Published : 23 Oct 2016 01:46 PM
Last Updated : 23 Oct 2016 01:46 PM
தமிழ்ப் பண்பாட்டில் ‘கற்பு’ என்பது பெண்களின் மீது சுமத்தப்பட்ட ஒழுக்க வரையறை. தமிழ்நாட்டுப் பெண் குழந்தைகள் அருந்ததி, நளாயினி, கண்ணகி, சீதை கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?’ என்று மேடை போட்டுப் பட்டிமன்றம் நடத்தப்படுமே தவிர, ‘கற்பில் சிறந்தவர் கோவலனா? கண்ணகியா?’ என்று பேசக்கூட இங்கே யாரும் முன்வருவதில்லை. ‘கணவனையே கண் கண்ட தெய்வமாக வணங்குபவள் வானுலகில் தெய்வமாகக் கொண்டாடப்படுவாள்’ என்பது பெண்களுக்குச் சொல்லப்படும் செய்தி.
கற்புகள் பலவிதம்
கணவன் மாற்றாளிடம் சென்று வந்தால் அதை ஏற்றுக்கொள்வது ‘கடவுள் கற்பு’, கணவன் குற்றமற்றவன் என்று வாதாடி நிரூபிப்பது ‘பத்தினி கற்பு’, கணவன் போருக்காகவோ, கல்விக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ நீண்டகாலம் பிரிந்து சென்றால், அவன் திரும்பி வரும்வரை மனத்தையும் உடலையும் பேணிக் காத்திருப்பது ‘முல்லை சான்ற கற்பு’, கணவன் இறந்த செய்தி காதில் விழும்முன் இறப்பது ‘தலையாய கற்பு’, கணவன் சிதையுடன் நெருப்பில் இறங்குவது ‘இடையாய கற்பு’(அவள் ‘சதி மாதா’ என்று போற்றப்படுவாள்), இறந்த கணவனுக்காக, வாழ்நாள் முழுவதும் கைம்மை நோற்று, நாளுக்கு ஒரு வேளை உப்பில்லாமல் உண்பது ‘கடையாய கற்பு’ என்று பெண்ணின் கற்பை இந்தச் சமூகம் அளவிட்டுள்ளது.
ஆணும் பெண்ணும் பகைவர்கள் அல்ல
நம் மூதாதையப் பெண்களும் ‘கற்புக்கரசி’ என்று பெயர்பெற, ஆணாதிக்கச் சமூகம் விதித்த விதிக்கெல்லாம் கட்டுப்பட்டு வாழ்ந்து மறைந்தனர். ஆனால், இந்த ஆணாதிக்கச் சமூகம் கொண்டாடுவது என்னவோ தம் வீட்டுக் கற்புக்கரசிகளை அல்ல; விரல்விட்டு எண்ணக்கூடிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ள கற்புக்கரசிகளை மட்டும்தான்.
கற்பு என்ற ஒழுக்கம் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையே. இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ‘ஒருத்திக்கு ஒருவன்’ கோட்பாடு வெற்றி பெற ‘ஒருவனுக்கு ஒருத்தி’ கோட்பாடும் நடைமுறையில் இருக்க வேண்டும் அல்லவா?
உலகில் இயற்கை எல்லாவற்றையும் இரண்டாகப் படைத்துள்ளது, சூரியன் - சந்திரன், பகல் - இரவு, கறுப்பு - வெள்ளை, ஆண் - பெண், கிழக்கு - மேற்கு, நீர் - நெருப்பு என்று இரண்டாக உள்ள இயற்கையை நாம் இணை முரண்களாகப் பார்க்க வேண்டுமே தவிர, பகை முரண்களாகப் பார்க்கக் கூடாது. அதாவது, இரண்டை இரண்டாகப் பார்க்கும் பொதுப் பார்வை வளர வேண்டுமே தவிர, இரண்டையும் பகையாகப் பிரித்துப் பார்க்கக் கூடிய பார்வை கூடாது. ஆணும் பெண்ணும் எதிரெதிரான முரண் இணைகள் தவிர, பகைவர்கள் இல்லை. அதனால்,பெண்ணுக்கு எவையெல்லாம் விதிக்கப்பட்டுள்ளனவோ அவற்றையெல்லாம் ஆண் சமூகமும் தமக்குரியனவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பாரதியார் பார்வையில்
இருபாலரும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில், ஒருபாலருக்கு ஒழுக்கக் கட்டுப்பாடும், இன்னொரு பாலருக்குக் கட்டுப்பாட்டில் விதிவிலக்கும் இருந்தால், நடைமுறையில் ஒழுக்கத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பது சாத்தியப்படுமா? பாரதியார் தம் ‘பதிவிரதை’ என்ற கட்டுரையில், ‘அட பரம மூடர்களே, ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும்? கற்பினைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லட்சம் ஜனங்கள். ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள்.
ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். இதில் நாற்பதாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இட்சிப்பதாக வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் நாற்பதினாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின் இச்சைக்கு இடமாக வேண்டும்’ என்று வேடிக்கையாகக் கூறியவர், பெண் கற்பு பேணுவதில் ஆணுக்கும் மிகுதியான பங்கு உண்டு என்று இதன் மூலம் உணர்த்தியுள்ளார். ஒன்றை ஒன்று சிதைக்கும்போதும், ஒன்றை ஒன்று மீறும்போதும் ‘ஒழுக்க விதிகள்’ ‘ஒடுக்க விதி’களாகி விடுகின்றன. கற்பு என்பது இருபாலருக்கும் உரிய ஒழுக்க விதியாக அங்கீகரிக்கப்படும்போதுதான், அது உண்மையில் உயிர்பிக்கப்படும்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT