Last Updated : 17 Dec, 2016 04:50 PM

 

Published : 17 Dec 2016 04:50 PM
Last Updated : 17 Dec 2016 04:50 PM

முகம் நூறு: குதிரைகள் கற்றுத்தரும் பாடம்

குதிரை என்றதுமே பலருக்கும் அதன் மீது சவாரி செய்யும் போர் வீரர்களின் நினைவுதான் எழும். ஆனால் முன்னங்கால்களைத் தூக்கியபடி யாருக்கும் அடங்காமல் துள்ளித் திரியும் குதிரையை லாகவமாக அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் ஜாக்குலின். அந்தக் காட்சியைப் பார்க்கிற யாரும் ஒரு கணம் அசந்து போவது உறுதி. செழுமையும் உறுதியும் கொண்ட குதிரைகள் பாய்ந்து ஓடிவருகிற போது, அந்தப் பசிய மைதானத்தின் கம்பீரம் கூடிவிடுகிறது. ஆரோவில்லின் அற்புதங்களில் இந்தக் குதிரை சவாரி பள்ளியும் ஒன்று. இந்தப் பள்ளியை நிர்வகிப்பவர் ஜெர்மன் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட ஜாக்குலின்.

தற்காலத்தில் குதிரையேற்றம் ஒலிம்பிக் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு, பல நாடுகளில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் குதிரையேற்றப் போட்டி நடக்கும் சூழலில் சர்வதேச நகரான ஆரோவில்லில் தென்னிந்திய குதிரையேற்றப் போட்டியை ஜாக்குலின் நடத்திவருகிறார்.

குதிரைகளைப் பராமரித்தபடியே பேசினார் ஜாக்குலின்.

“நான் சிறுமியாக இருந்தபோதே எனக்குக் குதிரைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் ஒரு குதிரைக்குச் சொந்தக்காரியாக மாறும் அளவுக்கு அப்போது என்னிடம் பணம் இல்லை” என்று சொல்லும் ஜாக்குலினின் கனவு பல ஆண்டுகளுக்குப் பிறகு நனவானது. அற்புத குதிரைகள் அவருக்குக் கிடைக்கத் தொடங்கின. “சென்னையில் 99-ம் ஆண்டு நடந்த இளையோர் தேசிய குதிரை சவாரி நிகழ்வைப் பார்த்த பிறகுதான் ஆரோவில்லில் குதிரையேற்றப் பயிற்சி பள்ளியைத் தொடங்குவதற்கான உத்வேகம் கிடைத்தது. நம் உடல்மொழி, சைகை, கால் அழுத்தம் ஆகியவற்றின் மூலம் நம் தேவையை குதிரைகளுக்கு உணர்த்தலாம்” என்று சொல்லும் ஜாக்குலின், குதிரைகள் பற்றி நன்கு புரிதல் இருந்தால் மட்டுமே குதிரையேற்றம் சாத்தியம் என்கிறார்.

“குதிரைக்கும் அதில் சவாரி செய்கிறவருக்கும் இடையிலான பிணைப்பு முக்கியம். ஆரம்பத்தில் என்னிடம் மூன்று குதிரைகள் மட்டுமே இருந்தன. அரிய வகை குதிரைகள் இரண்டு உட்பட, தற்போது இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகள் இருக்கின்றன. குதிரையேற்றம் என்பது இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை ஓட்டுவது போன்றதல்ல. அதற்கெனத் தனி பயிற்சி தேவை. போதிய பயிற்சி, அனுபவம் இல்லாமல் குதிரையில் ஏறுவது ஆபத்தானது” என்று சொல்லும் ஜாக்குலின், முயற்சி இருந்தால் குதிரையேற்றம் எளிது என்று நம்பிக்கையும் தருகிறார்.

வெளிநாட்டில் இருந்து இங்கு வந்திருந்தாலும் இந்திய மொழிகளைப் புரிந்துகொள்கிறார். இவருடைய மகள் ஆயிஷா பெயரில் ஒரு நிறுவனமும் நடத்திவருகிறார். அந்த நிறுவனத்தில் பெண்களுக்கே முன்னுரிமை தருகிறார்.

“நான் என் நிறுவனத்துக்காக டெல்லி, திருப்பூர், கான்பூர் என பல நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் ஏமாற்றப்பட்டது போன்ற உணர்வு இந்தியாவில் எனக்கு ஏற்பட்டதே இல்லை. பயணங்கள் பலவித அனுபவங்களைத் தந்துள்ளன. டெல்லி, சென்னை என ஒவ்வொரு ஊர் மக்களுக்கும் ஒவ்வொரு ரசனையுண்டு. அந்த ரசனையைச் சரியாகப் புரிந்துகொண்டால் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறலாம்” என்கிறர் ஜாக்குலின்.

தான் நல்ல நிர்வாகியாக இருக்க குதிரைகள்தான் கற்றுத் தந்தன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“குதிரையின் எடை 500 கிலோவுக்கு மேல் இருக்கும். வன்முறையாலோ, அதிக பாசத்தாலோ குதிரையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. தலைமைப் பண்பும் அன்பும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாமே வீணாகிவிடும். குதிரையைக் கையாளும் இந்த மந்திரம்தான் ஒரு நிறுவனத்தைத் திறம்பட நடத்துவதற்கும் அடிப்படை” என்கிறார் ஜாக்குலின் புன்னகைத்தபடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x