Published : 24 Feb 2018 10:49 AM
Last Updated : 24 Feb 2018 10:49 AM
இ
ப்போதெல்லாம் எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றிக் குளித்தாலும் நமக்குக் குளித்த மாதிரியே இருப்பதில்லை. சோப் தேய்த்தால் நுரை வருவதில்லை. சாம்பூ போட்டால் நுரை வருவதில்லை. துணிதுவைத்தால் நுரை வருவதில்லை. எப்போதும் இப்படித்தானே இருக்கிறது, இதுதானே இயல்பு என்று கேட்கும் அளவுக்கு இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல தண்ணீரின் இயல்பே தெரியாமல் வளர்ந்திருக்கின்றனர்.
அவர்கள் ஆற்றிலோ அருவியிலோ குளிக்கும்போது நல்ல தண்ணீரின் காரணமாக உடலைவிட்டுப் பிரிய மறுக்கும் வழுவழுப்பான தன்மையைக்கூடக் குறையாக எண்ணுகின்றனர். இளம்வயதிலேயே தலைமுடி கொட்டுதல் குழந்தைப் பருவத்திலேயே சருமப் பிரச்சினைகள் ஆகியவை இப்போது பெரும் தலைவலியாக உருவெடுத்து உள்ளன. இதற்குத் தீர்வாக இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் தண்ணீர்ச் சீரமைப்பான் அந்தத் தலைவலியைப் போக்குவதாக உள்ளது.
தண்ணீர்ச் சீரமைப்பான்
இது ஒரு அங்குல விட்டமும் நான்கு அங்குல நீளமும் கொண்ட ஒரு வடிப்பான். இது நான்குகட்ட வடிநிலையைத் தன்னுள் கொண்டிருக்கிறது. முதற்கட்ட வடிநிலையில் அது துர்நாற்றத்தை விலக்கும்.
இரண்டாம் கட்ட வடிநிலையில் அது தண்ணீரின் கடினத்தன்மைக்குக் காரணமான குளோரினை அகற்றும் மூன்றாம்கட்ட வடிநிலையில் அது தண்ணீரின் கடினத்தன்மைக்கு காரணமான உப்புகளையும் நீக்கும். நான்காம்கட்ட வடிநிலையில் அது தண்ணீரில் இருக்கும் அழுக்கு மற்றும் கசடுகளை அகற்றும்.
இது DIY (Do it yourself) வகையைச் சார்ந்த சாதனம் என்பதால் இந்தச் சாதனத்தை நாமே நிறுவிக் கொள்ளலாம். இதை நிறுவுவதற்கு மூன்று நிமிடங்கள் போதும். இதனை சலவை இயந்திரத்துடனோ பூத்துவாலைக் குழாயுடனோ தண்ணீர்க் குழாயுடனோ நேரடியாக இணைக்கலாம்.
இந்த வடிப்பான்களின் செயல்பாட்டுக்கு அதன் தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு வருட உத்தரவாதம் வழங்குகின்றன. எனவே, இதன் செயல்பாடுகள் குறித்து நாம் அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை.
இதன் செயல்பாடும் விலையும் அது உபயோகப்படுத்தும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். சலவை இயந்திரத்துடன் இணைக்கப்படும் சீரமைப்பானின் விலை ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு ஆகும். தண்ணீர் குழாயுடன் இணைக்கப்படுவதன் விலை ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆகும். பூத்துவாலைக் குழாயுடன் இணைக்கப்படுவதன் விலை ரூபாய் மூவாயிரத்து ஐந்நூறு ஆகும்.
குறைந்த விலையில் நிறையப் பயன்
நிலத்தடி நீர்தான் பெரும்பாலான மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்கிறது. ஆனால், அந்த நிலத்தடி நீரை எந்தக் கட்டுப்பாடுமின்றி உறிஞ்சித் தள்ளுவதால் இருபது அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர் இப்போதெல்லாம் இருநூறு அடிக்குக் கீழ்தான் கிடைக்கும் என்னும் நிலை உருவாகியுள்ளது. குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறதோ இல்லையோ உப்பும் அழுக்கும் கண்டிப்பாக வருகிறது. நல்ல தண்ணீரில் குளிப்பது என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
தண்ணீர் பக்கெட்கள் எல்லாம் கறை படிந்து தொல் காலத்து பொருள் போன்று காட்சி அளிக்கின்றன. தண்ணீர் பூத்துவாலைக் குழாய்கள் எல்லாம் துளைகள் அடைபட்டு பயன்பாட்டை இழந்து வெறும் காட்சிப்பொருளாக இருக்கும் நிலை பெரும்பாலான வீடுகளில் உள்ளது. தண்ணீரின் இந்தக் கடினத் தன்மை வீட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் தலைவலியாகவே உள்ளது. இந்தத் தலைவலிக்கு நிவாரணியாகச் சந்தையில் கிடைக்கும் தண்ணீர்ச் சீரமைப்பானின் விலை மிகக் குறைவுதான். ஆனால், அது நமக்கு அளிக்கும் நன்மைகள் வியப்பூட்டும்வண்ணம் அதிகமாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT