட அவை இயங்காமல் பார்த்துக்கொள்ளலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் நாம் சேமிக்கும் சிறு சிறு மின்சாரத்தின் அளவும் மின்னாற்றல் சேமிப்பில் நமக்குப் பெருமளவுக்குக் கைகொடுக்கும்.
சந்தைகளில் பலவகையான ஸ்மார்ட் ப்ளக்குகள் விலைக்குக் கிடைக்கின்றன. ஆயிரம் ரூபாயிலிருந்தே இவை கிடைக்கின்றன. நமது பயன்பாட்டைப் பொருத்து நமக்கு எது தேவையோ அதை வாங்கி வைத்துக்கொண்டால் போதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT