Published : 11 Dec 2016 12:47 PM
Last Updated : 11 Dec 2016 12:47 PM
கல்யாணம், பிறந்தநாள், திருமண நாள், புத்தாண்டு, பண்டிகை போன்றவற்றுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுப்பது இன்று தவிர்க்க முடியாதது. கற்பனையும் ரசனையும் கலந்து, வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசை அளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தத் தேவையைச் சரியாகப் புரிந்துகொண்டு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கி, வெற்றிவாகை சூடியிருக்கிறார் பிரியங்கா.
ஒடிசாவில் பிறந்து, டில்லியில் படித்து, சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் பிரியங்கா, “பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவந்தேன். படிப்பும் திறமையும் இருக்கும்போது நாமே தொழில் தொடங்கினால் என்ன என்று கேட்டார் கணவர் ரங்கநாதன். பிறரிடம் வேலை செய்வதைவிட, பலருக்கு வேலை கொடுப்பது எனக்கும் பிடித்துப் போனது. ஆண்டு முழுவதும் தேவையும் நல்ல வருமானமும் கிடைக்கக்கூடிய தொழிலாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்குப் பரிசுப் பொருட்கள் தயாரிப்பு நல்ல தேர்வாகத் தோன்றியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் பெற்று, பரிசுப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கினேன்” என்கிறார்.
பரிசுப் பொருட்கள் தயாரிப்பில் வாடிக்கையாளர்களைப் பிடிப்பதுதான் பெரிய சவால். கொஞ்சம் கொஞ்ச மாகத் தொழிலை விரிவாக்கி, இன்று சென்னை யின் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கை யாளர்களாகப் பெற்றிருக்கிறார் பிரியங்கா. அதனால் வருடம் முழுவதும் விற்பனை அமோகம். ஆண்டுக்கு 65 லட்சம் ரூபாய்வரை மொத்த வருமானம் ஈட்டிவருகிறார்.
மாற்றம் முன்னேற்றம்
“நல்ல வேலை, கை நிறையச் சம்பளம்னு இருக்கிறபோது, எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்கன்னு கேட்காதவர்களே இல்லை. அவர்களின் பேச்சு என்னைப் பயமுறுத்துவதுக்குப் பதில் தைரியத்தைக் கொடுத்தது. துணிந்து ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சில தவறுகளைச் செய்திருக்கிறேன். ஒருமுறை 2 ஆயிரம் பேனாவுக்கான ஆர்டர் கிடைத்தது. ஒருவரிடம் மொத்தமாகப் பேனாக்களை வாங்கினேன். முதல் 10 பெட்டிகளைத் திறந்து பார்த்தேன். நான் கேட்டது போலவே இருந்தன.
அதனால் அனைத்துப் பெட்டிகளும் சரியாக இருக்கும் என்று நம்பி, வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்துவிட்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பெரும் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் கேட்டவாறு ஏன் செய்து தரலைன்னு கோபப்பட்டார்கள்.
அவர்கள் ஸ்டீல் மூடி பேனாக்களைக் கேட்டிருந்தார்கள். ஆனால் நான் அனுப்பியதில் பாதி ஸ்டீல் மூடிகளும் பாதி பிளாஸ்டிக் மூடிகளும் கொண்ட பெட்டிகளாக இருந்திருக்கின்றன. 5 ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்றாலும், அசிரத்தையாக இருக்கக் கூடாது என்ற பாடத்தைப் படித்துக்கொண்டேன். அந்தப் பேனாக்களைத் திரும்பப் பெற்று, இரண்டு மணி நேரத்தில் அவர்கள் கேட்ட பேனாக்களைக் கொடுத்த பிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. ஒருமுறை வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால், அவர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது.
தொழில் நுணுக்கம் கற்றுக்கொள்ளாமல் நேரடியாகத் தொழிலில் இறங்கியதால் இப்படிச் சின்னச் சின்ன தவறுகள் நேர்ந்தன” என்று சொல்லும் பிரியங்கா, இன்று பேனா, கடிகாரம் போன்ற பொருட்களில் நிறுவனத்தின் பெயர் பொறிப்பது முதல், தனித்துவமிக்க நினைவுப் பரிசுகள், கோப்பைகள், விருதுகளை வடிவமைப்பது வரை 1,500 விதமான பரிசுப் பொருட்களைத் தயாரித்து அளிக்கிறார். கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார், ஹோட்டல் நிறுவனங்களுக்கு ஆவி பறக்கும் தட்டுப் போன்று அந்தந்த நிறுவனங்களுக்கு ஏற்றவாறு நினைவுப் பரிசுகளை வடிவமைத்துத் தருவதில் பிரியங்கா கெட்டிக்காரர்.
வெற்றி…
“இன்று சென்னையில் நிறையப் பரிசுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தப் போட்டியைச் சமாளிக்கப் புதிது புதிதாகச் சிந்திக்க வேண்டும். வாடிக்கையாளரின் மனநிலையைப் புரிந்துகொண்டு, பொருட்களை உருவாக்க வேண்டும். தனித்துவம் ஒன்றே வாடிக்கையாளர்களைத் தேடி வரச் செய்யும். அதனால் எப்போதும் என்ன புதுமை செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். புது யோசனை கிடைத்தவுடன் செய்து பார்த்துவிடுவேன். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் புதுமைதான் சிறந்த தொழில் முனைவோராக நிலைநிறுத்தும் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்” என்று விடைகொடுத்தார் பிரியங்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT