Published : 27 Nov 2016 01:01 PM
Last Updated : 27 Nov 2016 01:01 PM
‘HISTORY’ என்பது ‘His’ story. அது, ‘Her’ story அல்ல என்பது மேலை நாட்டுப் பெண்ணியவாதிகள் கருத்து. இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் ஆண்களால் வடிவமைக்கப்பட்டவை. உலக வரலாறு தொடங்கி, தமிழக வரலாறுவரை எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்கள் பற்றிய செய்திகள் ஐந்து சதவீகிதம்கூட கிடையாது. ஆனால் நாம் அதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. சிந்திக்கும் சிலரும், “பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டனர். அதனால் அவர்களுக்கென்று வரலாறு இருக்க வாய்ப்பில்லை” என்ற அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர்.
வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்தே சமுகத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் போராண்மையைப் பேசும் வரலாறு, அதே காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் அனுபவித்த கொடுமையை எதிர்த்துக் குரல்கொடுத்த பாண்டிமாதேவியைப் பற்றிப் பேசியுள்ளதா?அதியமான் நெடுமான் அஞ்சியின் அரசவைப் புலவர், அமைச்சர், அரசியல் ஆலோசகர், அரசியல் தூதர் என்று பல பணிகளை மேற்கொண்ட ஒளவை, எந்த வரலாற்று நூலில் இடம்பெற்றுள்ளார்?
ஜான்சி ராணி, நூர்ஜஹான் பேகம், ரஸியா பேகம், ராணி மங்கம்மா என்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெண்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடைய வரலாறுகள்கூட விரிவாகப் பேசப்படவில்லை. இவர்களும் பெயரளவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்திய விடுதலை வரலாற்றில் ஆண்களின் பங்களிப்பு பேசப்பட்ட அளவுக்குப் பெண்களின் பங்களிப்பு பேசப்படவில்லை. லண்டன், பாரீஸ் நகரங்களில் வாழ்ந்துகொண்டு, அயர்லாந்து, ரஷ்யா, எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் நிதி திரட்டி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அனுப்பிய மேடம் பிகாஜி காமாவை எந்த வரலாற்று நூலும் பேசவில்லை.
ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து, புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் பிடிபடும் தருணத்தில் விஷத்தை அருந்தி, தன்னை மாய்த்துக்கொண்ட ப்ரீதி லதா, பட்டமளிப்பு உரை நிகழ்த்திக்கொண்டிருந்த ஆங்கிலேய கவர்னரைச் சுட்டுக் கொன்ற பீனாதாஸ், சிட்டகாங் ஆயுதக் கிடங்கைத் தகர்க்கும் முயற்சியின்போது கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற கல்பனா தத், ரகசிய வானொலி ஒலிபரப்புச் சேவையில் ஈடுபட்டுச் சிறை தண்டனை அனுபவித்த உஷா மேத்தா போன்றவர்கள் எந்த வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளனர்?
பெண் கல்விக்கு வித்திட்ட பேகம் ரொக்கயா சகாவத் ஹொசைன், சாவித்திரிபாய் பூலே, பண்டித ரமாபாய் இவர்களை எத்தனைப் பேருக்குத் தெரியும்? தமிழ்நாட்டில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல நூறு பெண்கள் ஈடுபட்டனர். கணவனை இழந்த இளம் பெண்களுக்குக் கல்வி கொடுத்த சகோதரி சுபலட்சுமி, தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்களும் இந்திய வரலாற்றைப் பேசும் மையப் பிரதிகளில் இடம்பெறவில்லை.
தமிழ் இலக்கிய வரலாறுகளிலும்கூட பெண் படைப்பாளிகள், அவர்களின் படைப்புகள், அவர்களின் படைப்புத் திறன்கள் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. எப்போதோ எழுதப்பட்ட வரலாற்று நூல்களே திரும்பத் திரும்ப மறு ஆக்கம் பெறுகின்றனவே தவிர, காலந்தோறும் வரலாறுகள் புதுப்பிக்கப்படுவதில்லை; விடுபட்ட செய்திகள் இணைக்கப்படுவதில்லை. நவீன சிந்தனை வளர்ச்சிகளுக்கேற்ப பாலின பேதமற்ற புதிய பார்வையுடன் வரலாறுகள் எழுதப்பட வேண்டும். நாளைய தலைமுறை பாலின பேதமற்று வளரவும் சிந்திக்கவும் செயல்படவும் இதுபோன்ற முயற்சிகள் தேவை.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT