Published : 23 Oct 2016 01:41 PM
Last Updated : 23 Oct 2016 01:41 PM

விவாதக் களம்: இருவரின் பெற்றோரையும் அரவணைக்க வேண்டும்

பொருளாதாரத் தேவைகளுக்காக கணவரை நம்பியிருக்கும் பெற்றோரைப் பிரிந்து வரும்படி மனைவி நிர்பந்தித்தால், அவரை விவாகரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் சொல்லியிருந்தத்து. அதற்கு ஆதரவாகும் எதிராகவும் பலர் குரல் எழுப்பினார்கள். ஒரு வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இப்படிக் குறிப்பிட்டிருப்பது சரியா என்று நம் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு…

கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் மாமியார், மாமனார் உதவி நிச்சயமாகத் தேவைப்படும். ஏதோ சில பெற்றோர்கள் பாதிக்கப்பட்டதற்காகத் தனி சட்டமெல்லாம் தேவையில்லை. சில பெற்றோர்களே தனியாக, சுதந்திரமாக இருப்போம் என்று நினைக்கின்றனர். உடல்நிலை சரியில்லாத, பண வரவு இல்லாத பெற்றோர்களைப் பிரிக்கும் மருமகளிடமிருந்து அந்த வயதானவர்களைப் பாதுகாக்க இந்தச் சட்டம் தேவைப்படலாம்.

- ஜானகி ரங்கநாதன், மயிலாப்பூர்.



பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் தன் வாழ்க்கைப் புத்தகத்தில் பின்பக்கம் தள்ளிவிட்டு, கணவனையும் அவன் சார்ந்த உறவுகளையும் முதல் பக்கமாக நினைத்து நுழைபவளுக்கு எத்தனை கொடுமை? மாமியார், மாமனார் என்னும் உறவுகளிடமிருந்து புறப்படும் வரதட்சணை என்ற கொடிய நோயிலிருந்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே பெரும்பாலான பெண்கள் தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்துகிறார்கள். மனைவியின் பெற்றோரைத் தம் பெற்றோராகப் பார்த்துக்கொள்ளாத கணவனுக்கு எந்த நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறது?

- ஆர்.ஹேமா, வேலூர்.



ஒரு மகள் அடுத்த வீட்டுக்குப் போனாலும், இன்னொரு மகள் வருவதால்தானே மருமகள் என்கிறோம். நெற்பயிரைப் பிடுங்கி நடும்போதுதான் வீரியமாகும். ஒரு பெண் புகுந்த வீட்டைப் பராமரிப்பதே பெருமை. தனிக்குடித்தனம் பல வகையில் சுதந்திரம் கொடுத்தாலும், அதன் விபரீத விளைவுகளை நடைமுறையில் இன்று பார்க்கும்போது, கூட்டுக் குடும்பத்தின் அருமைபுரிகிறது. புகுந்த வீட்டில் பிரச்சினை என்றால் சட்டப் பாதுகாப்பு இன்று பலமாக இருக்கிறது. மறுமணம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பெண்ணுக்காக மூக்கைச் சிந்துவதோ, அனுதாபம் தேடுவதோ பிற்போக்குத்தனம்.

- யாழினி பர்வதம், சென்னை.



ஒருதலைப்பட்சமாகவும் அபத்தமான தீர்ப்பாகவும் உள்ளது. கணவனோடு அன்னியோன்யமாக இருக்க முடியாமல் எத்தனை பெண்கள் புகுந்த வீட்டில் கொடுமைக்குள்ளாகிறார்கள்? வருமானமற்ற, ஒற்றைப் பெண்ணைப் பெற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்களா? எந்தத் தவறானாலும் பெண்ணே குற்றவாளி என்று சொல்லும் சமூகம், பெண்ணுக்குப் பதிலுக்கு என்ன செய்கிறது? சமூகக் கட்டுப்பாடும் சமூக நீதியும் பெண்ணுக்குக் கணவனின் உறவுகளைப் போற்றிப் பாதுகாப்பதே கடமை என்று போற்றுகின்றன.

பெண்ணின் வருமானத்தில் அவள் பெற்றோருக்கு 50% தர, எந்தப் புகுந்த வீட்டினராவது ஒப்புக்கொள்கிறார்களா? ஆணும் பெண்ணும் சமம் எனில் திருமணமான ஆண் தன் வீட்டாரைக் கவனிப்பதுபோல, பெண் தன் பிறந்த வீட்டாரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறதா? நீதி அனைவருக்கும் பொதுதானே?

- ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.



என் உறவினர் குடும்பத்தில் மகளின் புகுந்த வீட்டினருடன் இணைந்து ஆன்மிகப் பயணம், சுற்றுலா என்று பயணித்துக்கொண்டே இருப்பார்கள். புரிதலுடன் இருந்துவிட்டால் இந்தக் கேள்விக்கு இடமில்லை. மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். ஒட்டினால் தொட்டிலும் கொள்ளும், ஒட்டாவிட்டால் கட்டிலும் கொள்ளாது.

- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.



திருமணம் என்ற பந்தத்தின் பெயரால், தன் அனைத்து உறவுகளையும் மறந்து, கணவரின் உறவுகளையே தன் உறவுகளாக ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய நிர்பந்தம் நம் சமூகத்தில் பெண்களுக்கு மட்டும்தான். பெண் தன் பெற்றோரை மறந்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளையும் மாமியாரும் எதிர்பார்க்கிறார்கள். பிறந்தது முதல் ஒரு சூழலில் வளர்ந்தவள், மணமான பின் வேறொரு சூழலில் புதிய உறவுகளுடன் இயல்பாக இருக்க முடியாமல் தவித்துப் போய்விடுகிறாள். கணவன் வீட்டார் அப்போது அரவணைத்து ஆறுதல் அளித்தால், அவளுக்கு ஏன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற எண்ணம் எழப் போகிறது? மருமகளைப் பிறந்த வீட்டுடன் ஒட்டவிடக் கூடாது என நினைக்கும் மாமியார்களால் மருமகள்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடியும்போது, தனிக்குடித்தனம் போக நினைப்பது ஒரு வகையில் நியாயம்தான். இப்படிப்பட்ட புகுந்த வீட்டினரின் நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் அறிந்திருந்தால், இப்படி ஒரு தீர்ப்பு வழங்காதிருந்திருக்குமோ?

- கஸ்தூரி, புதுச்சேரி.



இந்த வினோதமான தீர்ப்பில் பெண்களுக்கு உண்டாகும் பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது. ஆண்களுக்கு உண்டாகும் பாதிப்பு அமைதியாக உறங்கிக் கிடக்கிறது. பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒரு குழந்தைதான் இருக்கிறது. பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்து திருமணத்துக்குப் பின் கணவனா, பெற்றோரா என்ற நிலை வரும்போது பல மகள்கள் துணிந்து பெற்றோரைத்தான் தேர்வு செய்கிறார்கள்.

பெற்றோர்களும் பெருமையுடன் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். குழந்தை இல்லாதபட்சத்தில் தத்தெடுக்கவும் தயங்குவதில்லை. இதில் இப்படியொரு தீர்ப்பு தேவையா? இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் போராட்டத்துக்குப் பழகிவிட்டார்கள். சரியாக இல்லாத கணவனை உதறிவிடும் வைராக்கியம் பெண்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுவருகிறது. மனதளவில் பெண்ணைவிட வலிமை குறைந்த ஆண் எளிதில் சோர்ந்துவிடுவான். கணவனைத் தனிக்குடித்தனத்துக்கு அழைக்கும் மனைவிக்கு விவாகரத்துதான் தீர்ப்பு என்றால், மனைவி அவள் பெற்றோரைப் பார்க்கக்கூட அனுமதிக்காத கணவனுக்கு என்ன தண்டனை ?

வஞ்சனையின்றி மனைவியை வார்த்தை களால் சுட்டுப் பொசுக்கும் கணவர்களுக்கு என்ன தண்டனை ? பொருளாதாரச் சிக்கலில் சிதறுண்டு போயிருக்கும் பெற்றோருக்குத் தன் சம்பளத்தில் கொஞ்சம்கூடக் கொடுக்கவிடாமல் தடுக்கும் கணவர்களுக்கு என்னதான் தண்டனை? சட்டம் என்பது ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று ஆளுக்கொரு நீதியாக இருக்கக் கூடாது. அது மனித நேயத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். மனித மாண்புகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மாறாக வாழ்க்கையைப் பாழாக்கிவிடுவதாக இருக்கக் கூடாது.

-ஜே. லூர்து, மதுரை.



பெற்றோரைப் பேணிக் காப்பது ஆண், பெண் இருவரின் தலையாய கடமை. பெண் பிள்ளைகள் திருமணமானவுடன் கணவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயம். ஆண் பிள்ளைகளே இல்லாத வீட்டில் பெண்களைத் திருமணம் செய்துகொடுத்த பிறகு, பெற்றோரின் கதி என்ன? மாதம் ஒரு முறையோ, வருடம் ஒரு முறையோ மட்டுமே பார்த்துவிட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் ஆளாகிறார்கள். இந்தப் பிரச்சினையைக் களைய சமூகத்தில் மாற்றம் தேவை. ஆண், பெண் இருவருக்குமே தங்கள் பெற்றோர் மீது அக்கறையும் கடமையும் உண்டென்பதை இருபாலருமே உணர வேண்டும்.

- ஜி. அபிநயா.



இந்தக் கேள்வி அவசியமில்லாதது. இரண்டு பேருமே பெற்றோர்தான். இதில் உன் பெற்றோர், என் பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்? என் அம்மா நான் திருமணம் முடிந்து செல்லும்போது, “இதுவரை நான் உனக்கு அம்மா, இனி உன் மாமியார்தான் அம்மா” என்று சொல்லிக்கொடுத்து அனுப்பினார். பெண்களின் முதல் பருவத்தில், பெற்றவள் அம்மா என்றால், அடுத்து வரும் பருவங்களில் மாமியார்தான் அம்மா.

வீட்டுக்கு வரும் மருமகளை, மகளாக மாமியார் நினைத்துவிட்டால் இந்த வேறுபாடே வராது. இப்படி ஒரு குடும்ப வாழ்க்கை அமைந்துவிட்டால் அந்தப் பெண் ஏன் தனிக்குடித்தனம் பற்றி நினைக்கப் போகிறாள்? அதனால் மாமியார்களே, மகள்களைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கும் நிம்மதி; உங்கள் மகனுக்கும் நிம்மதி.

- உஷா முத்துராமன், திருநகர்.



உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் தீர்ப்பு கண்டிக்கத்தக்கது. எத்தகையச் சூழ்நிலையில் ஒரு பெண் இத்தகைய முடிவெடுக்கிறாள் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். குடும்ப வன்முறை ஒழியாத ஒரு சமூகத்தில் இருந்துகொண்டு, நாம் இத்தகைய தீர்ப்புகளை வரவேற்க முடியாது. பல குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களுக்கு முதுமைக் காலத்தில் இருப்பிடம் அமைவது அவ்வளவு சிரமமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர் எப்படித் தங்கள் முதுமைக் காலத்தைக் கழிப்பார்கள்? அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு யாரைச் சார்ந்தது? பெண் திருமணம் ஆனதும் தனது உறவுகளைப் பிரிந்து, புதுச் சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ளப் போதிய அவகாசத்தை நம் சமூகம் தருவதில்லை. இதனால்தான் குடும்பத்துக்குள் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இனிமேல் திருமணம் ஆனதும் பெண் தனது வீட்டில் இருந்து வெளியேறுவதுபோல ஆணும் தனது வீட்டில் இருந்து வெளியேறி, தங்களது வாழ்வை ஆரம்பிக்க வேண்டும். இருவரது பெற்றோருக்கும் தேவையான பண உதவி செய்து, உடல்நலம் குன்றினால் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சட்டம் போட்டால், இங்கு எத்தனை ஆண்கள் அதனை எதிர்ப்புக் குரலின்றி ஏற்றுக்கொள்வார்கள்?

பெண்ணைக் கட்டிக்கொடுத்துவிட்டு, அங்கு கை நனைக்கக் கூடாதென்று ஆணாதிக்கம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் சொன்னதை, இன்னும் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருக்கக் கூடாது. மருமகளுக்கென்று கொள்கைகளை வைத்திருக்கும் சமூகம், மருமகனுக்கென்று அத்தகைய கொள்கைகளை வைத்திருக் கிறதா? மனைவியைத் திருமணம் என்ற பெயரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கும் கணவனுக்கு இந்த உச்ச நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கப்போகிறது? இந்தக் கேள்விகளுக்கு எப்போது நேர்மையான பதில் கிடைக்கிறதோ, அப்போதுதான் பெண்ணின் பிரச்சினைகளுக்கும் விடியல் பிறக்கும்.

- தேஜஸ், கோவை.



உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இன்று முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டதற்கான காரணமே அப்பா, அம்மா இல்லாத தனிக்குடித்தனங்கள்தான். திருமணம்வரை பெற்றோருடன் இருந்த மகன், திருமணம் முடிந்தவுடன் பெற்றோருக்கு ‘டாடா’ காட்டிவிட்டு மனைவியுடன் தனிக்குடித்தனம் செய்யக் கிளம்புகிறானென்றால் அதற்கு யார் காரணம்? வந்த மருமகள்தான் காரணம். சில வீடுகளில் ஒரு மகன் இருப்பான். அவனும் திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், அந்தப் பெற்றோரின் கதி என்ன? சாப்பிடுவதும் துணி உடுத்திக்கொள்வதுமே வாழ்க்கையாகிவிடாது.

அன்பும் பாசமும் கொட்டி வளர்த்த மகனிடமிருந்து பெற்றோரை நிராகரிக்கும் குணம் எங்கிருந்து வந்தது? முதுமையும் தள்ளாமையும் அதிகரித்து, இயலாத நிலையில் கிடைக்க வேண்டிய அரவணைப்பும் ஆதரவும் கிடைக்காமல், தத்தளிக்கும் முதியோர்கள் எவ்வளவு பேர்! அந்த வலியும் வேதனையும் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். சிலர் மகளுக்கு வரன் பார்க்கும்போதே மாமியார், மாமனார் இல்லாத மாப்பிள்ளையாக இருந்தால் உத்தமம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது என்பது உண்மை.

- கேசவ் பல்ராம், திருவள்ளூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x