Published : 06 Nov 2016 01:37 PM
Last Updated : 06 Nov 2016 01:37 PM
ஆண், பெண் பாலினப் பாகு பாட்டின் உச்சக்கட்டம், வன்முறைக் கலாச்சாரம். இரு பாலரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் ஆணின் அதிகாரமும் அடக்குமுறையும் பெண்களிடத்தில் வன்முறையாக வெளிப்படுத்தப்படுகின்றன. பெரும் பாலான ஆண்கள், பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதன் விளைவாகவே வன்முறை வெளிப் படுத்தப்படுகிறது. தன் வசப்படாத பெண்களிடத்தில் வன்மம் தீர்த்துக் கொள்ள ஆண்கள் தயங்குவதில்லை.
வன்முறைக் கலாச்சாரம்
2011-ல் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, ரயிலில் இருந்து தள்ளிக் கொல்லப்பட்ட சவுமியாவும், 2012-ல் கூட்டுப் பலாத்காரத்துக்கு ஆளாகி இறப்பைத் தழுவிய நிர்பயாவும், 2013-ல் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி இறந்த வினோதினியும், 2014-ல்
பெங்களூருவில் ஆசிரியரால் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்ட சிறுமியும், 2016-ல் கொடூரமாக வெட்டப்பட்டு இறப்பைத் தழுவிய சுவாதியும் வன்முறைக் கலாச்சாரத்தின் குருதி படிந்த வரலாறுகள்.
இந்தியாவில் ஒவ்வோர் இருபது நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறாள் என்ற நிலை தொடர்ந்துகொண்டிருக்கும்போது, பெண்கள் பாதுகாப்புக்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டு என்ன பலனைக் கண்டோம்? சட்டங்களை மீறி வன்முறைகள் தலைவிரித்து ஆடுவதைப் பார்க்கும்போது, சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், குற்றத்துக்கான தண்டனைகள் குறித்தும் மீள் பார்வை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது புரிந்துவிடும்.
பெண்கள் உடல் மீது மட்டும் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட வில்லை. பெண்களின் நடத்தையையும் ஊடகங்கள் விமர்ச்சித்துவருகின்றன. ஆண்கள் தங்களை உத்தமர்களாக நிலைநிறுத்திக்கொள்ள, பெண்கள் நடத்தையின் மீது வேண்டுமென்றே களங்கம் கற்பிப்பதும் வரலாற்றுத் தொடர்கதைதான்.
சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்படாத பல குற்றங்களும் உள்ளன. பொது இடங்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண்களின் உறுப்புகளைக் கிள்ளுதல், அழுத்துதல் போன்ற விரும்பத் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆண்கள் பலர் உண்டு. சமீபகாலமாக, மற்றொரு புதுவிதமான அச்சுறுத்தல் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது. சமூக வலைத்தளங்கள், அலைபேசி போன்ற நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் ஆண்கள் ‘சைபர் புல்லியிங்’ (cyber-bullying) என்று சொல்லக்கூடிய வைரஸைப் பெண்கள் மீது கையாள்கின்றனர்; அதாவது, பெண்கள் மீதும் அவர்களின் நடத்தை மீதும் களங்கம் கற்பித்துச் செய்திகளை வலைதளங்கள் வழியாகப் பரப்பிவருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னால், சேலத்தைச் சேர்ந்த வினுபிரியா மீது இத்தகைய தாக்குதல் ஒரு கயவனால் கையாளப்பட்டது. இந்த அநியாயத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மற்றொரு வரலாற்றுக் களங்கம். இன்றைய இளம் பெண்கள் பலர், இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு, வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்ற நிலை ஏற்பட்டுவருகிறது.
கல்வி, திறமை, அனுபவம், ஆற்றல், பொருளாதாரம், நிர்வாகம் என்று அனைத்திலும் பெண்கள் தன்னிறைவு பெற்றுவரும் நிலையில், அவர்கள் முடக்கப்படுகிறார்கள்; அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படு கிறார்கள். பெண்களுக்கான சமூக வெளி பாதுகாப்பானதாக இல்லை.
‘வன்முறை இல்லா உலகம் வேண்டும்’ என்று பேசுவது மட்டும் இதற்குத் தீர்வு ஆகிவிடாது. இதனைச் செயல்படுத்த அனைவரும் கைகோக்க வேண்டும். தன்னோடு பழகும், நட்பு பாராட்டும், உடன் வேலை பார்க்கும், பயணிக்கும் பெண்களைச் சக உயிரியாகப் பாவிக்க ஒவ்வோர் ஆணும் பழகவேண்டும். கண்ணில் காணும் எல்லாப் பெண்களும் காதலியாகி விட முடியாது; சகோதரியாக ஆக முடியும் என்பதை உணர வேண்டும்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT