Published : 20 Nov 2016 12:47 PM
Last Updated : 20 Nov 2016 12:47 PM
சௌமியாவின் கழுத்தில் தாலி ஏறியதும் அவள் அம்மாவுக்குக் கண்களில் நீர் வழிந்தோடியது. அப்பா இல்லாத செளமியாவுக்கு நல்ல வரன் அமைந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அன்றிரவு சௌமியா பலவிதமான எதிர்பார்ப்புகளோடு இருந்தாள். ஆனால் அவள் கணவன் கணேஷ், “களைப்பாக இருப்பாய்… இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி தூங்கிவிட்டான். குறைந்த பட்சம் அன்பான சொற்களுக்கோ, நெருக்கமான தருணங்களுக்கோகூட முயற்சி செய்யவில்லை.
மனைவியைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதும் கணேஷின் நாகரிகத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்தாலும் ஒருபக்கம் செளமியாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அடுத்த நாள் கோயிலுக்குப் போய்விட்டு வரும்போதே மிகவும் தாமதமாகிவிட்டது. களைப்பில் சௌமியா உறங்கிவிட்டாள். இப்படியே கோயில், மாதவிடாய், தலைவலி, மாமியாருக்கு நெஞ்சுவலி என்று முதல் மாதம் ஓடிவிட்டது.
அன்பு நாடகம்
சௌமியாவின் வீட்டில் யாரும் தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றிக் கேட்கவில்லை. கணேஷின் சாந்தமான குணமும் மற்றவர்கள் முன்னிலையில் சௌமியாவிடம் நடந்துகொள்ளும் பாங்கும் அவனைப் பண்பானவனாகக் காட்டின. செளமியாவும் இதை எப்படி அம்மாவிடம் சொல்வது என்று விட்டுவிட்டாள்.
காலையில் அலுவலகம் கிளம்பினால், இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்புவான் கணேஷ். தன்னை வெளிப்படுத்திக்கொள்ள சௌமியா சில முயற்சிகளை எடுத்தாள். மாமியாருக்கு உடல் நலமில்லை என்று தேனிலவுத் திட்டத்தை ரத்து செய்ததில்கூட அவளுக்கு வருத்தமில்லை. ஆனால் அருகில் இருக்கும் அம்மா வீட்டுக்குத் தனியாகச் செல்வதைக்கூட அவன் ஏற்கவில்லை என்பதில் உடைந்து போனாள். கணேஷிடம் சண்டை போட்டாள். சுடிதார் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தான்.
சௌமியாவின் தோழி தன் கணவன் எப்போதுமே அன்பாக இருந்ததில்லை, உடலுறவுக்கு மட்டுமே தன்னிடம் வருவான் என்று அழுதது அவள் நினைவுக்கு வந்தது. அதனால் கணேஷ் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்தாள். இரண்டாம் மாத முடிவில் பாங்காக் செல்ல டிக்கெட்கள் எடுத்தான். சௌமியாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, அலுவலகத்தில் முக்கியமான புராஜெக்ட் முடிக்க வேண்டியுள்ளது என்று கூறி, பயணத்தை ரத்து செய்தான்.
தள்ளிப்போடுவது நல்லதா?
ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தாம்பத்திய உறவு வைத்துக்கொள் வதில் உங்களுக்கு ஏதும் பிரச்சினையா என்று கேட்டாள் செளமியா. “ஒரு வருடத்துக்குக் குழந்தை வேண்டாம் என்று முன்பே கூறியிருந்தேனே... நீ கருவுற்றால் நான்தான் உன்னைப் பார்த்துக்கணும். என் அம்மா உடல் நிலை சரியில்லாதவர்” என்று அடுக்கிக்கொண்டே போனான் கணேஷ். “குழந்தை மெதுவா பெத்துக்கலாம். ஆனால் நாம் இன்னும் சேரவே இல்லையே?” என்றாள் செளமியா. “உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா விவாகரத்து செய்துடலாம். சும்மா பிரச்சினையைக் கிளப்பாதே” என்று சொன்ன கணேஷைப் பார்த்து அதிர்ந்துபோனாள் செளமியா.
ஒரு வாரம் அவள் பேசவில்லை. அவன் சாதாரணமாக இருந்தான். சௌமியா மாமியாரிடம் தங்கள் பிரச்சினையைப் பற்றிச் சொன்னாள். அவரோ கொஞ்சமும் பதற்றம் இல்லாமல், “எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். அவனைப் போல் ஒரு பிள்ளையைப் பெற தவம் செய்ய வேண்டும்” என்றார். கணேஷை வேலை நிமித்தமாக மூன்று மாதம் வெளிநாட்டுக்கு அனுப்பியது அவன் அலுவலகம். ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. இப்போதெல்லாம் அடிக்கடி கத்த ஆரம்பித்தான் கணேஷ்.
சௌமியாவுக்கு உடல் நலம் குன்றியது. டாக்டரிடம் நம் விஷயம் பற்றிப் பேசாதே என்று எச்சரித்து அழைத்துச் சென்றான் கணேஷ். டாக்டர் மருந்து கொடுத்தும் உடல்நிலை சரியாகவில்லை. ஒருமுறை கணேஷை வெளியே அனுப்பிவிட்டு, செளமியாவை விசாரித்தார் டாக்டர். அழுதுகொண்டே தன் பிரச்சினை பற்றிப் பேசினாள். டாக்டரும் கணேஷைத் தனியாக அழைத்துப் பேசினார். அன்று முதல் கணேஷ், செளமியாவிடம் பேசுவதில்லை. ஹாலில் தூங்கினான். சௌமியாவுக்குக் குற்ற உணர்வு அதிகமாகி, கணேஷிடம் பேசுமாறு கெஞ்சினாள், அழுதாள். குழந்தையே வேண்டாம், நண்பர்களாகவே இருப்போம் என்றாள்.
“என்னை அவமானப்படுத்திவிட்டாள். நான் ஆண் தன்மை இல்லாதவன் என்று சௌமியா நினைக்கிறாள். இனி இவளுடன் வாழ விருப்பமில்லை” என்று தன் பெற்றோரிடம் சொன்னான் கணேஷ். செளமியாவின் அம்மாவை வரவழைத்து, அடுக்கடுக்காகக் குற்றம் சுமத்தினார் மாமியார். சௌமியா அம்மா வீட்டுக்கு வந்தாள். அம்மாவிடம் முதல் முறையாகப் பிரச்சினையைப் பற்றி எடுத்துச் சொன்னாள்.
புரியவைத்த சட்டம்
வழக்கறிஞரிடம் சென்றபோதுதான், தாம்பத்திய வாழ்க்கை திருமணத்தின் அடிப்படை என்பதும், தாம்பத்திய வாழ்க்கையே ஆரம்பிக்காமல் இருந்தால் அதற்குரிய காரணங்களைக் கூறி, ஓராண்டுக்குள் செல்லாத திருமணம் என்று மனு செய்ய வேண்டும் என்பதும் தெரிந்தது.
திருமணம் என்றால் தாலி கட்டியவுடன் முடிந்துவிட்டதாக நினைக்கிறோம். ஆனால் தாம்பத்தியம் தொடங்கிய பின்னர்தான் திருமணம் நிறைவுறுவதாகச் சட்டம் சொல்கிறது. எனவே, ஆரம்பிக்காத திருமண வாழ்க்கை, உடல் ரீதியாகவோ உளவியல் காரணமாகவோ துன்புறுத்துதல், ஆண்மைத் தன்மையற்ற நிலை, பொய் சொல்லி ஏமாற்றிச் செய்யும் திருமணம் ஆகியவற்றுக்கு எதிராக, திருமணமாகி ஒரு வருடத்துக்குள்தான் வழக்குப் போட முடியும் என்பதையும் சட்டம் கூறுகிறது.
தாம்பத்தியம் இல்லாமல் திருமண வாழ்க்கை என்பது அடிப்படையில் ஏதோ குறையை மறைக்கப் போடும் நாடகமே. தாம்பத்தியம் இல்லை என்றால் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, வெளிப்படையாகப் பேசுவதும், மருத்துவரை நாடுவதும், மறுத்தால் சட்டத்தை நாடுவதும்தான் ‘செல்லாத திருமணம்’என்று அறிவிக்கும்படி கோருவதற்கான நடைமுறை. இது இந்து, இஸ்லாம், கிறித்தவ, சிறப்புத் திருமணம் ஆகிய அனைத்து வகைத் திருமணங்களுக்கும் பொருந்தும். நம் பெண்கள் மீது இழைக்கப்படும் பல குடும்ப வன்முறைகளில் தாம்பத்திய வாழ்க்கை மறுப்பும் ஒரு வன்முறையே. இதைச் சொல்லவும் பேசவும் பெண்களுக்கும் பெண் வீட்டாருக்கும் உள்ள மனத்தடையைத்தான், பலரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பெண்களின் அறியாமையும் தயக்கமும் தான் பல ஆண்களுக்கும், அவர்களது குறைகளை மூடி மறைக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வசதியாக இருக்கிறது. சட்டங்கள் இருந்தாலும் இது குறித்த புரிதலையும், மனத் தடைகளிலிருந்து மீண்டு வரவும் பெண்களுக்குக் கற்றுத் தர வேண்டியது அவசியம்.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT