Last Updated : 25 Dec, 2016 02:55 PM

 

Published : 25 Dec 2016 02:55 PM
Last Updated : 25 Dec 2016 02:55 PM

சட்டமே துணை: மனைவிக்குப் பணம் தர மறுப்பதும் குற்றமே

லலிதாவின் பெற்றோருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்கள் தேடிப் பிடித்த மாப்பிள்ளை பார்த்திபன் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் பணத்தைச் செலவே செய்ய மாட்டார் என்பது மட்டும் யாருக்குமே தெரியவில்லை.

திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. லலிதாவின் தேவைகளுக்கு மாதந்தோறும் பெற்றோர்தான் பணம் கொடுத்துவருகிறார்கள். பார்த்திபனின் அம்மாவிடம் இது பற்றிப் பேசினால், “அவன் எப்பவும் இப்படித்தான். அநாவசியமா செலவே செய்ய மாட்டான். அவனுக்கு ஆயிரம் செலவு இருக்கும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?’’ என்றார்.

ஒருநாள் ஆறு மாதக் குழந்தைக்கு செரிலாக் வாங்க வேண்டும் என்றார் லலிதா.

“அதெல்லாம் வேண்டாம். வீட்டு உணவுதான் நல்லது. அரிசிக் கஞ்சி வைத்துக் கொடு” என்று பார்த்திபன் சொன்னவுடன், லலிதாவுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.

“எனக்கு நீங்க செலவு செய்யாததைக்கூட நான் பொறுத்துக்கிட்டேன். ஆனால் குழந்தையின் உணவுக்குக்கூடப் பணம் தரலைன்னா என்ன பண்றது? நாம பெத்த குழந்தைக்குக்கூட என் அப்பாதான் பணம் கொடுக்கணும்னா, அதுக்கு ஏன் குழந்தை பெத்துக்கணும்? பால் பவுடர், தடுப்பூசி, மருந்துக்கு எல்லாம் சேர்த்து மாசம் ஆயிரம் ரூபாய் கொடுத்துடுங்க” என்றார் லலிதா. பார்த்திபன் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒரு மாதத்தில் மற்றொரு பிரச்சினை. லலிதாவின் உடல் பலவீனமாக இருப்பதால், அடிக்கடி மட்டன் சூப் வைத்துச் சாப்பிடச் சொல்லியிருந்தார் மருத்துவர். காய்கறி வாங்கவே சரியாகப் பணம் தராத கணவனிடம் விஷயத்தைச் சொன்னார் லலிதா.

“சோத்தை ஒழுங்கா சாப்பிட்டால் உடம்பு பலவீனமாகுமா? எப்ப என்ன வாங்கிப் போடணும்னு எனக்குத் தெரியும்” என்று முடித்துக்கொண்டார் பார்த்திபன். அவர் அம்மாவோ, “அவன் உன்னை மாதிரி வசதியா வளர்ந்தவன் இல்லை. அதனால சிக்கனமா இருக்கான். இப்படிச் சேர்த்து வைக்கிறதெல்லாம் ஒருநாள் உனக்கும் குழந்தைக்கும்தானே வரப்போகுது? சும்மா சண்டை போடாமல், அவன் மனசு புரிஞ்சு நடந்துக்க” என்றார்.

வட்டிக்கு விடுவதும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடுகள் செய்து சம்பாதிப்பதும் பார்த்திபனின் வழக்கம். அவருக்கு ஒரு ரூபாய் என்பது நூறு ரூபாய்க்கான ஒரு மாத வட்டி.

லலிதா ஒருமுடிவுக்கு வந்தார். “இப்ப உயிரோட இருந்தால்தான் பிற்காலத்தில் சேர்த்துவைத்த பணத்தை அனுபவிக்க முடியும். அதனால் எட்டாயிரம் ரூபாயை வீட்டுச் செலவுக்குக் கொடுத்துடுங்க. இல்லைன்னா வீட்டுச் செலவுக்காக நான் வேலைக்குப் போறேன். என்னால இப்படி வாழ முடியாது” என்று உறுதியாகச் சொன்னார்.

