Last Updated : 21 Oct, 2017 10:15 AM

 

Published : 21 Oct 2017 10:15 AM
Last Updated : 21 Oct 2017 10:15 AM

பொருள் புதிது 05: சொல்லுக்குப் பணியும் சாதனங்கள்

செ

யற்கை அறிவு கொண்ட சிறந்த குரல் வழி உதவியாளர்களை (voice assistants) உருவாக்குவதில்தான் இப்போது பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், கூகுள் இந்த விஷயத்தில் அனுபவம் மிக்க நிறுவனம். பல வருடங்களாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள அதனுடைய குரல் வழி தேடல் சேவை மற்றும் கூகுள் நவ் (Google Now) போன்றவை கூகுளின் திறனுக்கு சான்றுகளாக உள்ளன. அதன் நீட்சியாக அது இப்போது கூகுள் ஹோம் என்ற ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் ஹோம் என்றால் என்ன?

கூகுள் ஹோம் என்பது வைஃபை மூலம் இணைக்கப்பட்ட ஒரு ஸ்பீக்கர். இதை நமது குரல் மூலம் கட்டுப்படுத்த முடியும். இது நாம் கேட்க விரும்பும் பாடல்களைப் பாடும்; நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும். மேலும், இது நம் குரல் வழி உத்தரவுக்கு ஏற்றபடி வீட்டில் உள்ள மற்ற மின்னணுச் சாதனங்களை இயக்கும்.

ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் கூகுள் குரல் வழிச் சேவைதான் இதன் உள்ளும் இருக்கிறது. ஆனால், அதன் திறன் இதனுள் சற்று அதிகமாக உள்ளது. கைப்பேசியில் இருக்கும் குரல் வழிச் சேவை நாம் தேடுவதை அதன் திரையில் நமக்குக் காட்டும். கூகுள் ஹோம் நமக்கு அதை வாசித்துக் காட்டும்.

கூகுள் ஹோமுக்கு நாம் தொடுவதை உணரும் திறன் இருக்கிறது. அதன் மேற்புறம் உள்ள இரு துளைகளில் மைக்ரோபோன்கள் உள்ளன. மேற்புறத்தை மெதுவாகத் தட்டினால் அது பாடுவதை நிறுத்தும் அல்லது செய்து கொண்டிருக்கும் செயலை நிறுத்தும். மேற்புறத்தில் விரலால் வட்ட வடிவமாகச் சுற்றினால் அது ஸ்பீக்கரின் ஒலி அளவை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.

shutterstock_103792316

கூகுள் ஹோமின் கீழ் பாகத்தில் மூன்று ஸ்பீக்கர்கள் உள்ளன. ஒரு ஸ்பீக்கர் முன்பக்கம் பார்த்துபடி உள்ளது. மற்ற இரு ஸ்பீக்கர்களும் இடது மற்றும் வலது பக்கம் பார்த்தபடி இருக்கின்றன. இதில் வெளிப்படுவது 360-டிகிரி ஒலி வடிவம் கிடையாது. ஆனால், வெளிப்படும் ஒலி அதிக சக்தி வாய்ந்தது. இதன் கீழ் பாகத்துக்குப் பல வண்ணங்களில் உறை கிடைக்கிறது. இருந்தாலும் அதனுடைய எளிமையான வெள்ளை மற்றும் சாம்பல் நிற உறை தான் பார்ப்பதற்கு அழகாக உள்ளது.

இதை வீட்டில் நிறுவுவது மிகவும் எளிது. நமது ஆண்ட்ராய்டு கைப்பேசியில் கூகுள் ஹோம் செயலியைத் தரவிறக்கம் செய்து அதில் நமது கூகுள் கணக்கைக் கொண்டு உள்நுழைய வேண்டும். பின் அதில் நமது விருப்புகள் மற்றும் வேண்டிய சேவைகளைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான் இனி இந்த கூகுள் ஹோம் நமது உத்தரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

கூகுள் ஹோம் எப்படி வேலை செய்கின்றது?

கூகுள் ஹோமில் இரு மைக்குகள் (mic) உண்டு. நாம் ஓகே கூகுள் அல்லது ஹே கூகுள் என்று சொன்னவுடன் அது விழித்துக்கொண்டு அடுத்து வரப்போகும் உத்தரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கும். இணையத் தொடர்பு இருக்கும்வரை அது நாம் கேட்டதற்கு எல்லாம் உடனுக்கு உடன் பதில் அளிக்கும். இணைய வசதி இல்லை என்றால் இது வேலை செய்யாது.

கூகுள் ஹோம் என்னவெல்லாம் செய்யும்?

கூகுள் ஹோம் ஒரு குரல் உதவியாளர்தான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது நாம் கேட்க விரும்பும் பாடல்களைப் பாடும். என்ன பாடல்களை எப்போது பாட வேண்டும் என்று ஒரு அட்டவணை போட்டு இதற்குக் கொடுத்தால், அதன்படி கூகுள் ஹோம் பாடல்களை ஒலி பரப்பும். மேலும். க்ரோம் காஸ்ட் மூலம் யு ட்யுப் (youtube) அல்லது மற்ற செயலிகளில் உள்ள காணொளியையும் நாம் கேட்கலாம். ஆம், இதில் கேட்க மட்டும்தான் முடியும், பார்க்க முடியாது.

இது தவிர, நம் கூகுள் கணக்குடன் இணைந்திருப்பதால், இது கூகுள் காலண்டர், கூகுள் மேப் மற்றும் இதர கூகுள் சேவைகளைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். தினமும் நமக்கு இருக்கும் முக்கிய வேலைகள், வானிலை முன்றிவிப்பு நாம் அலுவுலகம் செல்லும் பாதையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கும். இது தவிர தினமும் காலையில் நமக்கு அன்றைய தலைப்புச் செய்திகளை வாசித்துக் காட்டும். அது தவிர நாம் உபயோகப்படுத்தும் அலாரம் போன்ற சேவைகளையும் இது பார்த்துக்கொள்ளும்.

நமது கேள்விக்குப் பதில் சொல்லும் திறன்தான் இதன் சிறப்பம்சம். அருகில் இருக்கும் உணவு விடுதிகள் அல்லது சூப்பர் மார்க்கெட் அல்லது வணிக வளாகம் அல்லது திரையரங்கம் என எதைப் பற்றிக் கேட்டாலும் இது நமக்கு விடை அளிக்கும். நம் குழந்தைகள் படிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களையும் இது உடனுக்குடன் தீர்த்துவைக்கும்.

ஹே கூகுள், லைட் ஆன்

இதைக்கொண்டு நம் வீட்டில் உள்ள மற்ற ஸ்மார்ட் உபகரணங்களை இயக்கலாம். முக்கியமாக நெஸ்ட் ஸ்மார்ட் தெர்மோஸ்டாட், பிலிப்ஸ் ஹ்யு மற்றும் சாம்சங் ஸ்மார்ட் திங்க்ஸ் ஹப் போன்றவற்றை இதனுடன் எளிதில் இணைத்துக்கொள்ளலாம். கிச்சன் லைட்டைப் போடு என்றால் கிச்சன் லைட் எரியும். மின் விசிறியைப் போடச் சொன்னால் அடுத்த நொடியே மின் விசிறி சுழல ஆரம்பிக்கும். ஹீட்டரோ ஏசியோ எதுவானாலும் சொன்னவுடன் இயங்க ஆரம்பிக்கும்.

விலை

கூகுள் ஹோமின் விலை ரூபாய் 10,000. அதன் வெள்ளை வண்ண அடிப்பாகத்தின் விலை ரூபாய் 1,500.

சில குறைகள் இருந்தாலும் கூகுள் ஹோம் ஒரு தொழில்நுட்ப விந்தையே. இது நாம் சொல்வதை மட்டும் செய்வதில்லை. அதற்கும் மேலாக இது சிந்திக்கும் திறனையும் பெற்றிருக்கிறது. இதன் மூளையாக கூகுளின் கலைக்களஞ்சியம் உள்ளதால், இதன் சிந்திக்கும் திறன் பிரமிக்க வைப்பதாக உள்ளது. வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் அவர்கள் கேட்பதை அளித்து ஒரு உயிருள்ள நண்பனைப் போல் ‘ஓகே கூகுள்’ என்ற குரலோசைக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x