Published : 17 Dec 2016 04:07 PM
Last Updated : 17 Dec 2016 04:07 PM
ஆண்கள் தவறு செய்தாலும் அவர்களுக்காக வருந்துவது நம் சமூகம் மட்டுமல்ல. எங்கெல்லாம் பெண்களுக்குச் சமத்துவம் இல்லையோ அங்கெல்லாம் இப்படித்தான் ஆண் குற்றவாளிகளை ஆதரிக்கிறார்கள்.
வாணியின் கணவன் குமரேசன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை. திருமணமாகி 8 ஆண்டுகள் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சமீபத்தில் குமரேசன் நடவடிக்கைகளில் அதிர்ச்சிகரமான மாற்றம்.
தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இன்னொரு திருமணம் செய்துகொள்ள வாணி கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும் என்று நச்சரித்து வருகிறான். வாணியும் எவ்வளவோ பேசிப் பார்த்துவிட்டாள். வாணியின் குடும்பத்தினரும் சொல்லிப் பார்த்துவிட்டனர். எதுவுமே குமரேசனின் முடிவை மாற்ற முடியவில்லை.
“எனக்கு அளவுக்கு அதிகமான சம்பளம். வீடு, கார் என்று எந்தக் குறையும் உனக்கோ, குழந்தைக்கோ வைக்கவில்லை. என் விருப்பத்துக்காக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் என்ன தவறு? ’’ என்று ஆணவமாகக் கேட்டான் குமரேசன்.
“குழந்தையில் ஆண் என்ன, பெண் என்ன? ரொம்பப் பிற்போக்காகச் சிந்திக்கிறீங்க” என்ற வாணியிடம், அதற்குப் பிறகு பேசுவதையே நிறுத்திவிட்டான் குமரேசன். குழந்தையிடம் ஓர் அப்பாவாக அவன் நடந்துகொள்ளவில்லை.
12 மணிக்கு வீட்டுக்கு வரும்போது கதவு திறப்பதும், காலையில் உணவு தயாரிப்பதும், வீட்டைப் பராமரிப்பதும் வாணிக்கு அலுப்பூட்டியது. சொந்த வீட்டில் அந்நியமாக உணர ஆரம்பித்தாள்.
அன்று குமரேசன் அதிசயமாகப் பேசினான். “4 நாட்கள் வெளியூர் போறேன். அடுத்த வாரம் எனக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிடும். மாதத்துக்கு 2 நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வர முடியும். நீயும் குழந்தையும் பத்திரமாக இருந்துகொள்ளுங்கள்” என்றான்.
ஊரிலிருந்து திரும்பிய குமரேசன் மிகவும் உற்சாகமாக இருந்தான். வாணியிடமும் குழந்தையிடமும் அன்போடு சில வார்த்தைகள் பேசினான். வாணிக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு வாணியின் சித்தப்பா தொலைபேசியில் அழைத்தார்.
“போன வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நம்ம மாப்பிள்ளையை மாலையுடன் என் நண்பன் பார்த்தானாம். அவர் பக்கத்தில் ஒரு பெண் மாலையுடன் நின்றுகொண்டிருந்தாளாம். பேசும் வாய்ப்பு கிடைக்கலையாம். தகவலை உறுதிப்படுத்தாமல் எனக்குச் சொல்லி, பிரச்சினையைச் சிக்கலாக்க வேண்டாமேன்னு நினைச்சானாம். ஆனாலும் மனசு கேட்காமல் இப்போதான் சொன்னான். மாப்பிள்ளை போன வாரம் ஊரில்தானே இருந்தார்?”
வாணிக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்தது. பதில் பேசாமல் போனை வைத்தாள்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் வாணியின் அம்மா, அப்பா, சித்தப்பா எல்லோரும் வந்து சேர்ந்தார்கள்.
“இப்பவே குமரேசன்கிட்ட நாலு வார்த்தை கேட்கறோம்… கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சானா?”
“என்ன கேட்கப் போறீங்க? மனைவி நானா, அவளா என்றா? அவள்தான் தனக்குப் பிடிச்ச மனைவின்னு அவர் சொல்லிட்டா என்ன செய்வீங்க? இல்லை ரெண்டு பேருடனும் குடும்பம் நடத்தறேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?”
“என்னம்மா இப்படிக் கேட்கிற? அவனை ஜெயிலுக்கு அனுப்பினால் தான் புத்தி வரும். போலீஸ் கிட்ட அவன் திமிரெல்லாம் செல்லாது…”
“அவரை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நானும் என் மகளும் என்ன செய்வது? இந்தப் புகாரை எடுத்துக்கொண்டு, ரெண்டாவது திருமணம் செய்த குற்றத்துக்காக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மாட்டார்கள். முதல் மனைவிதான் நீதிமன்றத்துக்குச் சென்று தனிநபர் வழக்காகப் பதிவு செய்யணும். நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு 494 இ.பி.கோ. பிரிவுபடி முதல்கட்டமாக வழக்கைப் பரிசீலித்து, குற்ற வழக்காகப் பதிவு செய்யும். அப்படித் தாக்கல் செய்யும் வழக்கில், இரண்டாம் திருமணம் செய்த கணவன் மட்டுமன்றி, மணமகள், இருவர் தரப்பு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என யாரெல்லாம் குற்றம் புரிய துணையாக இருந்தார்களோ, அவர்கள் அத்தனைப் பேர் மீதும் குற்றம் சுமத்தி, இரண்டாம் திருமணத்தை நிரூபித்தால் ஒவ்வொருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்” என்று மூச்சு விடாமல் பேசினாள் வாணி.
“எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் தயங்கறே? உடனே வழக்கு போடலாம்.”
“திருமணம் சட்டத்துக்கு உட்பட்டு சம்பிரதாயப்படியோ, பதிவுத் திருமணமாகவோ முறையாக நடத்திருந்தால் மட்டுமே இந்தக் குற்றம் நிரூபணமாகும். ஒரே வீட்டில் வாழ்வதும், குழந்தை பெற்றுக்கொள்வதும்கூட இரண்டாம் திருமணத்துக்கான சான்று ஆகாது. திருமணம் என்ற நிகழ்வுக்கான சான்றுகளுடன் நிரூபித்தால்தான் இந்தக் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் தண்டனை பெற முடியும். யாரோ பார்த்ததை வைத்தெல்லாம் எதுவும் செய்ய முடியாது சித்தப்பா” என்றாள் வாணி.
“நீ கவலைப்படாதே வாணி. என் நண்பனை சாட்சியாக வைத்து நடந்த திருமணம் உண்மை என்று நிரூபிக்கலாம். வழக்குப் போடலாம்” என்று வாணியின் சித்தப்பா நம்பிக்கை அளித்தார்.
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 494 இ.பி.கோ. பிரிவின்படி வாணியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வீட்டுத் தேவைக்குப் பணம் கொடுத்துக்கொண்டிருந்த குமரேசன், பணம் தருவதை நிறுத்திவிட்டான். வாணியின் சித்தப்பாவிடம் பேச ஆள் அனுப்பினான். வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டால் வாணியையும் குழந்தையையும் தான் நல்லபடியாகப் பராமரிப்பதாகவும், மறுத்தால் தான் வேலையை விட்டுவிட்டுக் கண் காணாத இடத்துக்குப் போய்விடப்போவதாகவும் சொல்லச் சொல்லியிருந்தான்.
வாணியின் சித்தப்பா எதையும் கேட்கத் தயாராக இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டார். குமரேசன் தனக்கு வேலை போய் விட்டதாகவும், வீண் சந்தேகத்ததால் வாணி தன் மீது பொய் வழக்கு போட்டுத் தன்னையும் தனக்குத் தெரிந்த பெண்ணின் குடும்பத்தையும் அசிங்கப்படுத்திவிட்டதாகவும் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தான். அந்த வழக்கில் குமரேசன் தோற்றுப் போனான்.
மிகுந்த சிரமங்களுக்குப் பிறகு வாணி சாட்சிகளைக் கொண்டுவந்து சேர்த்தாள். வழக்கு முடிவுக்கு வந்தது. குமரேசனுக்கும் அவன் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கும், உடந்தையாக இருந்த 5 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.
குமரேசன் உடைந்து போனான். மேல்முறையீட்டில், சமாதானம் செய்துகொள்வதென முடிவு செய்யப்பட்டது.
“இப்போது அவள் என்னுடன் இல்லை. ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. என்னை மன்னித்துவிடு வாணி” என்று வருந்தினான் குமரேசன்.
“பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ அது ஆணின் விந்தணுவால் முடிவாகிறதே ஒழிய, பெண்ணின் மூலமாக முடிவாவதில்லை. இந்த விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் ஆண் என்ற அகந்தையில் நீங்க இந்தக் காரியம் செய்திருக்கீங்க. இந்தச் சமூகமும் ஆண்கள் செய்யும் இதுபோன்ற குற்றங்களைக் குற்றமாகக் கருதுவதில்லை. அதனால்தான் இதுபோன்ற செயல்களில் தைரியமாக இறங்குகிறீர்கள். இனி உங்களுடன் வாழ்வதில் அர்த்தமும் இல்லை, விருப்பமும் இல்லை” என்று உறுதியான குரலில் சொன்னாள் வாணி.
குமரேசன் எவ்வளவோ மன்றாடினான். திருந்திவிட்டதாகக் கூறினான். வாணிக்கும் குமரேசனுக்கும் விவாகரத்து கிடைத்தது. குழந்தையைப் பார்ப்பதற்கும் அவள் செலவுகளை ஏற்றுக்கொள்வதற்கும் அனுமதி வழங்கினாள் வாணி.
பெண் குழந்தைகளுக்குக் குடும்பத்தில், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் புரிய வைத்து, வலிமையான பெண்ணாக உருவாக்குவது ஒவ்வொரு பெண்ணின் கடமை.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT