Published : 17 Dec 2016 04:40 PM
Last Updated : 17 Dec 2016 04:40 PM
கர்ப்பிணிப் பெண்களின் நிறைமாத வயிறு, பிறந்த குழந்தையின் பிஞ்சு பாதங்கள், திருமணத்தின்போது இணையும் கரங்கள் என வாழ்வின் மறக்கமுடியாத சில தருணங்களைப் பதிவு செய்யும் காஸ்டிங் தொழில்நுட்பம் வெளிநாடுகளில் ஏகப் பிரபலம். வட இந்தியாவில் நிலைநாட்டிய இந்தத் தொழில்நுட்பம், தமிழகத்திலும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கீர்த்தியும் காஸ்டிங் அச்சுகளை உருவாக்கி, பரிசுப் பொருட்களாக விற்பனை செய்து வருகிறார். “எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்தப்போ, பாதங்களை அச்செடுக்கணும்னு நிறைய இணையதளங்களைத் தேடினேன். எதுவும் கிடைக்கலை. எப்படி செய்யறதுன்னு யூ-டியூபில் பார்த்து அச்செடுத்து வைத்தேன். அப்போ, என் பெரிய மகனும் என் கைகளை ஏன் அச்செடுக்கலைன்னு கேட்டான். இரண்டு பேரின் கைகளையும் அச்செடுத்தோம். வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் இதை எப்படிச் செய்தேன்னு கேட்கத் தொடங்கினாங்க. அதைத் தொடர்ந்துதான், இதையே தொழிலா செய்யலாம்னு முடிவெடுத்தேன். போன வருஷம் ஆரம்பித்து, நல்லபடியா போயிட்டிருக்கு” என்று சொன்னவர், ஆன்லைன் மூலமே தன் விற்பனையை மேற்கொண்டுவருகிறார்.
அச்செடுக்க வேண்டிய பகுதியின் மேல், மாவை உற்றி, பிரதி எடுத்து, அதனை அப்படியே மோல்டிங்காக மாற்றுவதுதான் காஸ்டிங். பிறகு வெள்ளி, செம்பு, தங்கம் என்று வாடிக்கையாளர் விரும்பும் நிறங்களை ஏற்றுகிறார். பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், ஓர் அச்சு செய்து முடிக்க ஒருவாரம் எடுத்துக்கொள்கிறார் கீர்த்தி.
“எனக்கு ஆர்டர் கிடைத்ததும் நேரடியாகச் சென்றுதான் அச்செடுத்து வருவேன். சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் கர்ப்பிணி வயிறு, குழந்தையின் பாதம், கைகள் போன்றவற்றை அச்சு எடுக்கச் சொல்வார்கள். தென் மாவட்டங்களில் பெற்றோரின் கைகளைப் பிரதி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உலகிலேயே உன்னதமான பரிசு அம்மாவின் ஆசிர்வாதம்னு சொல்லி ஒருத்தர் தன் அம்மாவோட கைகளை அச்செடுக்கணும்னு சொன்னார். நானும் அச்செடுத்து, செய்து கொடுத்தேன். அந்தப் பாட்டி தன் கை சுருக்கம், ரேகை, மோதிர அச்சு, அடிபட்ட காயத்தின் தழும்புவரை எல்லாத்தையும் நான் செய்து கொடுத்த காஸ்டிங் உருவத்தில் சரிபார்த்து என்னைப் பாராட்டினாங்க” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் கீர்த்தி. போட்டோ பிரேம்களுக்குள் வைத்து, சுவரில் மாட்டும் விதத்திலும் காஸ்டிங்குகளை இவர் செய்து தருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT