Published : 04 Dec 2016 01:06 PM
Last Updated : 04 Dec 2016 01:06 PM

வாசகர் வாசல்: வரும் ஆனால் வராது

பண மதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி நம் வாசகிகளிடம் கேட்டிருந்தோம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில அனுபவங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு…

கறுப்புப் பண விவகாரத்தினால் சில தினங்களாகவே நாங்கள் படாதபாடுபட வேண்டியிருக்கிறது. வயதானவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குக் குறைந்தது ஐந்தாயிரமாவது தேவைப்படும். அதுவும் நூறு ரூபாய்த் தாள்களாக இருந்தால்தானே வசதி! லேப் டெஸ்ட், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்றால் இந்த ரூபாய் பத்தாது. வாரத்துக்கு ஒருமுறை 24,000 ரூபாய் வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்

என்று அறிவித்ததால் வங்கிக்குச் சென்றேன். ஆனால் வங்கி மேலாளர் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்கிறார். நான் என்ன செய்வேன்? அதாவது நாம் சம்பாதித்த பணத்தை, வேண்டிய நேரத்தில் எடுக்கக்கூட முடியவில்லை. இ-வேலட் போகலாமே என்று அறிவுரை வேறு. டிசம்பர் மாதம் வரைக்கும் தானே சர்வீஸ் சார்ஜ் கிடையாது, அதற்குப் பிறகு சர்வீஸ் சார்ஜ் உண்டே என்று கேட்டால், பதில் இல்லை . பர்ஸுக்குப் பதிலாக இ - வேலட் என்கிறார் பிரதமர். பர்ஸ் கிழிந்தால் ஐம்பது ரூபாய்க்கு வாங்கலாம். மொபைல் போன் ரிப்பேர் ஆனால் 50 ரூபாய்க்குச் சரி செய்ய முடியுமா? கறுப்புப் பணத்தைப் பிடிக்கிறேன் என்று வெள்ளைப் பணம் வைத்திருப்போரைச் சிரமத்துக்குள்ளாக்கிவிட்டனர்.

கொஞ்சம்கூட மத்திய தர, அடித்தட்டு மக்களின் வருமானத்தைப் பற்றிச் சிந்திக்காமல், பே டிஎம், டிஜிட்டல் என்று முழங்குவது எந்த விதத்தில் நியாயம்? எல்லோருமே ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி உடையவர்களா என்ன? இந்தியாவில் பாதி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்தான் இருக்கிறார்கள். ஒன்றையும் யோசிக்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று முரண்டு பிடிப்பது நன்றாக இல்லை. மக்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு, நடுநிசியில் வங்கி வாசலில் நிற்க வைத்த ஒரே பிரதமர் இவர்தான்.

- வீ .ரத்னமாலா,சென்னை.

தியம் உறங்கிக்கொண்டிருந்த என்னை அழைப்பு மணி எழுப்பியது. கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்த வேலைக்கார அம்மா கதறினார். என்னவோ, ஏதோவென்று பதறிவிட்டேன். அவர் சொன்னதை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன். முந்தானையில் முடிந்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளைக் கீழே வீசிவிட்டு, மீண்டும் முகத்தில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். பிரச்சினை புரிந்தது.

அவருடைய கணவர் குடிகாரர். அவருக்குத் தெரியாமல் வீட்டு வேலை செய்து சம்பாதித்த பணத்தை எப்படியோ சேமித்துள்ளார். 1000, 500 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்ததும், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்திருக்கிறார். மகள் கல்யாணத்தின்போது கொடுப்பதாகச் சொன்ன பத்தாயிரத்தை இதுவரை கொடுக்க முடியவில்லை. அதற்காக மாதம் சிறிது, சிறிதாகச் சேர்த்து வைத்திருக்கிறார். அதற்குள் பணம் செல்லாது என்ற அறிவிப்பு வந்ததும் இடி இறங்கினாற்போல் ஆகிவிட்டது.

1000 ரூபாய்த் தாள்களும், 500 ரூபாய் தாள்களுமாக மொத்தம் 7,500 ரூபாய் இருந்தது. அவரைச் சமாதானம் செய்து, என் வங்கியில் பணத்தை மாற்றித் தருகிறேன் என்றேன். சற்று நிம்மதி அடைந்தார். வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு, மேலும் 500 ரூபாய் சேர்த்து, நான்கு புது இரண்டாயிரம் தாள்களைக் கொடுத்தேன். அவரது மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

- ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை.

னக்குத் தெரிந்த பெண் ஒருவர், தன் கணவருக்குத் தெரியாமல் 40 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார். எல்லாம் 500 ரூபாய்த் தாள்கள். அறிவிப்பு வெளியானவுடன் பதற்றமாகி, கணவரிடம் விஷயத்தைக் கூறினார். அவ்வளவுதான்! கணவர் ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார். ஏதோ பெரிய குற்றத்தைச் செய்ததுபோல, இரண்டு நாட்கள் பேசாமல் இருந்து மனைவியைத் தண்டித்தார். மேலும் இதுபோல் எத்தனை விஷயங்களை என்னிடம் மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டு, நினைத்தபோதெல்லாம் அவரைக் காயப்படுத்திவருகிறார். பணத்தை அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டார். இனி அவரிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்ப வாங்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்று புலம்பினார் அந்தப் பெண்.

எந்தக் கணவரும் இக்கட்டான நேரத்தில் வேலைக்குப் போகாத மனைவி கொடுத்து உதவிய பணத்துக்கும் பாசத்துக்கும் நன்றி கூறியது இல்லை. மாறாகத் தனக்குத் தெரியாமல் உன்னிடம் பணமா என்று கோபப்படத்தான் செய்கிறார்கள். மொய் வைக்கப் பணம் இல்லாவிட்டால், திருமணத்துக்குப் போவதையே தவிர்க்கப் பார்ப்பார்களே தவிர, பணம் கொடுத்து உதவும் மனைவியைப் பாராட்ட மாட்டார்கள். பெண்கள் தங்கள் சேமிப்பில் தங்களுக்கென்று செலவு செய்வதில்லை. தன் கணவர், குழந்தைகளுக்காகத்தான் சேர்த்துவைக்கிறார். இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் கிண்டல் அடிக்கும் ஆண்களைப் பற்றி என்ன சொல்வது? கணவன் கையில் தங்கள் சேமிப்பைக் கொடுக்கும்போதே அது வராப்பணம், வந்தால் நல்லதுதான் என்று தெரிந்துதான் கொடுக்கிறார் மனைவி.

- ஏ.உமாராணி, தர்மபுரி.

தோட்ட வேலை செய்யும் பாப்பாத்தி வாய் பேச இயலாதவர். 1000, 500 ரூபாய்த் தாள்கள் செல்லாத விஷயத்தை அவரிடம் சொன்னேன். பாப்பாத்திக்குத் தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு உள்ளதால், பணத்தைப் போட்டுவிட்டார். ஒருவாரம் கழித்து இரண்டு 500 ரூபாய்த் தாள்களுடன் வந்தார். சில வருடங்களுக்கு முன் ஒருவருக்குக் கடனாகத் தந்த பணத்தை, 500 ரூபாய் செல்லாது என்று அறிந்ததும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். வராத பணம் வந்த மகிழ்ச்சியில் தபால் நிலையத்துக்கு ஓடினார் பாப்பாத்தி.

- பானு பெரியதம்பி, சேலம்.

சில ஆண்டுகளுக்கு முன் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சறுக்கலில் நம் நாடு அதிகம் பாதிக்கப்படாமல் இருந்தற்கான காரணம், சேமிக்கும் பழக்கம்தான். அதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் பெண்கள். என் கணவருக்குத் திடீரென்று பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை. உடனடியாகப் பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அப்போது என் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய்தான் கை கொடுத்தது. இதை என் கணவர் இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அரசின் இந்த நடவடிக்கை ஓரளவுக்குப் பலனளிக்கும் என்றாலும் உண்மையான பதுக்கல் பணமுதலைகளைப் பிடிக்க இந்த அரசு தவறிவிட்டது, அல்லது பாதுகாக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- சீதாலக்ஷ்மி நாகராஜன், புதுச்சேரி.

னைவிகள் சேமித்து வைத்தது தங்களுக்குத் தெரியாது என்று கணவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரும்பாலான ஆண்களுக்குப் பெண்கள் சேமித்து வைக்கிறார்கள் என்ற விஷயம் நன்றாகவே தெரியும். எப்படியும் அந்தப் பணத்தை குடும்பத்துக்குதான் செலவிடுவார்கள் என்றும் தெரியும். அதனால் வந்தவரை லாபம் என்று பேசாமல் இருக்கிறார்கள். பெண்களின் சேமிப்பு ஆண்கள் நினைத்ததைவிட அதிகமாக இருந்ததால்தான் அதிர்ச்சியில் சிலம்பாட்டம் ஆடுகிறார்கள்.

என் சம்பாத்தியத்தில் பலவித சர்க்கஸ் வேலைகள் செய்து, பணத்தைச் சேமிப்பேன். குறிப்பிட்ட அளவு சேர்ந்ததும் மோதிரம் வாங்குவேன். மீதிப் பணத்தை என் கணக்கில் போடச் சொல்லிக் கணவரிடம் கொடுப்பேன். “இதையெல்லாம் ஒரு பணம்னு போடச் சொல்றியா?” என்று நக்கலடிக்காமல் அவர் சென்றதே இல்லை. இப்போது அந்தப் பணம் வளர்ந்து நிற்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார். பிரதமரின் நடவடிக்கையால் எப்படிப்பட்ட பின்விளைவுகள் ஏற்பட்டாலும் பெண்களின் சேமிப்புதான் குடும்பங்களைக் காப்பாற்றும்.

- ஜே.லூர்து, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x