Published : 20 Nov 2016 12:49 PM
Last Updated : 20 Nov 2016 12:49 PM
பெண்களுக்கென்று தனித்திறன்கள் பல உண்டு. அவர்களின் தனித் திறமைகளை வளர்த்தெடுக்க இந்த ஆணாதிக்கச் சமூகம் விரும்புவதில்லை. அவளுக்கென்று தனி சிந்தனையோ, இயக்கமோ கூடாது என்று அடக்கிவைத்திருந்தது. பெண் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டாள். மனுவின் எழுதப்படாத சட்டம், பெண் சிறுபிள்ளையாக இருக்கும்போது தந்தையையும், திருமணத்துக்குப் பின் கணவனையும், வயதான பின் மகனையும் சார்ந்து வாழ வேண்டும் என்றும், அவளுக்கென்று தனி இயக்கம் கூடாது என்றும் சொல்கிறது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, பெண் ஆணைச் சார்ந்தே பார்க்கப்படுகிறாள். திருமணம், தாய்மை ஆகியவற்றின் பெயரால் பெண் தனித்துவத்தை இழக்க நேரிடுகிறது.
முகவரியற்ற பெண்கள்
சமீப காலம் வரை கடிதப் போக்குவரத்து, தகவல் பரிமாற்றத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. பெரும்பான்மையான கடிதங்கள், முகவரியில் ஆண்களின் பெயரைத் தாங்கியே வரும். பெண்களுக்கு வரும் ஒரு சில கடிதங்களில் D/o, W/O, C/O என்று கணவன், தந்தை, தமையன், மகன் என்று இவர்களில் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டுத்தான் முகவரி எழுதப்பட்டிருக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன் தந்தை பெயரை இணைத்துக்கொண்டும், திருமணத்துக்குப் பின் கணவன் பெயரை இணைத்துக்கொண்டும்தான் அடையாளப்படுத்தப்பட்டனர். இன்றும் இந்த வழக்கம் சிலரால் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டுவருகிறது. இதைப் பெரும்பான்மையான மதங்களும் வற்புறுத்துகின்றன.
ஒழுக்கத்தின் பெயரால் தடை
பெண்கள், ஆண்களைவிடக் கலைகளில் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆடல், பாடல், பின்னல் வேலைகளில் அவர்களின் ஆற்றல் அளவிட முடியாதது. சில பெண்கள் எழுதுவதிலும் சொற்பொழிவு ஆற்றுவதிலும் திறமையானவர்களாக விளங்கு கின்றனர். இந்த ஆற்றல்கள் வளரிளம் பருவத்தில் அவர்களுடைய பெற்றோரால் மிக ஆவலுடன் வளர்த்தெடுக்கப்படுகின்றன. ஆனால், வயதுக்கு வந்த பிறகு, அவர்களாலேயே இந்த ஆற்றல்கள் மறுக்கப்படுகின்றன, தடை செய்யப்படுகின்றன. தொழில் அடிப்படையில் அல்லாமல், தனித்திறன் வெளிப்பாடாக அவற்றை மேடையேற்றுவது கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
எழுத்துத் துறையில் பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்
இப்போது சற்றுத் தளர்ந் திருக்கின்றன. ஆனால் கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கப்படுவதற்கான அடையாளம்கூடக் காணப் படவில்லை. பெரும்பாலான வீடுகளில் பெண் எழுதுவது மறுக்கப்படுகிறது. எந்தப் பெற்றோர் தங்கள் பெண் எழுதுவதைக் கொண்டாடுகிறார்கள்? என் பெண் ஒரு மருத்துவர், என் பெண் ஒரு பொறியாளர், என் பெண் ஓர் ஆசிரியர் அல்லது ஒரு கல்லூரிப் பேராசிரியர் என்று கொண்டாடுகிறார்களே தவிர, என் பெண் ஓர் எழுத்தாளர் என்று யாரும் கொண்டாடுவதில்லை. “உனக்கெல்லாம் எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை? பத்திரிகையில்
எல்லாம் உன் பேரு வெளிவந்து ஊர் முழுக்கத் தெரியணுமா?” என்று தடை செய்கிறவர்களே அதிகம். நல்ல திறமையான கதைசொல்லிகளும் கட்டுரையாளர்களும் கவிஞர்களும் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிடுகின்றனர். அதையும் மீறி எழுதும் சில பெண்களும் அவர்கள் ‘எதை எழுதுகிறார்கள்’ என்று கண்காணிக்கப்படுகிறார்கள். இதழாளர்களாக வரும் பெண்கள் மீது இந்த ஆணாதிக்கச் சமூகம் களங்கம் கற்பிக்கிறது. அவர்களுடைய எழுத்தையும் கொச்சைப்படுத்துகிறது.
பெண்களின் தனித்துவத்தை முடக்குவதற்கான முதன்மை ஆயுதமாக ‘நடத்தை’யை இந்தச் சமூகம் முன்வைக்கும்போது, ஆர்வம் உள்ள பெண்கள்கூடப் பல சமயம் போராட்டத்தில் தொலைந்துபோகிறார்கள். அதையும் மீறி, தனித்துவம் மிக்க பெண்கள் பல துறைகளிலும் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தடைகளை வெற்றிப் படிக்கட்டுக்களாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பெண்ணும் தன் சுய ஆளுமையையும் சுதந்திரத்தையும் வளர்தெடுக்க முன்வர வேண்டும். தேவையில்லாத கட்டுத்திட்டங்களுக்குள் தங்களைச் சிறைப்படுத்திக்கொள்ளக் கூடாது.
‘பெண்களைத் தனித்துவம் மிக்கவர்களாக உருவாக்குவது அனைவரின் கடமை. அதற்கான தார்மிகப் பொறுப்பு ஒவ்வோர் ஆணுக்கும் உண்டு’ என்கிறார் விவேகானந்தர்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT