Last Updated : 02 Oct, 2016 12:25 PM

 

Published : 02 Oct 2016 12:25 PM
Last Updated : 02 Oct 2016 12:25 PM

சமத்துவம் பயில்வோம்: உருவாக்கப்படுகிறாள் பெண்!

குழந்தைகளை வளர்க்கும்போது பெரும்பாலான பெற்றோர் பாலினப் பாகுபாட்டையும் சேர்த்தே வளர்த்தெடுக் கிறார்கள். ஆறு மாதக் குழந்தையிலிருந்து ஆடைகளில் வேறுபாட்டைக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆண் குழந்தைகளுக்குக் கால் சட்டையும் பெண் குழந்தைகளுக்கு கவுனும் அணிவித்து அழகு பார்க்கின்றனர். இருபால் குழந்தைகளுக்கும் காது குத்தும் நிகழ்ச்சி நடத்தினாலும் ஆண் குழந்தைகளுக்கு விரைவில் காதணியைக் கழற்றிவிடுவார்கள். பெண் குழந்தைகள் இரண்டு வயது முதல் மறைவிடத்தில் சிறுநீர் கழிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் ஆண் குழந்தைகள் வெளியிலோ, பொது இடங்களிலோ சிறுநீர் கழிப்பதைத் தடுக்கவோ, மாற்றவோ இந்தச் சமூகம் முற்படுவதில்லை. அதனால், பல ஆண் குழந்தைகள் பெரியவர்களான பின்பும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். அதற்காக வெட்கப்படுவதோ, வருத்தப்படுவதோ இல்லை. சிறுமியர் வெளியில் சிறுநீர் கழிப்பது தடைசெய்யப்படுவதால், அவர்கள் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்த பிறகுதான் சிறுநீர் கழிக்கப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்கள் அடிக்கடி வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். இப்படிக் கட்டுப்படுத்துவதால் நாளடைவில் சிறுநீர்ப்பையின் செயல்திறன் மங்கிவிடுவதும் உண்டு.

ஆண் குழந்தையை மடியில் வைத்திருக்கும்போது, அது மேல்நோக்கி சிறுநீர் கழித்து, முகத்தை நனைத்துவிடும். அதைப் பெரியவர்கள் பன்னீர் தெளிப்பதாகச் சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள். ஆண் குழந்தை மடியில் மலம் கழித்துவிட்டால், தங்கள்மீது சந்தனம் தெளிப்பதாக மகிழ்ச்சி அடைவார்கள். பெண் குழந்தை மடியில் மலம் கழித்துவிட்டால், திட்டிக்கொண்டே துணி மாற்றுவார்கள்.

ஆண் குழந்தைகள் விளையாடுவதற்கு கார், ரயில், துப்பாக்கி போன்றவற்றை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர், பெண் குழந்தைகளுக்கு மரப்பாச்சி, சொப்பு பொம்மைகளைத்தான் வாங்கிக் கொடுக் கிறார்கள். இந்த நவநாகரிக உலகில் ஆண் குழந்தைகளுக்கு வீரதீரச் செயல்களைச் செய்யும் சிலந்தி மனிதன், இரும்பு மனிதன் போன்ற பொம்மைகளையும் பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகளையும் வாங்கித் தருவார்கள். மேலும் சிறுவர்களுக்கு கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால், ஹாக்கி, ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளைக் கற்பிப்பார்கள். பெண் குழந்தைகளுக்குப் பூப்பந்து, வளைபந்து, எறிபந்து போன்றவற்றையே கற்றுக்கொடுப்பார்கள். அதாவது வலிமையான விளையாட்டுகளைச் சிறார்களுக்கும் மென்மை யான விளையாட்டுகளைச் சிறுமியருக்கும் கற்றுக் கொடுப்பது பரவலான சமூகப் பழக்கம்.

அடங்கிப் போக வேண்டுமா பெண்?

சிறுவர், சிறுமியருக்குச் சொல்லும் கதைகளிலும் பாலினப் பாகுபாடு மிதமிஞ்சிக் காணப்படுகிறது. என் பாட்டி கூறிய கதை இது:

ஒரு தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை. பல சமயங்களில் கணவன் தன் மனைவியை அடித்து உதைப்பான். அருகிலிருக்கும் வைத்தியரிடம் அழைத்துச் சென்றார் அவள் அம்மா. வைத்தியரும் ஒரு புட்டி நிறைய மருந்து கொடுத்து, “உன் கணவன் சண்டையிட ஆரம்பித்தவுடன் இந்த மருந்தை உன் வாயில் ஊற்றிக்கொண்டு முழுங்காமல் வைத்துக்கொண்டிரு. உன் கணவன் சண்டையிட்டு முடித்தவுடன் முழுங்கிவிடு. இந்த மருந்து தீர்ந்தவுடன் என்னிடம் வா” என்றார். அவளும் அதேபோன்று செய்தாள். மருந்து தீர்ந்தவுடன் வைத்தியரிடம் வந்தாள். வைத்தியர், “என்னம்மா, வீட்டில் சண்டை குறைந்திருக்கிறதா?” என்று கேட்டார். “இது நல்ல மருந்தாக இருக்கிறது. சண்டை குறைந்துவருகிறது. இன்னொரு புட்டி மருந்து தாருங்கள்” என்றாள். வைத்தியர் சிரித்துக்கொண்டே, “அம்மா, இது வெறும் தண்ணீர்தான். உன் கணவர் சண்டையிடத் தொடங்கியதும் வாய் நிறைய தண்ணீர் இருப்பதால் நீ பதில் பேச்சு பேசாமல் இருந்தாய், அதனால் அவன் அடங்கிவிட்டான். பதிலுக்குப் பதில் பேசினால்தான் சண்டை. நீ பேசாமல் இருந்தால் சண்டை குறையும்” என்றார். இந்தக் கதையின் மூலம் பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்ற அறிவுரை நல்கப்படுகிறது.

ஆணுக்குச் சண்டைபோட உரிமை உண்டு; பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் சிறுவயதிலேயே பெண்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இத்தகைய போக்கு நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் காணப்படுகிறது. இதை மனதில் வைத்துதான் சிமோன் து பூவா என்ற பிரஞ்சு பெண்ணியவாதி, “பெண் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள்” என்கிறார். இதனை உணர்ந்துகொண்டு, சமூகம் கட்டமைக்கும் ஆண்மை, பெண்மை என்ற செயற்கையான கருத்துருவாக்கங்களைக் கட்டுடைக்கப் பெற்றோர் முன்வர வேண்டும்.

கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x