Last Updated : 06 Nov, 2016 01:36 PM

 

Published : 06 Nov 2016 01:36 PM
Last Updated : 06 Nov 2016 01:36 PM

சட்டமே துணை: பின் தொடர்வதுதான் காதலா?

முன்னால போனா, நான் பின்னாலே வாரேன்’என்ற பாடலைக் கேட்காதவர்கள் குறைவு. பல திரைப்படங்களில் இளம் பெண்கள் சாலையில் நடந்து போகும்போது, இளைஞர்கள் அந்தப் பெண்களை அல்லது அந்தப் பெண்களில் ஒருவரைக் கேலி செய்வது வழக்கமான காட்சி. அந்தப் பெண்கள் கோபத்தோடு திட்டிவிட்டுச் சென்றாலும், கேலி செய்தவன் மீதே காதல் வயப்படுவதாகப் பிறகு வரும் காட்சிகளில் காட்டுவார்கள்.

இரு மனங்களின் சங்கமமே காதல் என்றாலும் பின்தொடர்வதும், விரட்டிச் சென்று காதலை வெளிப்படுத்துவதும் சரி என்று சித்தரித்தார்கள். சமீபத்தில் வெளியான திரைப்படங்கள், வன்முறை மூலம் காதலை வெளிப்படுத்துவதும் சரியே என்று சொல்கின்றன. வாழ்ந்தால் தன்னோடு, இல்லாவிட்டால் மண்ணோடு என்ற அளவுக்கு வன்முறையைக் கையிலெடுக்கிறவனே கதாநாயகனாகக் காட்டப்படுகிறான்.

காதலிக்கும்போது ஆண்கள் எல்லை மீறுவதையும், வன்முறை செலுத்துவதையும் அதீதக் காதலால் செய்வதாகவும், பெண் ஒப்புக்கொள்ளாததால்தானே அவன் அப்படி நடந்துகொள்கிறான் என்றும் அவன் செய்கைக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஆண்கள் மீது பரிதாபத்தைக் காட்டாமல் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணை, ஏதோ குற்றம் செய்தவளைப் போல காட்டிப் பழக்கிவிட்டன திரை ஊடகங்கள்.

ஃபேஸ்புக் வலை

வந்தனாவின் காதல் அனுபவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். அக்கா கணவனின் நண்பருக்கு நண்பன் சிவா. திருமணத்துக்கு நண்பர்களோடு வந்து போன பின், ஃபேஸ்புக்கில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அறிமுகம், கொஞ்சம் உரிமையோடு நட்பு, அடுத்து அழகையும் உடலையும் பற்றிய வர்ணனைகள், உனக்கு எப்படிப்பட்டவன் கணவனாக வேண்டும் என்ற கேள்விகள், வாதங்களின் ஊடாக வந்தனாவின் பலவீனங்களை அறியவும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டான் சிவா.

யாருக்காவது சிரமம் என்றாலே பரிதவிக்கும் மனம் வந்தனாவுக்கு. சிவாவும் வந்தனாவுக்குப் பிரத்யேகமாகப் பதிவுகள் போடுவதும், பிறருக்குத் தெரியும் பொதுப் பக்கங்களில் மிகவும் கண்ணியமாக ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்வதுமாகவும் இருந்தான்.

செல்போன் சிக்கல்

ஒருநாள் சிவாவிடமிருந்து அழைப்பு வந்தது. போனை அணைத்து வைத்துவிட்டு, கல்லூரிக்குக் கிளம்பினாள் வந்தனா. எந்தப் பாடமும் காதில் விழவில்லை. ஏதோ ஒரு பதற்றம் மனம் முழுவதும் அழுத்தமாக உட்கார்ந்திருப்பது போல ஓர் உணர்வு. கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது, சாலையின் எதிர்ப்புறத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்தான் சிவா. அவன் பார்க்காததால் நிம்மதி என்று பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள் வந்தனா. திடீரென்று அருகில் வந்த சிவா பைக்கை நிறுத்தி, “வண்டியில் ஏறு” என்றான். என்ன செய்வதென்று தெரியாமல், பைக்கில் ஏறினாள் வந்தனா.

ஒரு மணிநேரம் ‘காஃபி டே’யில் என்னென்னவோ பேசினான். அவன் அவளை விரும்புவதாகவும், அவள் ஒன்றும் அழகில்லை என்றும், அவன் கூப்பிட்டால் வருவதற்கு எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள் என்றும் கூறினான். இனிமேல் ஃபோன் அழைப்பை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் மிரட்டினான். பயந்துபோன வந்தனா, அவளுடைய பெற்றோர் பேச வேண்டாம் என்று கூறியதாகவும், செல்போனை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் பொய் சொன்னாள். உடனே அருகில் இருந்த கடைக்கு அழைத்துப் போய், புது செல்போனும் சிம் கார்டும் வாங்கிக் கொடுத்தான் சிவா.

அன்பின் பெயரால் மிரட்டல்

வந்தனா எவ்வளவு மறுத்தும் அவன் கேட்கவில்லை. தொடர்ந்து பேசினான், சந்தித்தான், ‘காஃபி டே’க்கு அழைத்துப் போனான். ஒருநாள் நீ இதுவரை என்னுடன் பேசியவை எல்லாம் பதிவாகியுள்ளது என்றான். நான் ஒன்றும் பேசவில்லையே என்று கூறியவளைப் பார்த்து, நெருக்கமாக உள்ள காட்சிகளும்கூட உள்ளன என்றான்.

அவளால் பொறுக்க முடியவில்லை. “என்னடா, பிளாக்மெயில் பண்றியா? உன்னைப் போல ஒருவனிடம் நட்பாகப் பழகியதற்கு எனக்குக் கிடைத்த பரிசு இது” என்று கோபமாகத் திட்டினாள்.

தோழிகளிடம் விஷயத்தைச் சொன்னாள். எல்லோரும் அவளை பயமுறுத்தினார்கள். “அவன் ஆபாசமாக மார்ஃபிங் செய்த போட்டோவை வைத்திருந்தால் என்ன செய்வாய்? அதற்கு நீயே அன்பாகப் பேசி போட்டோக்களை வாங்கிக்கொண்டு, பெற்றோரிடம் சொல்” என்றார்கள். அதெல்லாம் சரிப்பட்டுவரும் என்று வந்தனாவுக்குத் தோன்றவில்லை. “நீ ஏன் அவனுடன் சென்றாய்? அதனால்தான் அவன் உன்னை விரும்பியிருக்கிறான். இனி அவனை நீ விட முடியாது. அவன் தற்கொலை செய்துகொண்டால் என்ன செய்வாய்?” என்று தோழிகள் கேட்டார்கள்.

அக்காவிடம் சொன்னாள் வந்தனா. கணவரிடம் சொன்னால் தங்கள் குடும்பத்தைப் பற்றித் தவறாக நினைப்பாரோ என்று அஞ்சினாள் அக்கா. கடைசியில் தைரியமாகத் தமிழ்ப் பேராசிரியரிடம் சொன்னாள் வந்தனா. அவர் உடனே கல்லூரி முதல்வரிடம் சொல்லி, காவல் துறையில் புகார் கொடுத்தார்.

காவல் அதிகாரி, “பெண்ணைப் பின்தொடர்தல் (stalking) என்ற புதிய சட்டப் பிரிவு இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது, அந்தப் பிரிவில் வழக்கு பதியலாம். அதற்கு முன் அவனை அழைத்து எச்சரிக்கிறேன்” என்றார். ஒரு மாத நடவடிக்கைகளுக்குப் பிறகு, அவன் முற்றிலும் எல்லாத் தொடர்புகளையும் விட்டுவிட்டான்.

கல்லூரியில் படிக்கும் வந்தனாவுக்கு, ‘பின்தொடர்தல்’என்பது மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கக்கூடிய கடும் குற்றம் என்று தெரிந்த பின்னர்தான், சிவாவை ஒரு குற்றவாளியாகச் சட்டம் பார்க்கிறது என்பதை அறிந்தாள். அவளது குற்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

‘பின்தொடர்தல்’ கதாநாயக குணம் என்ற தவறான சிந்தனையை விட்டொழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x