Published : 16 Oct 2016 03:21 PM
Last Updated : 16 Oct 2016 03:21 PM
பல வண்ண நூல்களை வைத்து செய்யப்படும் எம்ப்ராய்டரி கலை தெற்காசியாவின் அனைத்து நாடுகளிலும் பிரபலமாக இருக்கிறது. இலங்கையில் கண்டியன் சிங்ஹலா என்று அழைக்கப்படும் இந்தக் கலை 2500 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. அழிவின் பிடியில் இருக்கும் இந்தக் கலையைக் காப்பாற்றவே எம்ப்ராய்டரி கைவினைக் கலையைக் கையிலெடுத்ததாகச் சொல்கிறார் சுவர்ண ஜெயந்தி.
சென்னை கலாக்ஷேத்ராவில் அக்டோபர் 2-ம் தேதிவரை நடைபெற்ற கைவினைப் பொருள் கண்காட்சியில் இலங்கை சார்பில் தன் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தியிருந்தார் சுவர்ண ஜெயந்தி. பார்க்க எளிமையாத் தோன்றினாலும், பாரம்பரிய கைவினைக் கலைகளின் பின்னணியில் நீண்ட வரலாறும் உழைப்பும் இருக்கின்றன.
“இந்தியாவிலிருந்து பருத்தி நூல்களை இறக்குமதி செய்து, அதனை வேண்டிய நிறங்களில் விரும்பிய வடிவங்களில் எம்ப்ராய்டரியாகச் செய்கிறேன். இதனைக் கொண்டு குஷன் கவர்கள், பல வண்ணப் பைகள் செய்கிறேன். இலங்கையில் மணப்பெண்ணின் உடையில் எம்ப்ராய்டரி இடம்பெறுவது பெருமைக்குரிய விஷயம். அதையே தொழிலாக மாற்றிக்கொண்டேன்” என்று சொல்லும் சுவர்ண ஜெயந்தி, தான் செய்கிற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தத் தனிக் கடையே வைத்திருக்கிறார்.
“ஒவ்வொரு புடவைக்கும் தனித்துவமாக எம்ப்ராய்டரி செய்து தருவதால் நிறைய ஆர்டர்கள் கிடைக்கின்றன. தற்போது எம்ப்ராய்டரி நூல் ஓவியங்கள் வரைந்துவருகிறேன். பழங்கால சரித்திர ஓவியங்களை ஆராய்ந்து, அதனை அப்படியே துணியில் எம்ப்ராய்டரி ஓவியங்களாக மாற்றிவிடுவேன். ஒரு ஓவியம் வரைய 10 முதல் 15 நாட்கள் ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை இலங்கை அரசின் சிறந்த கைவினைக் கலைஞருக்கான விருது பெற்றுள்ளேன்” என்று சொல்கிறார் சுவர்ண ஜெயந்தி. இவர் கொழும்பு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களின் முக்கியப் பயிற்சியாளராகவும் விளங்குகிறார்.
இளைஞர்களிடம் சென்று சேராத கலை வழக்கொழிந்துவிடும் என்பதால், இளைஞர்களுக்கு இந்தக் கலையைப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டுகிறேன். இதற்கான சந்தை வாய்ப்புகளையும், கலையின் பாரம்பரியத்தையும் புரியவைத்த பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். என்னுடைய கடையில் பெண்களுக்கே முன்னுரிமை கொடுத்து நியமனம் செய்கிறேன். இந்த வருமானம் என் குடும்பத்துக்குப் பக்கபலமாக இருக்கிறது” என்று சொல்லும் சுவர்ண ஜெயந்தி, சென்னையில் தங்கியிருந்த ஒரு வார காலமும், இங்குள்ள கலைஞர்களுக்கு, தங்கள் மண்ணின் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார்!
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT