Published : 04 Nov 2017 10:11 AM
Last Updated : 04 Nov 2017 10:11 AM

மனை வாங்கி வீடு கட்டலாமா?

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். ஆனால் கட்டிய வீட்டை வாங்குவதா, மனை வாங்கி வீடு கட்டலாமா என்பதில் குழப்பம் வரும். வீடு வாங்குவதில் பல சாதகங்கள் இருக்கின்றன. ஆனால், சென்னை போன்ற பெரு நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு மட்டுமே சாத்தியம். அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சரி, மனை வாங்கி வீடு கட்டினால் நம் சவுகர்யத்துக்கு வீடு கட்டிக் கொள்ளலாம். அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களைப் பார்ப்போம்.

மனை வாங்குவதில் உள்ள சாதகங்கள்

மனை வாங்குவதில் சில அனுகூலங்கள் உள்ளன. நம் வசதிக்கு ஏற்பச் சிறியதாகவோ பெரியதாகவோ அதில் கட்டிடம் கட்டிக்கொள்ளலாம். எதிர்காலத்தில் சூழ்நிலையைப் பொருத்து வீட்டை விரிவாக்கலாம். அத்துடன் மனதுக்குப் பிடித்த வடிவத்தில், பட்ஜெட்டுக்கு ஏற்ப வீட்டைக் கட்டும் சுதந்திரம் நமக்கு உண்டு. சொந்த மனை என்பதால் நம் கனவுத் தோட்டத்தையும் வீட்டு மனையில் உருவாக்கலாம். மேலும், நம் மனையில் என்னென்ன செய்து பார்க்க விரும்புகிறோமோ அதை எந்தத் தடையும் இன்றி நிறைவேற்றலாம்.வீட்டுமனையில் சில இடங்களை வாடகைக்கு விட்டு வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம். மனை உள்ள பகுதியின் தன்மைக்கேற்ப கடைகள் மற்றும் வணிக வளாகங்களையும் கட்டலாம்.

மனை வாங்குவதில் உள்ள பாதகங்கள்

ஒரு வீட்டு மனையை வாங்கும்போது, சட்டரீதியாகப் பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். நில உரிமை தொடர்பான பத்திரம் தெளிவாகவும், வில்லங்கம் இல்லாமலும் இருத்தல் அவசியம். தாய்ப் பத்திரம் வில்லங்கம் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். நீங்கள் வாங்கப்போகும் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றனவா என்பதையும் விசாரிக்க வேண்டியது அவசியம். வாங்கப்போகும் மனையின் லே அவுட்டில் வழியும், சாலையும் ஒதுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். மனை எந்த மண்டலத்தில் வருகிறது என்பதையும் பரிசீலிப்பது அவசியம். வர்த்தக மண்டலப் பகுதிக்கு உட்பட்டதெனில் அதைக் குடியிருப்பாகப் பயன்படுத்த முடியாது. நாம் வாங்கப்போகும் நிலத்தைப் பொதுத் தேவைகளுக்காக அரசு ஆர்ஜிதம் செய்ய ஆலோசித்து வருகிறதா என்பதையும் நன்றாக அலசி ஆராய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x