Published : 17 Feb 2018 10:44 AM
Last Updated : 17 Feb 2018 10:44 AM
ம
னிதன் கண்டுபிடித்ததில் சிறந்த பத்தைக் கூறுக என்றால் நிச்சயமாகக் கண்ணாடிக்கு அதில் ஒரு இடம் இருக்கும். உண்மையிலே நாம் இருக்கும் இந்தக் காலத்திலும் சரி வருங்காலத்திலும் சரி அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாம் மாறுகிறோமோ இல்லையோ நிச்சயம் இந்தக் கண்ணாடிகள் தன்னை மெருகேற்றிக்கொண்டும், தன்னை முன்னிருத்திக்கொண்டும் நம்மோடு பயணிக்கத் தயாராகிவிடும்.
இந்தக் கண்ணாடிகள்தாம் வருங்காலக் கட்டிடக் கலையில் கோலோச்சப் போகின்றன. சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு மெல்லக் குறைந்துவிடும் எனக் கட்டுமானத் துறை வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கட்டுமானப் பொருட்கள் இருக்கும் இடத்தில் கண்ணாடிகள் வந்துவிடும்.
மணல், செங்கல் போன்ற பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து, அதன் விலைகளும் அதிகமாகி நாம் அணுக முடியாத அளவுக்குச் சென்றுவிடக் கூடும். அப்போது கண்ணாடி வைத்துச் சுவர் எழுப்பும் நிலை உருவாகும் என்பது அத்துறை வல்லுநர்களின் கணிப்பு.
இந்தக் கண்ணாடிகளில் பல வகை உள்ளன. மிதவைக் கண்ணாடி (Float glass), சாயம் பூசிய கண்ணாடிகள் (Coated gIass) ஆகியவை முதல் இரண்டு வகை.
1.மிதவைக் கண்ணாடி
மிதவைக் கண்ணாடி என்பது உருகிய நிலையில் கிடைக்கும் மூலப் பொருட்களை ஒரு சாய்தள உருகிய உலோகத்தில் (tin Bath) உருகவிட்டுப் பிறகு அதைப் படிப்படியாகக் குளிராக்கி இவ்வகைக் கண்ணாடிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும், இந்த வகைக் கண்ணாடிகள்தாம் எல்லா வகைக் கண்ணாடிக்கும் அடிப்படை. அதனால் இது Base glass என்றும் அழைக்கப்படுகிறது.
ஜன்னல்கள் அமைக்க இந்த வகைக் கண்ணாடிகள் பயன்படுகின்றன. இந்த வகையில் 2 மி.மீட்டரிலிருந்து 12 மி.மீட்டர் வரை கனம் கொண்ட மிதவைக் கண்ணாடிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இந்தக் கண்ணாடிகள் 2.5 மீட்டர் அகலம் 5 மீட்டர் நீளம் என்னும் அளவில் கிடைக்கும்.
2. சாயம் பூசிய கண்ணாடிகள்
கண்ணாடிகளின் ராஜா என்றால் இவற்றைக் கூறலாம். ஏன் என்றால் இந்தக் கண்ணாடியைக் கொண்டு உள்புறம் இருக்கும் பொருள் வெளியில் இருப்பவருக்குத் தெரியாமல் செய்வது, வெளிப் பகுதி உள் பகுதிக்குத் தெரியாமல் செய்வது போன்ற பல வித்தைகளைச் செய்யலாம். மிதவைக் கண்ணாடிகள் கொண்டுதான் இந்தக் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணாடி மீது மெல்லிய அளவுகளில் பல அடுக்குகளாக வெள்ளி, அலுமினியம் ஆக்ஸைடு, டைட்டானியம், ஆக்ஸிஜன், ஆர்கான் போன்ற பல வகையான வாயுக்களை ஒன்றன் மீது ஒன்றாகப் படிய வைப்பதன் மூலமாகச் சாயம் பூசிய கண்ணாடிகள் கிடைக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT