Last Updated : 23 Oct, 2016 01:47 PM

 

Published : 23 Oct 2016 01:47 PM
Last Updated : 23 Oct 2016 01:47 PM

சட்டமே துணை: என் உடல் என் உரிமை

மாலதிக்குத் தலைவலி அதிகமாக இருந்தது. இரவு வெகு நேரம் விழித்திருந்ததாலும், காலையில் அதிக நேரம் தூங்கியதாலும் ஏற்பட்ட தலைவலி. மாலதிக்கும் கண்ணனுக்கும் ஒரு வருடமாக இரண்டாவது குழந்தை தொடர்பான பிரச்சினை. அதுபற்றி எப்போது பேசினாலும் கடைசியில் அது சண்டையில்தான் முடிகிறது.

இரண்டாவது குழந்தை

ஒரே பெண் குழந்தை மௌனிகாவுக்கு மூன்று வயது. அவளுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருக்கிறது. அலுவலகம், வீடு, மருத்துவமனை என்று நிற்கக்கூடநேரமில்லாத வாழ்க்கை. இதில் 31 வயதாகிவிட்டதால், அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கணவரின் எண்ணத்தை மாலதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததும், அதன் பிறகு ஏற்பட்ட உடல் ரீதியான சிரமங்களும் நினைவுக்கு வந்தன. இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள மனம் தயாராக இல்லை என்று கூறியதை, அவ்வளவு பெரிய குற்றமாகக் கருதிவிட்டார் மாலதியின் கணவன். தன் நண்பர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் திரும்பத் திரும்ப சொன்னார்.

மாலதி தன் மனமும் உடலும் தயாராக இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டார். ஆனால் தனக்கு இரண்டாவதாக மகன் பிறப்பான் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த கண்ணனால், மாலதியின் பக்கம் இருந்த நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நேற்றுதான் மாலதி கர்ப்பமான விஷயம் தெரிந்தது. ஐயோ, இது என்ன புது சிக்கல் என்று நினைத்த மாலதி, கருவைக் கலைத்துவிடலாம் என்றார்.

கண்ணன் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். “உன் இஷ்டத்துக்கு வாழ்வதாயிருந்தால் நாம் பிரிந்துவிடலாம். நீ உன் விருப்பத்துக்குக் கட்டுப்படும் ஒரு இளிச்சவாயனைப் பார்த்துக்க” என்று சொன்னபோது மாலதி நொறுங்கிப்போனார்.

ஏன் இந்த வற்புறுத்தல்?

மாலதிக்கு ஒன்று புரியவில்லை. சாப்பாட்டை மறுத்து ஓடும் மௌனிகாவைக் கட்டாயப்படுத்தினால், கண்ணனுக்குக் கோபம் வரும். பால் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால், “கட்டாயப்படுத்தாதே” என்று சொல்லி குழந்தையின் மெல்லிய உணர்வுகளை மதிப்பார். மாலதி வேலைக்குப் போவதை அவருடைய பெற்றோர் தடுத்தபோது, “காலம் மாறிவிட்டது. இருவரும் சமமாக வாழ்க்கையிலும் சம்பாத்தியத்திலும் பங்கெடுத்துக்கொண்டால்தான் குடும்பம் நன்றாக இருக்கும்” என்று சொல்லி மாலதியை வேலைக்கு அனுப்பினார். ஆனால் இன்று மனமும் உடலும் ஒத்துழைக்காத நிலையில், தன்னை மட்டும் கட்டாயப்படுத்துகிறாரே, என்ன நியாயம் என்று யோசித்தார் மாலதி.

மருத்துவரைப் பார்த்தார் மாலதி. கருத்தடை சாதனம் பயன்படுத்தியும் கர்ப்பமாகியிருப்பதாலும், மாலதி வேண்டாம் என்று கருதுவதாலும் சட்டப்படியான கருக்கலைப்பு செய்யலாம் என்றார் மருத்துவர். வீட்டுக்கு வருவதற்கு இரவாகிவிட்டது.

கண்ணனிடம், “தூங்குவதற்கு முன்பு பேச வேண்டும்” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு, மகளைக் கவனித்தார் மாலதி. பிறகு, கருக்கலைப்பு பற்றிச் சொன்னார்.

“என்ன நினைத்தாய்? நீயாகப் போய், நீயாக முடிவெடுப்பாயா? உன் வயற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா என்ற முறையில் எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன். என் பேச்சைக் கேள். இல்லாவிட்டால் நான் வீட்டுக்கே வர மாட்டேன்” என்றெல்லாம் கத்திவிட்டு, அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார் கண்ணன்.

அன்றைக்கும் மாலதியால் தூங்க முடியவில்லை. “குழந்தையைச் சாப்பிடக் கட்டாயப்படுத்தினால்கூட தவறு என்று நினைக்கும் நீங்கள், ஒரு பெண்ணை, மனைவியைக் கட்டாயப்படுத்துவது தவறு என்று நினைக்கவில்லையா? நான் என்ன குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் வைத்த இயந்திரமா? ஒரு பெண் தன் வயிற்றில் குழந்தையைச் சுமப்பதும், பெறுவதும் அவளது உணர்வுடனும் உயிருடனும் கலந்ததல்லவா? - மாலதிக்குள் இப்படிக் கேள்விகள் எழுந்தன. மீண்டும் சிந்தித்தார்.

கருக்கலைப்பு சட்டம்

மாலதி மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவர் கண்ணனை போனில் அழைத்தார். அறிவுரை கூறினார். அவரிடமும் கண்ணன் தான்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

“கவனக் குறைவாலோ, பாதுகாப்பு சாதனங்கள் இயங்காமல் போனதாலோ கர்ப்பம் ஏற்பட்டால், அந்தத் தேவையற்ற கர்ப்பத்தை 12 வாரங்களுக்குள் கலைக்க அதிகாரம் பெற்ற மருத்துவர்களுக்குச் சட்டப்படி இடமிருக்கிறது. இப்படிக் கட்டாயத்தின் பேரில் குழந்தை சுமக்க நேரும் பெண்கள், குழந்தையை ஆரோக்கியமாகப் பெற்றெடுப்பதில் சிரமமும் சிக்கலும் ஏற்படும். மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டம் (Medical Termination of Pregnancy Act) உள்ளது. பெண்களின் உடல் மற்றும் மன நலனைக் காப்பாற்றவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது” என்பதைத் தெளிவாகக் கண்ணனுக்கு விளக்கினார் மருத்துவர்.

கண்ணன் புரிந்துகொண்டார். மாலதி கருக்கலைப்பு செய்துகொண்டார். அதிலிருந்து மீண்டு வரவே ஒருவாரம் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உடலும் மனமும் தேறின. கண்ணனுக்குத் தன் மனைவி மீது மீண்டும் காதல் துளிர்த்தது. ‘என் உடல், என் உரிமை’ என்ற அடிப்படை உரிமை ஆண்களுக்கு மட்டு மல்ல; பெண்களுக்கும் பொருந்தும்!

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x