Published : 02 Oct 2016 12:25 PM
Last Updated : 02 Oct 2016 12:25 PM

என் பாதையில்: திறந்துவிட்டது சீசே!

சமீபத்தில் ‘கிண்டில் ரீடிங் கிட்’ எனப்படும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து படிக்க உதவும் கருவியை வாங்கித்தரச் சொல்லி என் மகன் கேட்டபோது, ஏனோ சரியென்று சொல்ல மனம் வரவில்லை. என்னைச் சம்மதிக்க வைக்க அவன் எவ்வளவோ முயற்சி செய்தான். கையடக்கத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். புத்தகங்களைப் போல இடத்தை அடைக்காது. இன்னும் எவ்வளவோ… ஆனால் மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லை.

என் வாழ்க்கையில் புத்தக வாசிப்பு என்ற சுகானுபவத்தைத் தடைசெய்ய எவ்வளவோ நிகழ்ச்சிகள். “பொம்பளைப் புள்ளைங்க என்ன கதைப் புத்தகம் படிக்கிறது? இது என்ன பழக்கம்?”- இது பிறந்த வீட்டு உறவினர்கள். “எங்க வீட்ல நியூஸ் பேப்பர்கூட வாங்க மாட்டோம்” - இது புகுந்த வீடு. பணி நிமித்தமாகப் பிற மாநிலங்களில் வாசம். அத்தனையும் தாண்டி எனக்கும் புத்தகங்களுக்குமான உறவு நீடிக்கிறது.

புத்தகத்தை வாங்கியவுடன் அதைத் தடவ வேண்டும். பிறகு பிரித்து முகர்ந்து பார்க்க வேண்டும். அதிலும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒவ்வொரு வாசனை. பாடப் புத்தகங்களுக்கு, கதைப் புத்தகங்களுக்கு என்று பிரத்யேக வாசனை உண்டு. பின் அதனை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே படிக்க ஆரம்பிக்க வேண்டும். “உன்னுடைய கிண்டில் எனக்கு உயிரற்றதாகவே தோன்றுகிறது” என்றேன் மகனிடம். அவன் சிரித்தபடியே சென்றுவிட்டான்.

திருமணமான புதிதில் என் கணவர், எனக்காக முதன் முதலில் வாங்கிவந்த புத்தகத்தை மூன்று நாட்களாக நான் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. அதனால் அவருக்குக் கோபம். அவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். How to repair the washing machine? என்ற புத்தகத்தை வாங்கியிருந்தார். அதற்குப் பிறகு வாங்கிக் கொடுத்த புத்தகம் சத்திய சோதனை. சத்தியமாக இதற்கு மேல் தாங்காது என்று புத்தகங்களைப் பரிசாகத் தருவதைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

புத்தகங்களை வாங்குவதற்குள், நான் படும்பாடு எப்போதுமே எரிச்சலடைய வைக்கும். பாடப் புத்தகங்களைத் தவிர்த்து மற்றவை எங்கு கிடைக்கும் என்பதுகூடத் தெரியாது. எனவே பொது நூலகம் ஒன்றே கதி மோட்சம்.

என் கணவர் பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு செல்லும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வருவார். சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறும் போதெல்லாம் அவர்கள் மட்டும் என்ன உசத்தி என்று தோன்றும். தற்போது மதுரை, சேலம், ஈரோடு, கோவை என்று புத்தகக் காட்சி நடைபெறுவது மிகப்பெரிய சந்தோஷம். ஒவ்வொரு புத்தகக்காட்சிக்கும் பொற்கிழி வேண்டிய தருமி போலவே செல்வேன். “எனக்கில்ல… எனக்கில்ல…” என்றபடியே உள்ளே போவேன். திரும்பி வரும்போது குகை சென்று மீண்ட அலிபாபா போன்று அள்ளிக்கொண்டு வருவேன்! கோவையில் புத்தகக் காட்சி தொடங்கியதுமே புத்தகங்களின் பட்டியலைத் தயாரித்துவிட்டேன். திறந்துவிட்டது சீசே!

- சஞ்சலா ராஜன், கோயம்புத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x