“உன் தேவைக்குத்தான் உங்க அப்பா பணம் தர்றார். அப்புறம் பணம் பணம்னு ஏன் படுத்தி எடுக்கறே? இப்பவே என்னை மதிக்க மாட்டேங்கிற. அதனால வேலைக்கெல்லாம் போகவே கூடாது” என்று சொல்லிவிட்டு, அலுவலகம் சென்றுவிட்டார் பார்த்திபன்.

இனி பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த லலிதா, தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மகளின் சந்தோஷம்தான் தனக்கு முக்கியம் என்றும் குடும்பச் செலவு அத்தனைக்கும் தானே பணம் கொடுப்பதாகவும் லலிதாவின் அப்பா சொன்னார்.

“எவ்வளவு காலத்துக்கு உங்களால கொடுக்க முடியும்? சம்பாத்தியம் இல்லைன்னாகூட பரவாயில்லை. கை நிறைய பணம் இருந்தும் செலவுக்குக் கொடுக்கலைன்னா, அதையெல்லாம் சகிச்சிக்கிட்டு இருக்க முடியாதுப்பா” என்றார் லலிதா.

மறுநாள் வழக்கறிஞரிடம் சென்றார்கள்.

எல்லாமே கணவனின் கடமை

“இது அநியாயம். பொருளாதாரரீதியாகச் செய்யப்படும் இந்தக் கொடுமையும் ‘குடும்ப வன்முறை’தான். லலிதாவுக்கு இத்தனை காலம் நடந்தது குடும்ப வன்முறை என்பதை ஏன் யாரும் புரிந்துகொள்ளவில்லை? மனைவி, குழந்தையின் செலவுக்குப் பணம் தராமலும் அடிப்படை விஷயங்களைக்கூட கவனிக்காமலும் இருப்பது பொருளாதார ரீதியான வன்முறை என்று சட்டம் சொல்கிறது” என்றார் வழக்கறிஞர்.

இது மட்டுமல்ல, கணவன் தன் சம்பாத்தியத்தைக் குடித்துவிட்டு, குடும்பத்துக்குத் தேவையான பணம் தராவிட்டாலும் அதுவும் வன்முறைதான். தன் வீட்டுக்குள்ளேயே சமையலறைக்குப் போகக் கூடாது, படுக்கையறைக்குப் போகக் கூடாது என்று கட்டுப்பாடுகள் போடுவதும் குடும்ப வன்முறைதான். தேவைக்குப் பணம் தராமலும், தந்தாலும் மனைவி, மகளை வேலைக்குப் போகக் கூடாது என்று சொல்வதும் பொருளாதார ரீதியான வன்முறைதான். கணவன் செய்யும் கொடுமைகளால், தனியாக வீட்டில் வாழ நேரும்போது அந்த வீட்டு வாடகை தராமல் இருப்பதும் பொருளாதார வன்முறையே.

ஒரு பெண்ணின் சீர் பொருட்களையோ, அவளுடைய நகைகளையோ அவள் அனுமதியின்றி அடகு வைப்பதும் விற்பதும் பொருளாதார ரீதியான குடும்ப வன்முறைதான். வேலைக்குப் பெண்கள் போனாலும் அவள் தந்தையோ, கணவனோ சம்பளத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் பொருளாதார வன்முறைதான் என்று சட்டம் சொல்லியிருப்பதை அறிந்த பின், லலிதாவுக்குப் புது சக்தி கிடைத்தது போலிருந்தது.

இப்போது லலிதா வேலைக்குப் போகிறார். கணவன் தனக்கும் தன் குழந்தைக்கும் மாதம் எட்டாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். மாதம் ஆறாயிரம் தர வேண்டும் என்று தீர்ப்பானது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பலமுறை நேரிலும் தொலைபேசியிலும் லலிதாவுடன் சமரசத்துக்கு வந்தார் பார்த்திபன்.

தன் தவறுக்கு வருத்தமும் தெரிவித்தார். இறுதியில் தான் பெற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தன் கணவனோடு சேர்ந்துவாழ்கிறார் லலிதா. ஆனாலும் இந்த மாற்றம் வருவதற்கு இரண்டு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. லலிதாவுக்கு இந்தப் போராட்டம் எளிமையாக இல்லை, ஆனால் தீர்வு இனிமையாக இருந்தது!

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x