Published : 04 Dec 2016 01:07 PM
Last Updated : 04 Dec 2016 01:07 PM
பெண்ணுக்குப் பாதுகாப்பான இடம் குடும்பம் என்று நம்பப்படுகிறது. குடும்பத்தில் பெண்ணுக்கான அந்தஸ்து குறித்து சற்று சிந்திப்போம். பெண் வீட்டுக்கு நல்ல வேலைக்காரி; வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல தாதி; சமையல்காரி. அவள் குடும்ப உறுப்பினர்களுக்காகவே வாழ்கிறாள். குடும்பத்தினரின் விருப்பு வெறுப்புகளே அவளது விருப்பு வெறுப்புகள். அவளுக்கென்று தனியே ஆசைகள், கனவுகள் எதுவுமே கிடையாது. அப்படியே இருந்தாலும் அவை இரண்டாம்பட்சம்தான்.
தனக்கே தனக்கென்று ஒரு மணி நேரம்கூட ஒதுக்க முடியாத நிலைதான் இன்றும் பல பெண்களுக்கு உள்ளது. வளரிளம் பருவத்தில், தான் கண்ட கனவுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்துகொண்டிருப்பவள் பெண். இல்லாள், மனையாள், இல்லத்தரசி என்றெல்லாம் போற்றப்படும் அவளுக்கென்று வீட்டில் தனியாக ஒரு சிறு அறைகூட கிடையாது.
குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர்களுக்காக மருத்துவமனைக்கு ஓடி அலையும் அவள், தனக்கென்று மருத்துவமனை செல்வது அபூர்வம். ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் உழைக்கும் அவளை, குடும்ப உறுப்பினர்கள் மதித்துப் போற்றுவதில்லை. அதுகூடப் பரவாயில்லை, ஒரு சின்ன அங்கீகாரம்கூடக் கிடையாது.
எது பொம்பளைங்க சமாச்சாரம்?
தெருவுக்குத் தெரு உணவு விடுதிகள் பெருகினாலும் சமையலறையிலிருந்து பெண்ணுக்கு விடுதலையில்லை. ‘இது பொம்பளைங்க சமாச்சாரம்’ என்று சமையல் பெண்ணுக்கே ஆனது என்று முத்திரை குத்தும் விளம்பரங்கள் வேறு. சமைப்பது, பரிமாறுவது என்று நாளும் பொழுதும் தங்கள் திறமைகளை எல்லாம் சமையலறையிலும் வீட்டுப் பராமரிப்பிலும் செலவிடும் பெண்கள் எப்படி அறிவார்ந்த காரியங்களில் ஈடுபட முடியும்?
பாலினச் சமத்துவமின்மையின் வித்து, இப்படிக் குடும்பத்தில் முளை விட்டு, ஆழ வேரூன்றி, பின் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிளைவிட்டுப் பரவியுள்ளது. விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் என்று உருவாக வேண்டியவர்களை, வீட்டு வேலைக்குள் மூழ்கடித்து, சரிபாதியான திறமையானவர்களை இழந்துவருகிறோம்.
எப்போது வரும் சுயசார்பு?
பெண் இனத்தை அடிமைப்படுத்திய பல காரணிகளை நாம் கடந்துவிட்டோம். குழந்தைத் திருமணங்கள் இன்று ஓரளவு குறைந்துவிட்டன. பெண் கல்வி இன்று பல மடங்கு அதிகரித்துவிட்டது. இருந்தும் என்ன பயன்? முன்பு கல்வி கற்காத பெண்கள் இருந்த இடத்திலேயேதான், இன்று கல்வி கற்ற பெண்களும் சென்று சேருகிறார்கள். கல்வி கற்ற பெண்களில் எத்தனை பேர் சுயமாகச் சிந்திக்கிறார்கள்? சுயமாகச் செயல்படுகிறார்கள்? கற்ற பெண்களில் 65 சதவீதத்தினர் கணவன் உழைப்பிலேயேதான் வாழ்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களிலும் பெரும்பான்மையானோர் ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ, அலுவலகங்களில் உதவியாளர்களாகவோ, வங்கியில் காசாளர்களாகவோ வேலை செய்து, அந்த அளவிலேயே ஓய்வு பெற்று விடுகின்றனர்.
பெண்களில் உயர் அதிகாரிகளாக வருபவர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே. பெண்களிடம் திறமை யின்மையால் இந்த நிலை ஏற்படவில்லை. திருமணமான பெண்கள் ஓரிடத்தில் தங்கி, குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகத் தங்கள் திறமைகளைக் காவுகொடுத்து விடுகின்றனர். 80 சதவீதப் பெண்கள் திறமையிருந்தும் அதிகாரிகள், நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்வுகளை எழுத முன்வருவதில்லை.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவம், வழக்குரைஞர் போன்று உயர்கல்வி பயின்ற பெண்களிலும் தாங்கள் படித்த படிப்பை மறந்து, குடும்பம், குழந்தை வளர்ப்பு என்ற குறுகிய எல்லைக்குள் நின்று விடுவதைக் காண முடிகிறது. பெண்கள் உயர்கல்வி படித்துவிட்டு வீட்டுக்குள் முடங்குவதும் முடக்கப்படுவதும் எத்தனைப் பெரிய சமூகக் குற்றம்?
வீட்டுக்குள் பெண்கள் பெறும் விடுதலையே பெண் விடுதலையின் முதல்படி. அதிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல், பெண் விடுதலையை முழுமையாகப் பெற முடியும் என்று நினைப்பதும் செயல்படுவதும் விழலுக்கு இறைத்த நீர்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT