Published : 17 Dec 2016 03:29 PM
Last Updated : 17 Dec 2016 03:29 PM
ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் அறிவில் ஓங்கி சமத்துவம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அவர்கள் அனைத்துத் தளங்களிலும் அனைத்துச் செயல்பாட்டிலும் சமத்துவம் பெற்றால் மட்டுமே முழுமையான விடுதலை சாத்தியம். ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்லற வாழ்வில், ஆணுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு. தங்கள் உரிமைகளைக் காவு கொடுத்து விட்டு, சிறகுகள் வெட்டப்பட்ட கூண்டுப் பறவைகளாக, வளர்ச்சி குறுக்கப்பட்ட போன்சாய் மரங்களாக, மூக்கணாங்கயிறு கட்டப்பட்டு இழுத்த இழுப்புக்கெல்லாம் வசப்படும் வண்டி மாடுகளாக இருக்கக் கூடாது.
இல்லறம் நல்லறம் என்பது உண்மையாக, பெண்ணுக்கு முடிவெடுக்கும் திறன் வேண்டும். தன் வாழ்வைப் பற்றிச் சிந்திக்க / முடிவெடுக்க வேண்டிய உரிமையை அவள் பெற்றிருக்க வேண்டும்.
ஆண், பெண் இணைந்து வாழும் இல்லற வாழ்வில், பிறர் தலையிட எல்லைகள் உண்டு. பெற்றோரோ, குடும்ப நண்பர்களோ, உறவினர்களோ நல்லது கெட்டதுகளை உணர்த்த வேண்டுமே தவிர, அதை அவர்கள் மேல் திணிக்கக் கூடாது. இளந் தம்பதிகளும் பெரியவர்கள் கருத்தைக் காது கொடுத்து, அதில் உள்ள சாதக பாதகங்களை அலசி, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஒரேயடியாக அவர்கள் வார்த்தைகளை நிராகரிக்கவும் கூடாது; அவர்கள் கூறிவிட்டார்கள் என்பதற்காகக் கொண்டாடவும் தேவையுமில்லை. நாம் பெற்ற குழந்தைகள் என்றாலும், வளர்ந்துவிட்டால் அவர்கள் வாழ்வில் நுழைய, அதுவும் இன்னொருவர் அவர்கள் வாழ்வில் வந்தபின் நுழைவது அத்துமீறல்.
பெற்றோருக்கே தம் பிள்ளைகள் வாழ்க்கையில் முடிவெடுக்க உரிமையில்லை என்றால் மற்றவர்களுக்கு ஏது உரிமை? இந்தச் சமூகம் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்னால் இந்திய எல்லைப் பகுதி கிராமம் ஒன்றில், திருமணமாகி ஓரிரு வருடங்களே ஆன தம்பதியில் கணவன் காணாமல் போய்விட்டான். அவன், பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறிச் சென்று சிறைப்பட்டுவிட்டான் என்று கூறப்பட்டது . அவன் உயிரோடு இருக்கிறானா என்பதைக் கூட அறிய முடியாத நிலை. கிராம சபை கூடி, பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தது. அந்தப் பெண்ணின் கருத்தறிய கிராம சபையினர் முன்வரவில்லை.
புதுமணத் தம்பதி ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். முதல் கணவன் திரும்பி வந்தான். தன் மனைவி இன்னொருவன் மனைவியாக வாழ்வதைக் கண்டு அதிர்ந்தான். கிராம சபையில் முறையிட்டான். கிராம சபை, அவள் முதல் கணவனோடு வாழ வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. என்ன கொடுமை இது? சிக்கலைத் தீர்த்து வைக்க நினைத்த கிராம சபையினர், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டப் பெண்ணின் விருப்பத்தை அறிய முதல் முறையும் முயற்சி செய்யவில்லை; இரண்டாம் முறையும் முயற்சி செய்யவில்லை. அவர்கள் கருத்தைத் தீர்ப்பு என்ற பெயரில் திணிக்க முற்பட்டனரே தவிர, அவள் விருப்பு வெறுப்பு அறிந்து, அதனைச் செயலாக்க முற்படவில்லை.
இன்றைக்கும் இதுதான் நம் பெண்களின் நிலைமை. தன் வாழ்க்கையைத் தீர்மானிக்க அவளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. பெற்றோர் தொடங்கி மற்றவர்கள் வரை, ’பெண்ணுக்கு நல்லது செய்கிறோம்’என்ற பெயரில், அவளின் கருத்தறியாது, அவள் மீது தங்கள் கருத்தைத் திணிக்க முற்படுவதே பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது..
குடும்பத்தில் ஒவ்வோர் இயக்கத்திலும் தம்பதியரின் இணைவு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்கள் இருவரின் தனித்துவமும் கருத்துச் சுதந்திரமும். குடும்ப நடவடிக்கைகளில், செயல்பாட்டில் அவனின் கருத்து மதிக்கப்படும்போது அவளின் கருத்தும் மதிக்கப்பட வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ளவோ, குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்யவோ, தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளில் முடிவெடுக்கவோ தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட பெண்கள் முன்வர வேண்டும். கல்வி அறிவும் சமூக அறிவும் இல்லாத எல்லைப்புற கிராமப் பெண்ணின் அவல நிலை, இனி ஒருபோதும் எந்தப் பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT