Last Updated : 13 Nov, 2016 02:35 PM

 

Published : 13 Nov 2016 02:35 PM
Last Updated : 13 Nov 2016 02:35 PM

வானவில் பெண்கள்: தமிழ் உணர்வைத் தட்டி எழுப்புகிறோம்!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அந்த அலுவலகம் முழுவதும் தமிழால் ததும்பி வழிகிறது. மொழிக் காகவும் இன உணர்வுக்காகவும் போராட, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி இசைமொழி ஓர் அமைப்பைத் தொடங்கி, செயல்படுத்திவருகிறார்.

தேநீரா, குளம்பியா என்று தேமதுரத் தமிழில் உபசரித்த இசைமொழி, “தமிழ் ஆர்வமுள்ள 11 பெண்கள் இணைந்து, தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கினோம். தற்போது 64 உறுப்பினர்கள் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லோருக்கும் தமிழ்ப் பெயர் சூட்டினோம். அனைவரையும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என்கிறார்.

நம் அடையாளத்தை ஏன் பிறமொழியில் எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கையெழுத்தையும் பெயரையும் தமிழில் மாற்ற விரும்புகிறவர்களுக்கு உதவியும் செய்துவருகிறது இந்த அமைப்பு.

“களத்தில் இறங்கிச் செயலாற்றுவதற் காகவே தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின்போது, ஒருமாதம் முழுவதும் சென்னையின் பல இடங்களுக்கும் நடந்தே சென்று கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினோம். நகரத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளின் பெயர்கள் மாற்றப் பட்டன. தற்போது ஆங்கிலத்தில் பெயர் வைத்து வரு கின்றனர். மீண்டும் இந்த முயற்சியைத் தொடங்கிவிட்டோம்” என்பவர், கோயில் களில் தமிழில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, இணையத்திலும் நேரடியாகவும் ஒரு கோடி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறார். தமிழில்தான் வழிபாடு, தேவைப்பட்டால் பிறமொழி வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடவிருக்கிறார் இசைமொழி.

வண்டி எண் மாற்றம்

வாரா வாரம் உறுப்பினர்களை ஒன்று திரட்டி சமூகப் பிரச்சினைகளை விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வண்டி களின் எண்களைத் தமிழ்ப்படுத்தும் வேலைகளைச் செய்துவருகிறார்கள். இதுவரை 3500-க்கும் மேற்பட்ட வண்டிகளின் எண்களைத் தமிழில் மாற்றியிருக்கிறார்கள். இதற்காகச் சென்னையில் முகாம்கள் நடத்திவருகிறார்கள்.

தமிழர் வரலாறு

தமிழர் வரலாற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், நான்கு தொகுதிகளாகத் தமிழர் வரலாற்றைத் தொகுத்திருக்கிறார்கள். வரலாற்றை எளிமைப்படுத்தி, படங்களுடன் வெளியிட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடத்திவருகிறார்கள்.

தமிழர் கலைகளை ஊக்குவிக்கும் வகை யில் தப்பாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், தமிழிசைப் பயிற்சியை ஐந்து மையங்களில் இலவசமாக வழங்கிவருகிறார்கள். 250 மாணவர்களுக்கு ‘நம் வரலாறு’ என்ற தலைப்பில் பாடத்திட்டம் அமைத்து, பயிற்சி வழங்கியிருக்கிறார்கள். துரித உணவுகளை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

“திருவள்ளுவருக்கு மாலையிட்டு, பொங்கல் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மிகப் பெரிய அளவில், குடும்பத்துடன் கொண்டாடிவருகிறோம். இந்த அமைப்பில் உள்ளவர்கள், தங்கள் குடும்பத்தினர் பெயர்களைத் தமிழில் மாற்றியதுடன், குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியும் வழங்கிவருகின்றனர். தொன்மையான தமிழ் மொழி ஏன் அழிகிறது என்ற கேள்விக்குப் பதிலாகத் தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் தொடங்கப்பட்டதுதான் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி. பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. வரலாறு தெரியாத எந்த இனமும் வெற்றிபெற முடியாது. அதனால் தமிழர் என்ற உணர்வைத் தட்டி எழுப்ப முயற்சி செய்கிறோம்” என்ற இசைமொழியின் குரலில் மாற்றத்துக்கான தேடல் அழுத்தமாக ஒலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x