Published : 09 Dec 2017 11:19 AM
Last Updated : 09 Dec 2017 11:19 AM
இ
யந்திரங்கள் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சங்களாகிவிட்டன. முதலில் தொழிற்சாலைகளை மட்டும் ஆக்கிரமித்த இயந்திரங்கள் இன்று நம் வீட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன. நம் வீட்டின் அன்றாட வேலைகளைச் சுலபமாக்க இவை உதவுகின்றன. இவற்றில் ஒன்று நம் வீட்டைத் தானே சுத்தம் செய்யும் ரோபோட் வாக்யூம் கிளினர்.
வாக்யூம் கிளீனரின் வரலாறு
1996-ம் ஆண்டு ஜேம்ஸ் டைசன் என்பவர் வாக்யூம் கிளினரைக் கண்டுபிடித்தார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரோலக்ஸ் எனும் நிறுவனம் அவரிடமிருந்து அதன் உரிமையைப் பெற்றுச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. அப்போது பிபிசி தொலைக்காட்சியின் நாளைய உலகம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் கோலாகலமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பின் 2001-ம் ஆண்டு டைசன் எனும் பிரிட்டிஷ் நிறுவனம் DC06 எனும் தானே இயங்கும் வாக்யூம் கிளீனரைக் வெற்றிகரமாக உருவாக்கியது. அதிகமான உற்பத்திச் செலவு காரணமாகச் சந்தையில் அப்போது இது அறிமுகப்படுத்தப்படவில்லை. உற்பத்திச் செலவைத் தொழில்நுட்ப வளர்ச்சி இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் பல நிறுவனங்கள் இன்று இதைத் தயாரிக்கின்றன. நமக்கு அவை சந்தையில் கையடக்க விலையிலும் கிடைக்கின்றன.
ரோபோட் வாக்யூம் கிளீனர்
இது நம் வீட்டின் தரையைச் சுத்தம் செய்யும் ஒரு கருவி. இது தன்னகத்தே கணினியைக் கொண்டுள்ளது. இது வீட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து செல்லும் வல்லமை கொண்டது. இது தூசிகளையும் குப்பைகளையும் உறிஞ்சி எடுத்து நம் வீட்டின் தரையைச் சுத்தமாக்கும். நம்மால் குனிந்து சென்று சுத்தம் செய்ய முடியாத இடத்தில்கூட இது எளிதில் புகுந்து சுத்தம் செய்து விடும். உதாரணத்துக்குக் கட்டில், சோபா, மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றின் அடியில் புகுந்து சுத்தம் செய்வது.
எப்படி வேலை செய்கின்றன
இது எடை பார்க்கும் கருவியின் தோற்றத்தையும் வடிவத்தையும் ஒத்திருக்கும். இந்த வகை வாக்யூம் கிளீனர், காமிராவைக் கொண்டு நம் வீட்டைப் பார்ப்பதில்லை. அது தன்னில் இருக்கும் நான்கு வகையான சென்சார்களைக் கொண்டு நம் வீட்டை உணரவும் அளக்கவும் செய்கின்றன. நகர்வைத் தடுக்கும் சுவர், நாற்காலி கால்கள், தூண்கள் ஆகியவற்றை பம்ப் சென்சார் உணர்ந்து தகவல் அளிக்கும். தரையில் இருக்கும் மேடு பள்ளங்களை, படிகள் போன்றவற்றை கிளிப் சென்சார் உணர்ந்து தகவல் அளிக்கும். சுவருக்கும் அறைக்குமான இடைவெளியை உணர்ந்து தகவல் அளிப்பது வால் சென்சாரின் வேலை.
இதில் உள்ள கணினி செயற்கை நுண்ணறிவைக் கொண்டதாகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் உள்ளது. சென்சார்கள் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கருவி நம் வீட்டின் வடிவத்தையும் அளவையும் உள்வாங்கிக்கொள்கிறது. பின் அந்த வடிவ, அளவின் அடிப்படையில் இந்தக் கருவி தனது நடமாட்டத்தை அமைத்துக்கொள்ளும். இதில் மூன்று சக்கரங்கள் உள்ளன. முன்னால் இருக்கும் சிறு சக்கரம் செல்லும் திசையை மாற்றியமைக்க உதவும். நடுவில் இருபுறங்களிலும் இருக்கும் இரண்டு சக்கரங்கள் அது முன்னும் பின்னும் செல்ல உதவும். அதன் அடியில் உள்ள சுழலும் பிரஷ்களைக் கொண்ட ஆற்றல் வாய்ந்த உறிஞ்சி உள்ளது. எனவே, இந்த வாக்யூம் கிளீனர் நகரும்போது தூசிகளையும் குப்பைகளையும் தன்னுள் உறிஞ்சிக் கொள்கிறது.
எப்படி இயக்குவது?
இதை இயக்குவது மிகவும் எளிது. அதில் இருக்கும் பாட்டரியை சார்ஜ் செய்தால் போதும். அதன் பிறகு அது தானே இயங்கும். சில வகை வாக்யூம் கிளீனர்கள் வலது, இடது, முன், பின் என்று ஒரே நேர்கோட்டில் இயங்கும். சிலவகைகள் ஒழுங்குமுறையின்றி அங்கும் இங்கும் நகர்ந்து வீடு முழுவதையும் சுத்தம் செய்யும்.
இதன் விலை
தானே இயங்கும் வாக்யூம் கிளீனர்கள் எட்டாயிரம் முதல் எழுபதாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. ரூம்பா 980, டைசன் 360 ஐ, ரோபா வாக், பைலட் மாக்ஸ் ரோபோடிக் வாக்யூம் கிளீனர், நியடோ போட்வாக், விலிடா கிளீனிங் ரோபோட், ஹூவர் ரோபோ, சாம்சங் ரோபோட் வாக்யூம் என்பன போன்று பல தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன, இவற்றில் ரூம்பா 980ஐத் தயாரிக்கும் ஐரோபொட் நிறுவனம் தான் இந்த வகை வாக்யூம் கிளீனர் தயாரிப்பின் முன்னோடி ஆகும். ரூம்பா என்னும் பெயரில் சந்தையில் கிடைக்கும் அதன் தயாரிப்புகள் திறனுக்கும் செயல்பாட்டுக்கும் நம்பகத் தன்மைக்கும் பெயர்பெற்றவை.
இயந்திரம் நமது தோழன்
இயந்திரங்களைப் பயந்து வெறுத்து ஒதுக்கிய காலம் ஒன்று இருந்தது. 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நெசவுத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய லூடிட் என்னும் அமைப்பு இயந்திரங்கள் தங்கள் வேலையைத் திருடுவதாகக் கருதி இயந்திரங்களை எல்லாம் அடித்து உடைத்தனர். அவர்களின் அந்தப் போராட்டம் காட்டுத் தீ போன்று ஐரோப்பியா முழுவதும் பரவியது. அது நடந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்று இயந்திரங்கள் இல்லாத வாழ்வு என்பது முற்றிலும் சாத்தியமற்றது. ஒரு தோழனைப் போல் நமக்குப் பல வழிகளில் அது உதவுகிறது. முக்கியமாக அலுப்படைய வைக்கும் அன்றாட வேலைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது. முன்பு பயந்து வெறுத்த ஒன்றை இன்று விரும்பி ஏற்க ஆரம்பித்துவிட்டோம். மேலும், அவ்வாறு ஏற்பதைத் தவிர நமக்கு வேறு வழியுமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT