Published : 02 Oct 2016 12:25 PM
Last Updated : 02 Oct 2016 12:25 PM
விளையாட்டுத் திடலில் அதிர்ந்த இசையும் மாணவியரின் ஆர்ப்பரிப்பும் வகுப்பறையில் அமைதியைக் கலைக்க, ஜன்னலருகே சென்று பார்த்தேன். விளையாட்டை மறந்து மாணவியர் உடலை அலாதியாக்கி ஆடிக்கொண்டிருந்தனர். அது ஒரு கல்லூரி கலை விழாவை நினைவுபடுத்தியது.
ஆண்கள் என்றால் விளையாட்டு என்ற பிம்பம் நினைவுக்கு வந்தது. விளையாட்டுத் திடலை நடன மைதானமாக்கி, விளையாட்டை மறந்த பெண்களின் பேதமை மறுபக்கம் நினைவில் அசைந்தது. காலங்காலமாக வீடுகளில் முடக்கப்பட்டு, ஆடவும் பாடவும் அனுமதி மறுக்கப்பட்டு, உடலைக் குடும்பச் சொத்தாக எண்ணிச் சோர்வு அடைந்து, சப்தமற்று வாழும் பெண்களின் தலைமுறையை எண்ணிப் பார்த்தேன். விளையாட்டுப் போட்டிக்கு யார் வருகிறீர்கள் என்றால் முன்வராத இளந்தலைமுறைப் பெண்கள் இவர்கள். அனுமதி மறுக்கப்பட்ட குடும்ப வெளி மறந்து, விளையாட்டுத் திடலை ஆட்டக் களமாகப் பார்க்கும் பெண்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?
எது சுதந்திரம்?
பெண்ணுக்கு விளையாட்டு மறுக்கப்படுகிறது என்றாலும், ஆட்டம் பாட்டம் வாய்த்திருக்கிறது என்று புளகாங்கிதம் அடைகின்றனர். அது ஆணின் பொதுவெளி சுதந்திரத்தோடு ஒப்பிடத்தக்கதல்ல என்ற புரிதலும்கூட இல்லாமல் மாணவியர் உற்சாகப்படுவதும் ஆர்ப்பரிப்பதும் குறைந்த அளவு சுதந்திரமாகக் கருதப்படுகிறது.
21 வயது வரையிலான கல்லூரிக் காலம் என்றும் பசுமையான பூந்தோட்டம். இந்த வயதில் பெண்களின் கருத்தும் கலை உணர்வும் நுண்திறனும் அபாரமாக இருக்கும். ஏனென்றால் பள்ளி இறுதிப் பருவம் வரை ஆசிரியர் கட்டுப்பாட்டிலும் பெற்றோரின் பாதுகாப்பிலும் கண்காணிக்கப்படுகிறார்கள். மதிப்பெண் மட்டுமே உயரிய லட்சியமாக இருக்கிறது. ஆனால் கல்லூரியில் பேராசிரியர்கள் படிப்பதையும் சுயமாகச் சிந்திப்பதையும் பிற துறை வல்லமையை வளர்த்துக்கொள்வதையும் ஊக்கப்படுத்துகிறார்கள். இதன் ஆரம்பம்தான் கலை விழா. நாட்டுப்புறக் கலை, கர்னாடக இசை, மேற்கத்திய இசைப் பாடல்கள், இசைக் கருவிகளின் தேர்ச்சி போன்றவை நவீனத்துவ வாழ்க்கையோடு பொருந்தி, விடுதலை உணர்வோடு சுவாசிக்கப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
அண்மையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து, சாக்ஷி மாலிக் போன்ற இந்தியப் பெருமை காக்கும் வீராங்கனைகள் வளர்ந்துவருவது, பெண்கள் விடுதலை அடைந்துவருகிறார்கள் என்பதற்கான ஆரம்பப் புள்ளிதான்.
