Published : 01 May 2016 01:56 PM
Last Updated : 01 May 2016 01:56 PM
(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
“பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை; விடுதலை! தனது வீட்டைத் தாண்டியும் உலகம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்துகொண்டால் பெண், ஆணுக்கு அடிமையாக இருக்க மாட்டாள். தேசத்துக்கே வழிக்காட்டும் தலைவியாக உயர்ந்து நிற்பாள்!” என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண் விடுதலையை உரக்கப் பேசியவர் புத்தர். மேற்கு வங்கத்தில் இருந்து புத்தர் நடமாடிய பிஹார் நோக்கிய எனது பயணத்தில், பெண் விடுதலைக்கான சிந்தனைகள் மேலெழுந்து பறந்தன.
வணக்கம் விஹார்!
மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் இருந்து நேபாள எல்லையோரமாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பிஹார் நோக்கிப் பயணித்தேன். தற்கால இந்தியாவின் கிழக்கில் அமைந்திருக்கும் பிஹார், முற்காலத்தில் மகத நாடு என அழைக்கப்பட்டிருக்கிறது. பவுத்தம், சமணம், இந்து எனப் பல மதங்கள் கிளைத்துச் செழித்த பூமி. திசையெங்கும் புத்த விஹாரங்கள் நிறைந்திருந்தன. இந்த விஹார் என்ற சொல்தான் பின்னாளில் பிஹார் எனத் திரிந்தது. வரலாற்றை அசைபோட்டுக்கொண்டு இமய மலைத்தொடரையும், கங்கைச் சமவெளியையும் தொட்டுக்கொண்டே பயணிப்பது உன்னதமாக இருந்தது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை ஏற்கெனவே சுற்றியிருந்தாலும், பிஹாரில் காலடி வைப்பது இதுதான் முதல் முறை. ‘வணக்கம் பிஹார்!’ என புத்த விஹாரை வணங்கிவிட்டு, தல்கோலாவில் இருந்து பூர்ணியா வழியாக தார்பங்கா நோக்கிப் பறந்தேன். கங்கையின் முக்கியமான துணை நதியான பாக்மடியின் கரையில் அமைந்திருக்கும் தார்பங்கா நகரம், விவசாயத்தால் செழித்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த தாபாவில் சப்பாத்தி, சப்ஜியைச் சாப்பிட்டுவிட்டு சமஸ்திபூர் நோக்கிப் பறந்தேன்.
தமிழகத்தில் சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகப் புளிய மரங்கள் இருப்பதைப் போல சமஸ்திபூர் - பெகுசாரி சாலையில் வரிசையாக மா மரங்கள் இருக்கின்றன. மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் வழிநெடுகிலும் மாம்பூ மணம் பரப்ப, மாமர நிழல் குளிர் தருகிறது. சிமாரியாவில் இருந்து சீதாமடி நோக்கிச் செல்லும் சாலையின் குறுக்கே கங்கை நதி பாய்கிறது. இதைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் பாலம், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஐந்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை மூடப்படும். அப்போது படகின் மூலமாகத்தான் மோட்டார் பைக், கார் ஆகியவற்றை அக்கரைக்குக் கொண்டு செல்ல வேண்டுமாம். நல்லவேளையாக வார நாளில் சென்றதால் அந்தப் பாலத்தைக் கடக்கும் பாக்கியம் எனது மைக்கிக்குக் கிடைத்தது.
சீதையின் மடியில் தஞ்சம்
கங்கை நதிக் கரையில் அமைந்திருக்கும் சீதாமடி, இந்துக்களின் புண்ணிய பூமியாக விளங்குகிறது. இங்குள்ள ஜானகி மந்திர் என்ற இடம் சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அயோத்தியா செல்லும் வழியில் சீதை நட்டதாக நம்பப்படும் பழமையான ஆலமரம் இங்குள்ளது. பல மொழிகளைப் பேசும் மக்கள் இங்கு வந்து சீதையை வணங்கிச் செல்கிறனர். ஆன்மிகத்தைப் போலவே கங்கையின் தீராப் பாசனத்தால் கோதுமை, நெல், கரும்பு முப்போகமும் செழித்து வளர்கின்றன. அன்றிரவு சீதையின் மடியில் தஞ்சம் அடைந்தேன்.
மறுநாள் அதிகாலை சீதாமடியில் இருந்து தொல்லியல் நகரமான பேட்டியா நோக்கிப் புறப்பட்டேன். வழிநெடுகப் பழமையான கோயில்களும், சிதிலமடைந்த கோட்டையின் சுவர்களும், ஆங்காங்கே பெரும் கல்வெட்டுகளும் கவனிப்பாரின்றித் தென்பட்டன. நண்பகலில் சூரிய தாண்டவம் கடுமையாக இருந்தது. குண்டும் குழியுமான பேட்டியா நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கை ஓட்டுவது சவாலாக இருந்தது. ஒருவழியாக பேட்டியாவை கடந்து, பிரசித்தி பெற்ற தூத் பேடாவைச் (பால்கோவா) சாப்பிட்டேன். மிகவும் சுவையாக இருந்ததால் ஒரு பிளேட் பார்சல் வாங்கிக்கொண்டேன்.
மிதிலை நகரின் மைதிலி மொழி
பேட்டியாவில் இருந்து பிஹாரின் தலைநகரான பாட்னா நோக்கிப் பறந்தேன். முற்காலத்தில் மகத நாட்டின் தலைநகராகவும், பாடலிபுத்ராவாகவும் விளங்கிய பாட்னா தற்போது மாபெரும் மாநகரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. ‘பின்தங்கிய மாநிலம்’ என்ற பெயரை மாற்ற பிஹாரிகள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்’ என பேனர்களில் கைகூப்பி வேண்டுகிறார் நிதீஷ்குமார். பெரும் கட்டிடங்கள், தொழிற்சாலைகள், மேம்பாலங்கள், அடிப்படைக் கட்டமைப்பு என பாட்னாவில் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. அன்றிரவு பாட்னாவில் சோளத்தில் செய்யப்பட்டிருந்த குழிப் பணியாரத்தைப் பருப்புக் குழம்பில் குழைத்துச் சாப்பிட்டேன்.
பிஹாரில் இந்தி, உருது ஆகிய மொழிகள் பெரும்பான்மையாகப் பேசப்பட்டாலும் கணிசமானோர் மைதிலி என்கிற அழகான மொழியைப் பேசுகின்றனர். சமஸ்திபூர், சீதாமடி, பேட்டியா, பாட்னா போன்ற நகரங்களிலும், நேபாளத்தில் உள்ள தேரை நகரிலும் மைதிலி மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்தி, வங்காளம் ஆகிய இரு மொழி சொற்களையும் கலந்து இந்த மொழி பேசப்படுகிறது. முற்காலத்தில் தனி அரசாக விளங்கிய மிதிலை (மிதிலா) நாட்டில் மைதிலி மொழி ஆட்சி மொழியாக இருந்தது. தற்போது இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மைதிலி மொழி, ‘மிதிலா’ என்ற சொல்லில் இருந்து உருவானதாக மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
அறிவொளி பாய்ந்த தேசம்
பாட்னாவில் இருந்து பவுத்தர்களின் புண்ணிய தேசமான புத்தகயா (போத்கயா) நோக்கிப் புறப்பட்டேன். பால்கு நதிக்கரையில் அமைந்துள்ள தொன்மையான நகரமான புத்த கயாவைச் சுற்றி மலைக் குன்றுகளும், கோட்டை கோபுரங்களும் நிறைந்திருக்கின்றன. இங்குள்ள போதி மரத்தடியில் (அரச மரம்) கவுதம புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றார். இந்த மரத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு எந்த தாவரமும் முளைக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. புத்தகயாவில் உள்ள மகாபோதி விஹாரை வணங்குவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பவுத்தர்கள் வந்துச் செல்கின்றனர். பல்வேறு படையெடுப்புகளுக்குப் பிறகும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் மகாபோதி விஹார், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 80 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள கவுதம புத்தரின் சிலை, காண்போரை வியக்க வைக்கிறது.
இதையடுத்து உலகின் பழமையான பல்கலைக்கழகமான நாளந்தாவுக்குச் சென்றேன். கிரேக்கர்கள், சீனர்கள், திபெத்தியர்கள், பாரசீகர்கள் எனப் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பயின்ற நாளந்தா பல்கலைக் கழகம் 14 ஹெக்டேர் பரப்பளவில் செங்கற்களால் கட்டப்பட்டது.கிபி 1193-ல் துருக்கி படையெடுப்பின் போது இங்குள்ள நூலகம் தீயிடப்பட்டது. சுமார் மூன்று மாதங்கள் இந்த நூலகம் எரிந்துகொண்டிருந்ததாக வரலாற்றியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கணக்கிட முடியாத நூல்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, பண்டைய இந்தியரின் வரலாறும், தொன்மையும் தீக்கிரையானது பெருங்கொடுமை!
நாளாந்தாவைத் தொடர்ந்து ராஜகிரகம் (நாஜ்கிர்), வைசாலி, கேசரியா, பக்ஸர், பாகல்பூர், சேஷாரம் ஆகிய அறிவொளி பாய்ந்த நகரங்களை நோக்கிப் படையெடுத்தேன். மவுரியர்களின் தலைநகரான ராஜகிரகத்தில் உள்ள குன்றுகளில் புத்தரும், மகாவீரரும் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது. இதனால் இந்நகரம் இன்றும் தொன்மையான முகத்துடன் பவுத்தத்தையும், சமணத்தையும் பறைச்சாற்றிக்கொண்டிருக்கிறது. தொல்லியல் நகரமான வைசாலியில் அசோகர் காலத்தில் நிறுவனப்பட்ட தூண்கள் இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. இதே போல கேசரியாவில் புத்தரின் நினைவாக அசோகர் நிறுவிய உலகப் புகழ் பெற்ற மகா தூண் உள்ளது. பவுத்தர்கள் இந்நகரை கேசபுத்தா என அழைக்கின்றனர்.
ஒவ்வொரு ஊரைக் கடந்து பயணிக்கும் போதும் தொல்குடிகளின் தடத்தை உணர முடிகிறது. அதில் பண்டைய மனித நாகரிகங்களைத் தேடும் அறிஞர்களின் காலடிச் சுவட்டையும் உணர முடிகிறது. இம்மண்ணின் பூர்வகுடிகளுக்கும், தழைத்திருக்கும் மரம் செடி கொடிகளுக்கும் தெரியாமல் அரசும், கார்ப்பரேட்டுகளும் கனிம வேட்டையில் ஊரைச் சீரழித்துக்கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
(பயணம் தொடரும்)
தொகுப்பு: இரா.வினோத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT