Published : 13 Nov 2016 02:34 PM
Last Updated : 13 Nov 2016 02:34 PM
காலத்துக்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக்கொண்டால் சாதிக்கலாம் என்பதுதான் தேஜஸின் தாரக மந்திரம். கோவையைச் சேர்ந்த தேஜஸ், “பொட்டீக், டெய்லரிங் கடை இவற்றை நடத்தினால்தான் வெற்றி பெற முடியும் என்பது தவறான எண்ணம். திறமை இருந்தால் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டலாம் என்பதற்கு நானே உதாரணம்” என்கிறார். கல்லூரி மாணவிகளிடமும் வித்தியாசமான ஆடையை உடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களிடமும் தேஜஸின் வடிவமைப்புகள் தனிக் கவனம் பெற்றுவருகின்றன.
“என் தோழியிடம் ஆரி, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளைக் கற்றுக்கொண்டேன். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தோழிகள், வாடிக்கையாளர்களுக்கு பிளவுஸ், பட்டுப் பாவாடைகளைத் தைத்துக் கொடுக்கிறேன். நான் செய்கிற ஆரி, எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு. வழக்கமான டிசைன்களோடு என் கற்பனைத் திறனையும் புகுத்துவதால் ஒவ்வொன்றும் தனித் தன்மையுடன் இருக்கும்” என்கிறார்.
இவருடைய வாடிக்கையாளர் ஒருவர் பட்டுப் புடவையைக் கொடுத்து, அந்த மாடல் பழையதாகிவிட்டதாகச் சொல்லி வருந்தியிருக்கிறார். இவர் அதில் கண்ணாடி, கற்கள் பதித்து, திரெட் வொர்க் செய்து கண்ணைக் கவரும் புடவையாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்.
“அந்தப் புடவையைப் பார்த்ததும் அவங்களோட மகிழ்ச்சியைப் பார்க்கணுமே! திருமணப் பட்டுக்கான பிளவுஸ்தான் என்னுடைய ஸ்பெஷல்” என்கிறார் தேஜஸ்.
கல்யாணப் புடவையில் இருக்கும் டிசைனுக்கு ஏற்றவாறு, பிளவுஸின் முழு டிசைனையும் செய்துதருகிறார். ஆரி வேலைப்பாடு குறித்து வகுப்பெடுப்பது, பட்டுப் பாவாடைகள் தைப்பது என நாள் முழுவதும் பரபரப்பாக வேலை செய்துவருகிறார்.
“நமது புடவைகளில் வட இந்தியாவின் கட்ச், கசூலி, கமல் வேலைப்பாடுகளையும் தொடங்கினேன். என் தோழிகள் மூலமே நிறைய ஆர்டர்கள் கிடைக்கின்றன. மாதம் 20 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் ஈட்டிவருகிறேன். தற்போது எம்ப்ராய்டரி டிசைன் பின்தங்கியிருப்பதுபோல் தெரிந்தாலும் எவர்கிரீன் ஃபேஷன் அதுதான்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் தேஜஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT