Published : 29 May 2016 01:33 PM
Last Updated : 29 May 2016 01:33 PM
(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்தியச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)
இந்தியாவின் கிழக்கின் நுனியில் இருக்கும் மேற்கு வங்கத்தில் தொடங்கி பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் வழியாக மேற்கின் முனையில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்துக்குள் நுழைகிறேன். பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து எதிரெதிர் துருவங்களைத் தொடும் இந்தப் பயணம் என்னுள் எண்ணற்ற மாற்றங்களை விதைத்திருக்கிறது.
எங்கெங்கு காணினும் வறட்சி
சத்தீஸ்கரின் அடர்ந்த தண்டகாரண்ய காடுகளைக் கடந்து மகாராஷ்டிர மாநிலத்தை அடைந்தேன். இந்தியாவில் வறட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் விதர்பா மாகாணத்தில் பசுமை சூழ்ந்த மலைகளும், மரங்களும் கருகும் நிலையில் காட்சியளிக்கின்றன. போதா வனப்பகுதியில் ஆள் உயரத்துக்கு வளர்ந்திருக்கும் புற்கள் காய்ந்து சருகாகி இருக்கின்றன. விதர்பா புலிகள் சரணாலயம், மேகாத் வன உயிரிகள் சரணலாயம் ஆகியவற்றில் உள்ள நீர்நிலைகள் வறண்டுபோய்க் கிடக்கின்றன.
விதர்பா வனப்பகுதியில் அகோலாவுக்கு அருகே புகழ்பெற்ற தேவ மந்திர் கோயிலில் வறட்சியின் காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்குத் தீர்த்தமென அறிவிக்கப்பட்டுள்ளது. அகோலாவைக் கடந்து, மலைப் பிரதேசமான ‘ஜீரோ மைல் ஸ்டோன்’ (பூஜ்ய மைல் கல்) என்ற இடத்துக்கு வந்தேன். ‘ஜீரோ மைல் ஸ்டோன்’ என்ற இந்த இடத்தை மையமாக வைத்துத்தான் ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் அளந்து, மைல்களைக் கணக்கிட்டுள்ளார்கள் என்றனர்.
அங்கிருந்து மராத்வாடாவின் தவுலதாபாத் வழியாக அவுரங்கபாத் நோக்கிப் பறந்தேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க தவுலதாபாத்தில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட 30 அடி உயரக் கோட்டை இன்னும் கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில் நெல் வயல்களால் சூழ்ந்திருந்த மராத்வாடா சாலையில் ஏழை மக்கள் நீரைத் தேடிக் குடங்களுடன் செல்கிறார்கள். பணக்காரர்கள் ஒரு லாரிக் குடிநீரை 2,000 ரூபாய் கொடுத்து வாங்கிக் குடிக்கிறார்கள். வறட்சியின் ருத்ரதாண்டவத்தைப் பார்த்தபடியே முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் பெருமையைப் பறைசாற்றும் அவுரங்கபாத் நகரைக் கடந்தேன்.
குடைவரைக் கோயில்களில் வாழும் பவுத்தம்
வார்தா நதிக்கரையோரமாக கோந்தியாவை நோக்கிப் பறந்தேன். வார்தா நதிநீரை நம்பிப் பயிரிடப்பட்டிருந்த பருத்திப் பயிர்கள் வாடிக் கிடக்கின்றன. மகாராஷ்டிராவில் அதிகமாக நெல் விளையும் கோந்தியாவில் இந்த ஆண்டு விளைச்சல் இல்லை. ‘எனதருமை விவசாயிகளே தயவுசெய்து தற்கொலை முடிவை நாட வேண்டாம். அவசரத்துக்கு என்னை அழையுங்கள்’ என மராத்தி நடிகர் நானா படேகர் கைகூப்பி வேண்டும் பதாகைகள் சாலையோரங்களில் கண்ணில்பட்டன.
கோந்தியாவைக் கடந்து பயணிக்கையில் சாலையோர மலைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. உலகப் புகழ்பெற்ற அஜந்தா குடைவரைக் கோயில்களில் உள்ள ஓவியங்களும், சிற்பங்களும் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கின்றன. பண்டைய பவுத்தர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குகைகளின் பெருமையை சீனப்பயணி யுவான் சுவாங் தன் பயணக் குறிப்பில் எழுதியிருக்கிறார். இதே போல எல்லோராவில் சரணந்திரி குன்றுகளில் ஏராளமான குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன.
கொங்கணி கரையோரப் பயணம்
இந்தியாவின் மேற்கு முனையில் மகராஷ்டிராவில் தொடங்கி கோவா, கர்நாடகா, கேரளாவரை அரபிக் கடற்கரையோரமாக நீண்டிருக்கும் பகுதியை ‘கொங்கண்’ என்கிறார்கள். கடலும், மலையும் இணைந்த கொங்கணில் வாழும் பெரும்பான்மையான மக்கள் திராவிடமும் சமஸ்கிருதமும் கலந்த கொங்கணி மொழியைப் பேசுகின்றனர். தனித்துவமான மொழியைப் பேசும் இம்மக்களின் கலையும் கலாச்சாரமும் அழகியல் நிறைந்தவை. கொங்கணி மக்களின் உணவு முறையும், பழக்கவழக்கங்களும் கவித்துவமானவை.
அழகான அரபிக் கடலின் அலையை ரசித்துக்கொண்டே மல்வார் நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன். தென்னை மரங்களும் பழங்கால வீடுகளும் நிறைந்த கிராமங்களைக் கடக்கையில் தென்றல் இதமாக வருடியது. மல்வாரின் அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்துவிட்டு தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் பஞ்சங்கி, மஹாபலேஸ்வர் கோயிலுக்குச் சென்றேன். சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் இந்தக் கோயிலில் இதுவரை 220 திரைப்படங்களின் ஷூட்டிங் நடைபெற்றிருப்பதாகச் சொன்னார்கள்.
ஜெய் பீம் தேசத்தில் சமத்துவம் ஜெயிக்கட்டும்
அங்கிருந்து பூனே வழியாக இந்தியாவின் ஸ்டார் நகரமான மும்பை நோக்கிப் புறப்பட்டேன். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்கும் மும்பை, பாலிவுட் காதலர்களின் கனவு தேசம். நிழலுலக தாதாக்கள், அயல்நாட்டு ஆயுதக் குழுக்களின் இலக்கில் தப்பாத நகரம். தானேவில் தொடங்கும் ஜன நெருக்கடி நவி மும்பையில் திணறி, தாராவியில் மூர்ச்சையாகிவிடுகிறது.
மகராஷ்டிராவில் திரும்பும் திசையெல்லாம் மகாத்மா பூலே, புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோருடன் மண்ணின் மைந்தர்கள் சிலரின் புகைப்படங்களும், சிலைகளும், பெயர்களும் வியாபித்திருக்கின்றன. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நேசிக்கும் வாசகங்கள் நிரம்பி இருக்கின்றன. ஆனால் மக்களுக்குள் அமைதியும் ஒற்றுமையும் இல்லை. வறட்சியில் சாகும்போதும் சாதி, வறட்டு புத்தியைக் கைவிடாமல் இருக்கிறார்கள். தீண்டாமையினால் தலித்துகள் பொதுக் கிணறுகளிலும், குளங்களிலும் நீர் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. அவமானப்படுத்தப்பட்ட மனைவிக் காக தலித் கணவர் ஒருவர் தனிமனிதனாகக் கிணறு வெட்டிய வரலாறு நீள்கிறது.
இந்தியாவில் முதன்முதலாகப் பெண் விடுதலைக்காகப் போராடிய சாவித்ரி பாய் பூலேவின் மண்ணில் இன்னமும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சாதி கவுரவத்தின் பெயரால் கொல்லப்படும் ‘சைரத்’ கதைகள் தொடர்கதைகளாகிவிட்டன. பெண்ணுரிமை பேசினால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துகிறார்கள். பகுத்தறிவைப் பேசினால் கோவிந்த் பன்சாரேவையும், நரேந்திர தபோல்கரையும் சுட்டுக் கொல்கிறார்கள். உண்ணும் உணவைக்கூட அதிகார வர்க்கமே தீர்மானிக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்தக் கொடுமை இல்லை!
மகாராஷ்டிராவின் எல்லையைக் கடக்கும்போது, ஒரு மராத்தியக் கவிஞனின் கவிதை நினைவுக்கு வந்தது. “ஜெய் பீம் என்றால் ஒளி. ஜெய் பீம் என்றால் அன்பு. ஜெய் பீம் என்றால் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்”.
வெளிச்சத்தை நோக்கிப் பயணிப்போம்!
(பயணம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT