Published : 29 Jun 2022 01:24 PM
Last Updated : 29 Jun 2022 01:24 PM
அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர், போராட்டக்காரர் ஆலிஸ் வாக்கர். ‘தி கலர் பர்பிள்’ என்கிற நாவலுக்காக 1982ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். இதன் மூலம் புலிட்சர் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்கிற சிறப்பைப் பெற்றார். சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
தற்போது அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
“நான் 1965ஆம் ஆண்டு இரண்டு வேலைகளைச் செய்துகொண்டே கல்லூரியில் படித்துவந்தேன். அப்போது கர்ப்பமானேன். என்னிடம் பணம் இல்லை. எனக்கு இரண்டு வாய்ப்புகளே இருந்தன. கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும். என் நண்பர்கள் நிதி திரட்டிக் கொடுத்து, கருக்கலைப்பு செய்வதற்கு உதவினார்கள். அதனால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். கரு மீது கருணை இல்லையா என்று ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. பெண்கள் மீது உங்களுக்குக் கருணை இல்லையா? கருக்கலைப்பு என்பது தற்காப்பு நடவடிக்கை மட்டுமே. கருக்கலைப்பு செய்ததால் மட்டுமே இன்று நான் சமூகத்துக்குப் பயன்படும்விதத்தில் இருக்கிறேன். கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் என்பது பெண்களின் உரிமையைப் பறிப்பது” என்று கூறியிருக்கிறார் ஆலிஸ் வாக்கர்.
பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகருமான செலனா கோமஸ், “ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தை ரத்து செய்வது மிக மோசமானது. கருக்கலைப்பு உரிமைக்கு எதிரான இந்தச் சட்டத்துக்கு எதிராக ஆண்களும் குரல் கொடுக்க வேண்டும். இது பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல. பெண்களின் உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டம் என்னை வருத்தமடைய வைத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT