Published : 25 Dec 2016 02:57 PM
Last Updated : 25 Dec 2016 02:57 PM

நெய்வேலி மகளிர் திருவிழா: கொண்டாடித் தீர்த்த வாசகிகள்

‘தி இந்து - பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பாக நடத்தப்படும் மகளிர் திருவிழா வாசகிகளின் பேராதரவுடன் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. டிசம்பர் 18-ம் தேதி நெய்வேலியில் நடந்த இந்தத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான ‘பெண் இன்று’ வாசகிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். சிந்திக்கத் தூண்டும் சிறப்புரைகள், கோலாகலப் போட்டிகள், அசத்தலான கலை நிகழ்ச்சிகள், அட்டகாசமான பரிசுகள் என்று இந்தத் திருவிழா பெண் இன்று வாசகிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது.

வரவேற்புரை ஆற்றிய தி இந்து ஆசிரியர் அசோகன், “தமிழ் இந்து நாளிதழை குடும்பங்களில் கொண்டுசேர்ப்பதும் ஆதரிப்பதும் குடும்பத் தலைவிகள்தான். பெண் இன்று படிப்பதற்கு எளிதாகக் கையடக்க வடிவில் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள். அதன் அடிப்படையில்தான் 16 பக்கங்களில் புதிய வடிவில் கொண்டுவந்துள்ளோம். ‘பெண் இன்று’ நான்கு விஷயங்களைத் தருகிறது. தோழியாக இருந்து ஆறுதல் வழங்குகிறது, பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்து நிம்மதியைத் தருகிறது, சந்தோஷத்தை உணரவைக்கிறது, வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது” என்றார்.

உங்களுக்காக ஒருநாள்


சௌமியா அன்புமணி, தலைவர் பசுமைத் தாயகம்

பெண்களுக்கு விடுமுறை கிடையாது. இந்த மகளிர் திருவிழாவில் பங்கேற்பதன் மூலம் உங்களுக்கான நேரத்தை நீங்களே பரிசளித்துக் கொண்டுள்ளீர்கள். பிறரின் மனக்குறைகளைக் கேட்பதையும் ஆறுதல் படுத்துவதையும்தான் பெண் இன்று செய்துவருகிறது. இந்த மகளிர் திருவிழாவில் பங்கேற்பதன் மூலம் பத்துப் புத்தகங்களைப் படித்த அனுபவத்தைப் பெறமுடியும். பெண்கள் கல்வியும் பொருளாதார சுதந்திரமும் பெற்றுள்ளனர். ஆனாலும் முழு இலக்கை இன்னும் அடையவில்லை. இதற்குக் காரணம் பெண்களுக்கான பாதுகாப்பை இன்னும் முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.

தமிழகத்தில் 15 முதல் 24 வயது வரையுள்ள இளம்பெண்கள் 94 லட்சம் பேர். இவர்களின் பாதுகாப்பை குடும்பம், அரசாங்கம், காவல் துறை, நீதித்துறை, சமூகம் ஆகியவை உறுதி செய்ய வேண்டும். ஒரு பெண்ணுக்குப் பாதிப்பு என்றால் மொத்தக் குடும்பமும் பாதிக்கப் படும். உடலைப் பாதுகாப்பதே பெண்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. ஒரு பெண் தவறாக உடையணிந்தால் அவளைத் தொல்லை செய்ய இந்தச் சமூகத்துக்கு யார் உரிமை கொடுத்தது? இதை எதிர்த்துக் கேட்கும் துணிவு வேண்டும். இதனை எதிர்கொள்ள வலிமையான தாய்மார்கள் தேவை.


யோகமாயா ஆச்சார்யா - எஸ்.மாதவி,

பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்
யோகமாயா ஆச்சார்யா, தலைவர், நெய்வேலி மகளிர் மன்றம்

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். என்எல்சியின் உதவியோடு பெண்களுக்குத் தேவையான சிறுதொழில் பயிற்சிகளையும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறோம். பெண்கள் முன்னேற்றம் அடைந்தால்தான் நாடு முன்னேற்றம் அடைய முடியும்.

உணவே மருந்து
எஸ்.மாதவி, கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணைஇயக்குநர்

பெண்கள் குடும்பத்தினரைப் போன்றே தங்கள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். சக்கை உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். தொற்றா நோய்கள் அதிகரித்துவருவதால் சிறுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவே மருந்து என்பதை வீட்டில் பின்பற்ற வேண்டும். 30 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை அவசியம். மனம் மகிழ்வாக இருந்தால்தான் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும். பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம்.


வனஜா - சண்முகசுந்தரம்

பெண்கள் வலிமையானவர்கள்
வனஜா, பொதுத்துறையில் பெண்கள் அமைப்பின் தலைவி

பெண்கள் காலை முதல் மாலைவரை உழைப்பிலேயே காலத்தைப் போக்கும் நிலையில்தான் உள்ளனர். பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தால், அவர்களால் எந்தத் துறையிலும் பிரகாசிக்க முடியும்.

சண்முகசுந்தரம், என்எல்சி நிதித்துறைதுணை முதன்மை மேலாளர்

பெண்கள் வலிமையானவர்கள் என்பதால்தான் அவர்களைச் சக்தி என்று குறிப்பிடுகிறோம். பெண்கள் அதிக அளவில் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவை உங்களிடம் சிறந்த எண்ணங்களை உருவாக்குவதோடு, நேர்மறைச் சிந்தனைகளையும் ஏற்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.



கலகலப்பான பேச்சரங்கம்

‘குழந்தை வளர்ப்பில் சிறந்தது இந்தக் காலமா? அந்தக் காலமா?’ என்ற தலைப்பில் கீதா சுடரொளி தலைமையில் கலகலப்பான பேச்சரங்கம் நடைபெற்றது. “அன்பு, பண்பு, விருந்தோம்பல் அந்தக் கால குழந்தை வளர்ப்பில் இருந்தது. அந்தக் காலத்தில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்தக் காலத்தில் படிப்பைக் காரணம் காட்டி, விளையாட்டை மறுத்துவிடுகின்றனர். கடலை மிட்டாய், பருப்பு உருண்டை என ஆரோக்கிய உணவுகளை வழங்கியது அந்தக் காலம். பாக்கெட் உணவுகளைக் கொடுத்து வியாதியை வளர்ப்பது இந்தக் காலம்” ஆகிய கருத்துகளை முன்வைத்து, அந்தக் காலம்தான் சிறந்தது என்று சாய்சுதாவும் விஜயாவும் தங்கள் அணிக்கு வலுசேர்த்தனர்.

“பயமிருக்கும் இடத்தில் மரியாதை இருக்கும். இந்தக் கால குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறது. தாலாட்டுப் பாடலில்கூட உறவுகளுக்குள் வன்முறைக்கு வித்திடுவது அந்தக் காலம். தலைமுறை இடைவெளி இல்லாமல், தந்தையை நண்பராகக் கருதுவதும், பாலினப் பாகுபாடில்லாமல் வளர்ப்பதும் இந்தக் காலம்” என்று சொல்லி குழந்தை வளர்ப்பில் சிறந்தது இந்தக் காலமே என்று வதனா முத்துக்குமாரும் வித்யா கென்னடியும் வாதிட்டனர்.

“அந்தக்கால ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சொல்லித்தான் இந்தக் கால குழந்தைகள் வளர்க்கப்படு கிறார்கள். அந்தக் காலம் இல்லாமல் இந்தக் காலம் இல்லை. தொழில்நுட்பத்தால் இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு சிறப்பாகவே இருக்கிறது” என்று நடுநிலையாகத் தீர்ப்பு வழங்கி, வாசகியரின் பாராட்டுகளை அள்ளினார் கீதா சுடரொளி.



அறிவே ஆயுதம்


கோமதி விஜயகுமார், விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி

பெண்களைப் பின்தொடர்தல் காலங்காலமாக நடந்து வருவதுதான். அதனைப் பெண்கள் கையாளும் விதம்தான் மாறிவருகிறது. குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் காவல் நிலையத் துக்குச் செல்லும் துணிவு பெண்களுக்கு அதிகரித்துள்ளது. அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதற்காகவே சட்டங்கள் இயற்றப்படு கின்றன. பெண்ணுக்குக் கூர்மையான ஆயுதம் அறிவுதான். அதைக்கொண்டே அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். வீட்டை விட்டு எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் முன்னேற்றத்தின் அடையாளம்.

பெண்கள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள 1091 எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுக வேண்டும். என்ன குற்றம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணையே சமுதாயம் குற்றம்சாட்டுவதால்தான் நடந்த உண்மைகளை வெளியே கூறத் தயங்குகிறார்கள். எதையும் சமாளிக்கக்கூடிய தைரியத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பெண் காவலர்களுக்குப் பணி பாதுகாப்பு எப்படி என்ற கேள்வியை எழுப்பிய லதாவுக்கு, “பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பினை உறுதி செய்ய விசாகா வழிமுறைகள் இருக்கின்றன. காவல் துறையிலும் விசாகா குழு இருக்கிறது” என்றார். கல்லூரியில் படிக்கும் மகளுக்கு சீனியர்கள் அளிக்கும் தொந்தரவைச் சமாளிப்பது எப்படி என்று கேட்ட கலையரசிக்கு, “முதலில் மகளுக்கு ஆதரவாக இருக்கவேண்டியது பெற்றோர்தான். மகளுக்கு ஆதரவாக குடும்பமே இருக்கிறது என்பதை அந்த மாணவர்கள் அறியும்படிச் செய்யுங்கள். கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவியுங்கள். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல்துறையில் புகார் அளிக்கலாம்” என்றார்.

ராங் கால் தொடர்ச்சியாக வந்தால் சமாளிப்பது எப்படி என்று கேட்ட நாகலட்சுமிக்கு, “காவல்துறையில் புகார் அளிக்கும்போது, அந்த எண்ணை டிராக் செய்து கண்டறியலாம். இதுபோன்ற புகாரில் பெண்களின் பெயர் ரகசியமாகக் காக்கப்படும். தவறு செய்பவர் முதல்கட்டமாக எச்சரிக்கப்படுவார். அப்படியும் தொடர்ந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போது மாணவராக இருந்தால், கல்வியைத் தொடர முடியாது” என்று பதிலளித்தார் கோமதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x