Published : 17 Dec 2016 04:25 PM
Last Updated : 17 Dec 2016 04:25 PM
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பணியிடத்திலும் பொது இடங்களிலும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திப்பவர்கள் ஏராளம். பொதுவாக ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைவிடப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் அதிகம். பொது இடங்களிலும் பணியிடத்திலும் பெண்கள் படும் அவலங்கள் வெளியில் கூடச் சொல்ல முடியாதவை. ஆனாலும் எந்தப் பிரச்சினையையும் வெளியே காட்டிக்கொள்ளாமல், அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிடுகின்றனர். பணியிடத்தில் சக ஊழியர்களாலோ மேலதிகாரிகளாலோ பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினையை அங்கேயே விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் குடும்பப் பொறுப்புகளில் மூழ்கிவிடுகின்றனர்.
ஆனால், ஆண்கள் பணியிடத்தில் தங்களுடன் பணிபுரிபவர்களாலோ மேலதிகாரிகளாலோ பிரச்சினைகள் ஏற்பட்டால், அதை வீட்டில் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் வெளிக்காட்டாமல் இருப்பதில்லை. சிலர் வீட்டில் சில நாட்களுக்குக்கூடப் பேசாமல் இருப்பார்கள். என்ன காரணம் என்றுகூட மனைவிக்குச் சொல்ல மாட்டார்கள். அவருக்கு அலுவலகத்தில் ஏதோ பிரச்சினை இருக்கும் என்று மனைவியாக நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
குடிப்பழக்கம் உள்ள ஆணாக இருந்தால் வழக்கமாகக் குடிப்பதைவிட அதிகமாகக் குடித்துவிட்டு வந்து, மனைவியையும் குழந்தைகளையும் திட்டித்தீர்ப்பார்கள். என் சித்தப்பாவின் மேலதிகாரி ஒரு பெண். அவர் என் சாயலில் இருப்பார். மேலதிகாரி சித்தப்பாவை ஏதாவது கடிந்துகொண்டால், வீட்டுக்கு வந்ததும் என்னை நிற்க வைத்து சித்தப்பா திட்டிக்கொண்டிருப்பார். ஏன் என்னைத் திட்டுகிறார் என்றே எனக்குப் புரியாது.
வேறு சிலர் சாப்பாடு மீது கோபத்தைக் காட்டிவிட்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள். சிலர் அதே நினைப்பில் சரியாகத் தூங்க மாட்டார்கள். மனைவியிடம் மட்டுமன்றி, குழந்தைகளிடமும் அன்பாக நடந்துகொள்ளமாட்டார்கள். இரண்டு நாட்கள் கழித்து, “ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சினை… அதான் அப்பா அமைதியா இருந்தேன்” என்று குழந்தைகளை அமைதிப்படுத்துவார்கள். ஏற்கெனவே ஆண்கள் குழந்தைகளுடனும் மனைவியிடமும் நேரம் செலவிடுவது கிடையாது. முகநூல், அலைபேசி, நண்பர்கள் என்று நேரத்தைச் செலவழிக்கின்றனர். இதில் அலுவலகப் பிரச்சினையைக் காரணம் காட்டி வீட்டிலிருப்பவர்களைத் துன்புறுத்தினால் என்னதான் செய்வது?
குடும்ப நிர்வாகத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு இருக்கும் பொறுப்புகள் அனைத்திலும் ஆண்களுக்கும் பங்கு உண்டு. ஆனால், ஆண்கள் அதை உணர்வதில்லை. வேலைக்குப் போகும் பெண்களுக்கு வெளியிடங்களில் ஏற்படும் தொல்லைகளை விடக் கணவனால் ஏற்படும் இத்தகைய மனஉளைச்சல்கள் அதிகமாக உள்ளன. குடும்ப நலனில் அக்கறையுள்ள பெண்களுக்கு இதுபோன்ற அணுகுமுறைகள் எத்தகைய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை ஆண்கள் உணர்வதில்லை.
பெண்களும் ஆண்களைப் போன்று இந்த விஷயங்களில் நடந்துகொண்டால் குடும்பத்தின் நிலை என்னாகும்? ஆண்கள் இதனை உணர்ந்து தங்கள் அலுவலகப் பிரச்சினைகளை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு, குடும்பம் என்ற அழகான கூட்டுக்கு நல்ல கணவனாகவும் அன்பான அப்பாவாகவும் திரும்பவேண்டும். அவர்களுடன் நேரத்தைச் செலவிடவேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழ முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT