Last Updated : 02 Oct, 2016 12:24 PM

 

Published : 02 Oct 2016 12:24 PM
Last Updated : 02 Oct 2016 12:24 PM

சட்டமே துணை: தம்பி வேணுமா, தங்கை வேணுமா?

முதல் குழந்தையிடம், “தம்பி வேணுமா, தங்கை வேணுமா?’’ என்று கேட்பது நம் சமூகத்தில் வாடிக்கை. பெரும்பாலும் பலரும் முதல் குழந்தை ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். முதல் குழந்தை எதுவானாலும் பரவாயில்லை என்றும் நினைப்பவர்களும் உண்டு. பெரியவர்கள் வெளிப்படையாகவே தங்களுக்குப் பேரன்தான் வேண்டும் என்று சொல்வார்கள். ஒருவேளை பெண் பிறந்துவிட்டால், “பெண்தான் நல்லது, பெற்றோர்களைப் புரிந்துகொண்டு, வயதான காலத்தில் கைவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். பாசமும் அன்பும் காட்டக்கூடியவர்கள் ஆண்களைவிட பெண்கள்தான்” என்ற கருத்தும் பொதுப்புத்தியில் வர ஆரம்பித்துள்ளது.

மலரும் வாணியும் தோழிகள். வாணிக்கு இத்தனை நாட்கள் குழந்தையில்லாமல், நான்காவது ஆண்டில் கருத்தரித்தரித்ததில் மலருக்கு மகிழ்ச்சி. வாணிக்கும் அவள் கணவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் குறை. அது வாணியின் மீதான சுமையாக மட்டுமே ஆனது. வாணி தன் அம்மா வீட்டில் நான்கு மாதங்கள் தங்கியிருந்ததும், சமாதானப் பேச்சுகளுக்குப் பிறகு கணவன் வீட்டுக்கு வந்ததும் மலருக்குத் தெரியும். இப்போது வாணி கர்ப்பமாகியிருக்கும் விஷயம், மலருக்கே நிம்மதியாக இருந்தது. வாணியின் மாமியார் அவளை மிக நன்றாகக் கவனித்துக்கொண்டார். ஆனால் ஓரிரு மாதங்களுக்குக்கூட அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

நீடிக்காத மகிழ்ச்சி

வாணியின் மாமியார், தான் அழைத்துப் போகும் மருத்துவரிடம்தான் காட்ட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். வாணியின் கணவன் பிறந்த அதே மருத்துவமனைதான் ராசி என்றார். வாணியின் அம்மாவால் மறுக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் என் மகனுக்குப் பையன்தான் பிறப்பான்! நான் கும்பிட்ட தெய்வங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் என்று வெளிப்படையாகவே சொன்னார். ஸ்கேன் எடுக்கப் போகும்போதே மாமியாருக்கு என்ன குழந்தை என்று அறிய விருப்பம். ஸ்கேன் மையத்தில், ‘வயிற்றில் வளரும் கருவின் பாலினம் கண்டிப்பாகச் சொல்லப்படமாட்டாது. அவ்வாறு கேட்பதும் தெரிவிப்பதும் சட்டப்படி குற்றம்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பலகை மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் வாணிக்கு நிம்மதி ஏற்பட்டது.

ஸ்கேனிங் முடிந்தது. குழந்தை நன்றாக இருப்பதாக ரிப்போர்ட் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு, செக்கப்புக்கு வரும்படி அனுப்பிவிட்டார்கள். மீண்டும் 16-வது வாரம் ஸ்கேன் எடுக்கலாம் என்று வாணியை அழைத்தார் மாமியார். மருத்துவர் ஸ்கேன் எடுக்கச் சொன்னது போல் வாணிக்கு ஞாபகமில்லை. இருந்தாலும் மாமியாருடன் சென்றாள். இந்த முறை ஸ்கேன் மையத்தில் அந்தப் பெண், நன்றாகக் கவனித்தார். வாணியின் மாமியார் பிரசாதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

ஸ்கேன் முடித்து வெளியே வந்தபோது, மாமியாரிடம் அந்தப் பெண், “எல்லாம் நல்லாயிருக்கு, வெள்ளிக்கிழமைதான் ரிப்போர்ட் ரெடியாகும்” என்றார். வாணி வீட்டுக்கு வந்தவுடன் களைப்பில் தூங்கிவிட்டார். வழக்கமாக மாலையில் பால் கொடுக்கும் மாமியார், இன்று கண்டுகொள்ளவில்லை.

“ரொம்பத் தூங்கினால் உடம்பு மந்தமாகிடும். குழந்தைக்கும் நல்லதல்ல. ஓடியாடி வேலை செய்தால்தான் குழந்தை நன்றாகப் பிறக்கும். பெண் குழந்தைன்னா அவங்க குடும்பத்து ராசியாதான் இருக்கும். நமக்கு விதி அப்படி வாய்ச்சிருக்கு என்றால் என்ன செய்யமுடியும்?” என்று வெறுப்பை உமிழ்ந்தார் மாமியார்.

வாணிக்குக் காரணம் மெதுவாகப் புரிந்தது. மலரிடமும் சொன்னாள். பெண் குழந்தைதான் பிறக்கும் என்று முடிவே செய்துவிட்டது போல் வாணியின் மாமியார் வெறுப்புடனும் பாரபட்சத்துடனும் நடந்துகொண்டார்.

நான்காம் மாதம்தான் ஆகிறது, இந்தக் குழந்தை பிறந்தால் பெற்றவனுக்குக் கஷ்டகாலம் என்று ஜோசியர் சொல்வதாகவும் கூறினார். ஏழாவது மாதமே வாணியின் தாய் வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டார். வாணிக்கும் எப்போது அம்மா வீட்டுக்குப் போகலாம் என்றாகிவிட்டது.

பெண் என்றால் செலவா?

மலருக்கு அந்த ஸ்கேன் மையத்தின் மீது எரிச்சலும் ஆத்திரமும் அதிகமானது. பல நகர்ப்புற ஸ்கேன் மையங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, பாலினம் பற்றிச் சொல்வதை அறிந்தாள். வரவு, ஞாயிற்றுக்கிழமை என்று குறிப்பிட்டால் பையன் என்றும், செலவு, வெள்ளிக்கிழமை என்றால் பெண் என்றும் அறிந்தாள். குழந்தை பிறந்த பின்னர் வாணிக்கு நடந்த கொடுமைகளை, அவள் மருத்துவரிடம் சொன்னாள். அவருக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்றார்.

விஞ்ஞான வளர்ச்சியை முறைதவறிப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளில் பல லட்சம் பெண் குழந்தைகள் இந்தியாவில் பிறக்காமல் மரித்துவிட்டன. குழந்தை பிறப்புக்கு முந்திய சோதனைகள் (கருத்தெரிவு தடை) சட்டம், நெறிப்படுத்தவும் தண்டிக்கவும் 1994-ம்

ஆண்டு இயற்றப்பட்டு, நடைமுறையிலும் உள்ளது. இந்தியா முழுவதும் வலுவான புகார்கள் அரசுத் துறைகளையும் இதற்கான நியமிக்கப்பட்டுள்ள கமிட்டிகளையும் கேள்விக்குள்ளாக்கியபோதுதான், சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மருத்துவர்களையும் ஸ்கேன் மையங்களையும் தடை செய்தனர். கைது நடவடிக்கைகளையும் சட்டத்தின் மூலம் எடுத்தனர். இதற்கு 1800-110-500 என்ற

புகார் எண்ணையும் அரசு அறிவித்து, இணையத்திலும் வெளியிட்டுள்ளது. இப்படிபட்ட நிகழ்வுகள் நமக்குத் தெரியும்போது, புகார்களைத் தருவதும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதும்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரே வழி. அதன் மூலம்தான் பிறக்காமலே மரித்துப் போகும் லட்சக்கணக்கான குழந்தைகளைப் பிறக்க வைக்க முடியும்.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x