நாணம் விடைபெறட்டும்
ஆயினும் சமூகத்தின் பெருவெளியில் குடும்பத்துக்குள் சிறைவைக்கப்படும் பெண்கள்தான் அதிகம். பேச்சுரிமையற்று, பெற்றோரின் எதிர்பார்ப்புக்குள் தங்கள் சுய அடையாளத்தை இழந்து, குடும்பத்தோடு ஒன்றி வாழும் சூழல்தான் தொடர்கிறது. பருவமடைந்த சில ஆண்டுகளில் பட்டப் படிப்பு முடித்ததும் பணிக்குச் செல்ல நிர்ப்பந்திப்பதும், பணிக் காலங்களில் சேமிப்பை மையப்படுத்தி இயங்குவதும், பெண் தனக்கான தனி ‘வெளி’ உருவாக்கிக்கொள்ள இயலாமல் புழுங்குவதும், பெற்றோரிடம் அதைச் சொல்ல முடியாமல் தவிப்பதும் சேர்ந்து அவர்களின் நிலை இருட்டறை வாழ்வாகவே இருந்துவிடுகிறது.
இத்தகைய பெண்கள் கல்லூரிக் காலங்களில் பொதுமேடையில் கூச்சமற்று, உடலைக் காம நுகர்வுப் பொருளாகப் பார்க்காது ஆடிய அதே மன ஆர்ப்பரிப்போடு சுதந்திரமாக இயங்குகிறார்களா என்று யோசிக்க வேண்டும். பெண் தன்னுடைய ஆசையை, கனவை, கற்பனையைச் செயல்படுத்த அனுமதிக்கின்றனவா குடும்பங்கள்?
படித்த பெண்கள் சுயமாக முடிவெடுக்க, நட்பு பாராட்ட எது தடையாக இருக்கிறது? படிக்கச் சென்றாலும் பணிக்குச் சென்றாலும் தந்தை, சகோதரன், கணவன், காதலன் கவனிப்பு பெண்கள் மீது கூடுவதற்குச் சமூகம் ஏன் கட்டாயப்படுத்துகிறது? தங்களுடைய பொருளாக, ‘மற்றவை'யாகப் பெண் இருப்பதை ஏன் ஆண்கள் விரும்புகிறார்கள்? பாலியல் வல்லுறவும் வல்லுறவு இறப்பும் பெண்களை அச்சுறுத்துகின்றனவே ஏன்? கல்லூரிகளில் யதார்த்தப் பண்பாட்டு அசைவினூடாகத் தொடர்ந்து பயணிக்க முடியாமல் தடுப்பதன் பின்னால் தந்தைமை அதிகாரமும் ஆணாதிக்க மனோபாவமும்தானே காரணமாகின்றன?
சமூகம் ஆணையும் பெண்ணையும் சமதளத்தில் இயக்க வேண்டும். அதில் ஆண், பெண் பால் பேதமின்றி, அறிவை மட்டும் ஊட்ட வேண் டும். பகுத்தறிவுடன் நானென்று பேசப் பெண் தயாராக வேண்டும்.
தற்சுதந்திரம், தனித்து முடிவெடுக்கும் திறன்களைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். 21 வயதுக்குள் பெண்ணின் வாழ்வு முடிவதல்ல. அது ஆரம்பம். இதில் காமமும் காதலும் மையம். சமூகப் பொறுப்பும் கடமையும் புரிந்துணர்வோடு கவனம்பெற வேண்டும். பெற்றோரின் எதிர்பார்ப்பு நிறைவுபெற வேண்டும். ஜனநாயகம் வென்று மானுடம் வலிமையுற வேண்டும். ஆண் விளையாடலாம், பெண் நடனமாடலாம் என்ற கற்பிதத்திலிருந்து முதலில் பெண் மாற வேண்டும். அத்தகைய புரிதலோடு 21 வயதைப் பெண்கள் எதிர்கொள்ள, கல்லூரி அனுபவம் கைகொடுக்கட்டும். அந்த அனுபவம் பகுத்தறிவு அதிரும் பறை ஒலியாகட்டும். இசையதிர்வில் நாணம் விடைபெற்று, அறிவு விசாலமாகட்டும்.
கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: arangamallika@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT