Published : 15 May 2016 01:10 PM
Last Updated : 15 May 2016 01:10 PM
இந்தக் காலத்தில் ஆட்டோ முதல் விமானம்வரை ஓட்டும் பெண்களை நாம் தினமும் சந்திக்க நேர்ந்தாலும் பந்தய பைக்கில் சர்ரென்று மின்னல் போலப் பறக்கும் பெண்களைப் பார்த்தால் ஆச்சரியமும் பரவசமும் ஏற்படுகிறதுதானே! கத்தி மீது நடப்பதைப் போல அவர்களால் எப்படிக் கொஞ்சமும் பயமில்லாமல் சாகசம் செய்ய முடிகிறது என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். நம் ஆச்சரியத்துக்கும் கேள்விக்கும் விடை சொல்வது போல ஹெல்மெட்டைக் கழற்றியபடி புன்னகைக்கிறார் சௌந்தரி. இவர் சென்னையில் வளர்ந்துவரும் திறமையான பைக் ரேஸர்களில் ஒருவர். இவருடைய கணவரும் பைக் ரேஸர். இவர்கள்தான் இந்தியாவின் முதல் ரேஸர் தம்பதி.

சென்னையைச் சேர்ந்த சௌந்தரிக்குச் சிறு சிறு வயதிலிருந்தே ஆண்கள் ஓட்டும் பைக் மீது ஆர்வம் அதிகம். துறுதுறுவென இருக்கும் மகளின் பைக் ஆர்வத்துக்குச் சௌந்தரியின் பெற்றோரும் பச்சைக் கொடி காட்ட, பத்து வயதிலேயே பைக் ஓட்டப் பயிற்சியெடுத்திருக்கிறார். பள்ளி நாட்களில் தடகள வீரராக அறியப்பட்ட சௌந்தரி, மெக்கானிக் கடையில்தான் நிறைய நேரம் இருப்பாராம்.

“அப்போதானே அங்கே இருக்கற ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து பைக் ரேஸ் பார்க்கப் போக முடியும்?” என்று சொல்கிறார் சௌந்தரி. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, ஆண் நண்பர்களின் பைக்கை வாங்கி ஓட்டியவர், கல்லூரிக்குத் தன் சொந்த பைக்கில் சென்றாராம். தற்போது மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றினாலும் பைக் ரேஸ் மேல் இருக்கும் ஆர்வத்தை விடாமல் தொடர்ந்து பயிற்சிசெய்துவருகிறார்.
“2013-ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டபோது ஒரு விபத்து ஏற்பட்டுப் பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். பொதுவா இந்த மாதிரிப் பெரிய விபத்து ஏற்பட்டால் யாராக இருந்தாலும் அடுத்த முறை பைக் ஓட்டப் பயப்படுவாங்க. ஆனால் அந்த விபத்துக்குப் பிறகுதான் பைக் ரேஸ் மேல இருக்கற ஆர்வமும் ஈடுபாடும் அதிகமாச்சு” என்கிறார் சௌந்தரி.
அதே ஆண்டு ‘டி.வி.எஸ். ஒன் மே ரேஸ்’ (one make race) போட்டியில் கலந்துகொண்ட ஒரே பெண் போட்டியாளர் இவர்தான். அதன் பிறகு திருமணம், குழந்தை என்று ஆனதில் பைக் பந்தயத்துக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தார்.
“அதுக்காகப் பைக்குக்கும் எனக்கும் இருக்கற பந்தம் விட்டுப்போயிடுச்சுன்னு நினைச்சுடாதீங்க. தினமும் அலுவலகத்துக்குப் பைக்கில்தான் போனேன். பொதுவா ஒரு பொண்ணு கர்ப்பமாகிட்டா, பார்த்துப் பக்குவமா நடக்கணும்னு சொல்லுவாங்க. நான் எட்டு மாதம் இருக்கும்போதுகூட ராயபுரம் முதல் மெரினாவரை பைக் ஓட்டியிருக்கேன். அதனால எந்தவிதப் பிரச்சனையும் எனக்கு ஏற்படலை. நான் இவ்வளவு பயிற்சி எடுத்து வலுவாக இருந்ததால்தான் பிரசவக் காலத்துல என்னால திடமாக இருக்க முடிந்ததுன்னு டாக்டர்கள் சொன்னாங்க” என்று சொல்கிறார் சௌந்தரி. இவரது குழந்தைக்குத் தற்போது பத்து மாதமாகிறது.
குழந்தை பிறந்த சில நாட்களில் அலிஷா அப்துல்லா ரேஸிங் அணி சார்பில் முறையான பயிற்சிகூட இல்லாமல் ‘ஹோண்டா ரேஸ்’-ல் பங்கேற்று மூன்றாவது இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து 2016-ல் பெங்களூருவில் நடந்த டிராக் ரேஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
“2014-ல் அலிஷா என்னிடம் பெண்களுக்கான ரேஸிங் அணியைப் பத்திச் சொன்னாங்க. இப்போது நாங்கள் அதில் வெற்றியை நோக்கிப் போய்க்கிட்டு இருக்கோம்” என்று தன் புதிய பயணம் பற்றி சொல்லும் இவர், ஜூன் மாதம் தேசிய அளவில் நடக்கவிருக்கும் பெண்களுக்கான பைக் ரேஸிங் போட்டிக்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். தினமும் இரண்டு மணி நேரம் நீச்சல் பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்கிறார்.
“பைக் ரேஸிங் ஆபத்தான விளையாட்டுகளுள் ஒன்று என்பதால் பலரும் பயப்படுறாங்க. இன்னும் சிலருக்கு ரேஸிங்ல ஆர்வம் இருக்கும், ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவர்களின் திறமை வெளிப்படாமல் போய்விடும். இப்போது சென்னையில் பெண்களுக்குப் பைக் ரேஸிங்கில் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதனால் திறமையும் ஆர்வமும் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்கிறார் சௌந்தரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT