Published : 27 Jan 2018 10:07 AM
Last Updated : 27 Jan 2018 10:07 AM
வீட்டை அழகாக்குவதில் முக்கியமானவை அறைக்கலன்கள். வீட்டுக்கு வண்ணம் அடிப்பது மட்டுமல்ல; சரியான அறைக்கலன்களயும் தேர்வுசெய்ய வேண்டும். கட்டில், மேஜை, சோஃபா போன்ற அறைக்கலன்கள்தாம் நமது வீட்டை வாழுமிடமாக மாற்றுகின்றன எனலாம். முன்பைவிட அறைக்கலன்கள் வாங்குவதில் இப்போது அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் வீட்டுக்குச் செலவழிப்பதைப் போல அறைக்கலன்களுக்கும் செலவிடும் கலாச்சாரம் இப்போது உள்ளது. இப்படிக் கணக்கு வழக்கில்லாமல் அறைக்கலன்களை வாங்கிப் போடுவதை விட்டுவிட்டு தேவையான அளவு வாங்கினால் பயனாகவும் இருக்கும்; வீட்டுக்கும் அழகு சேர்க்கும். அதுபோல நாம் வாங்கும் பொருள்கள் தரமாகவும் இருக்க வேண்டுமென்பதிலும் கவனம் வேண்டும். அறைக்கலன்கள் வாங்கும்போது சில விஷயங்களில் கவனம்கொள்ள வேண்டும். உதாரணமாக சோபா வாங்குகிறோம் என்றால் மேலோட்டமாகப் பார்த்து வாங்கக் கூடாது.
அதன் வண்ணப்பூச்சு எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றும் முற்றும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மரச் சக்கைகள் ஏதும் நீட்டிக்கொண்டிருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆணிகள் எவையும் சரிசெய்யாமல் இருக்கிறதா எனவும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல சோபாக்களுக்கு மெத்தை வாங்கும்போது, அது வீட்டு வண்ணத்துக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அது சரியாகத் தைக்கப்பட்டிருக்கிறதா எனவும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த சோபா வடிவமைப்பைப் பொறுத்துப் பல வகை உள்ளன. அவற்றுள் பிரபலமானவை, உருளைக் கைப்பிடி சோபா, ஒட்டகத் திமில் சோபா, இருவர் இருக்கை சோபா, செஸ்டர்பீல்டு சோபா ஆகியவை.
உருளைக் கைப்பிடி சோபா
இந்த வடிவ சோபா முதன்முதலில் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டதால் இதை இங்கிலாந்து உருளைக் கைப்பிடி சோபா என்றும் அழைப்பதுண்டு. சோபாவின் இருபக்கங்களிலும் உள்ள கைப்பிடி உருளை வடிவத்தில் இருக்கும். மேலும் மெத்தைகள் நெருக்கமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை சோபாக்களின் கால்கள் வளைந்த வடிவம் கொண்டதாக இருக்கும். இங்கிலாந்தில் இந்த வகை சோபாக்கள் உருவாக்கப்பட்டன. இதை ராணி ஆன்னே அறைக்கலன்களின் வடிவங்களில் ஒன்றாகச் சொல்வார்கள். மிருகங்களின் கால்கள்போல இந்த வகை அறைக்கலன்கள் உருவாக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரு ராஜ கம்பீரம் இருக்கும்.
ஒட்டகத் திமில் சோபா
ஒட்டக திமில் சோபாவைப் பெயரை வைத்தே புரிந்துகொள்ள முடியும். இந்த வகை சோபாக்களின் நடுப்பகுதி ஒட்டகத்தின் திமில் போல் இருக்கும்.
இருவர் இருக்கை சோபா
இந்த வகை சோபா இருவர் மட்டும் அமரும் வகையில் உருவாக்கப்பட்டது. இதுவும் இங்கிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட வடிவம் ஆகும். இந்த வகை சோபாவை நீண்ட நாற்காலி எனச் சொல்லலாம். கால் நீட்டி உட்காரும்படியான இந்த சோபாவின் ஒரு பகுதியில் மட்டும் சாய்ந்துகொள்ள முதுகுப் பகுதி இருக்கும்.
செஸ்டர்பீல்டு சோபா
செஸ்டர்பீல்டு இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரம். இந்த வடிவம் முதன்முதலில் இந்த நகரத்தில் உருவாக்கப்பட்டதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. மரத்தால் உருவாக்கப்பட்ட இந்த சோபாவின் மெத்தை தோலால் தைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT