Last Updated : 30 Jun, 2014 10:37 AM

Published : 30 Jun 2014 10:37 AM
Last Updated : 30 Jun 2014 10:37 AM

தேடலில் மலர்ந்த இந்தோனேசிய வாத்தியம்

மனதுக்குப் பிடித்த அல்லது நெருக்கமான பொருட்களைத் தேடித் தேடி சேர்ப்பது சிலருக்குப் பிடிக்கும். ஆளுக்கு ஆள் அது மாறுபடலாம். சிலர் அஞ்சல் தலைகளைத் தேடித் தேடி சேகரிக்கலாம். சிலர் விதவிதமான பிள்ளையார் உருவங்களையோ, நாணயங்களையோ சேகரிக்கலாம். அனுசுயா குல்கர்னியும் அப்படியொரு சேகரிப்பில்தான் இருக்கிறார். இவரது தேடல் விசாலமானது, இசையோடும் மனதோடும் இணைந்தது. ஆம், உலகம் முழுவதும் உள்ள இசைக்கருவிகளைச் சேகரித்து வருகிறார் அனுசுயா.

இயல்பிலேயே இசையில் ஈடுபாடு உள்ள அனுசுயாவுக்கு அவரின் கணவராக நாராயணன் குல்கர்னி அமைந்தது, பல்லவி முடிந்து சரணம் தொடங்கியது போல் அமைந்துவிட்டது. அவருக்கு ஐக்கிய நாடுகளில் பணி. நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் செல்லும் பணி. இப்படி ஊர் ஊராகச் சென்ற பயணம், அனுசுயாவுக்கு 300க்கும் அதிகமான இசைக்கருவிகளைத் தேடித் தந்திருக்கிறது. பழங்குடி மக்களின் வாத்தியங்களும் அவற்றில் அடக்கம்.

அவர் வைத்திருக்கும் பல வாத்தியங்களை அந்தந்தப் பகுதியில் இருப்பவர்களிடமே வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் ‘ஆங்லங்’ என்னும் வாத்தியத்தை இந்தோனேசிய பழங்குடி கிராமம் ஒன்றில் 70-களின் தொடக்கத்தில் பார்த்திருக்கிறார். இரண்டு மூங்கில் சட்டத்தில் வெவ்வேறு நீளத்தில் மூங்கில்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வாத்தியத்தை வாசிக்க இவர் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. இந்த வாத்தியத்தைப் பயன்படுத்தி அதில் கர்நாடக இசையின் கூறுகளை வாசிக்கமுடியுமா என்னும் முயற்சியில் இறங்கி பல சோதனைகளுக்குப் பின் அதில் வெற்றியும் பெற்றார்.

ஆங்லங் வாத்தியத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, கர்நாடக இசைக்கு ஏற்றாற்போல் தான் வடிவமைத்த கருவிக்கு ‘ஆங்ரேங்’ எனப் பெயரிட்டார். இதன் மூலம் இந்தியாவில் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இந்த வாத்தியத்தைக் கொண்டே கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.

அனுசுயா ஆங்ரேங்கின் மூலம் வாசித்திருக்கும் ‘பாக்யாத லக் ஷ்மி பாரம்மா’ பாடல் யூ-டியூபில் புதிய அனுபவத்தைத் தருகிறது. 30 நாடுகளில் இருந்து சேமித்து வைத்திருக்கும் 300 வாத்தியங்களை காற்று வாத்தியம், நரம்பு வாத்தியம், தாள வாத்தியம் என வகைப்படுத்தி வைத்திருக்கிறார் அனுசுயா. அதுமட்டுமல்ல அடுத்தத் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் இசையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அனுசுயா குல்கர்னி. இவருடைய இசைத்தேடல் தொடர்ந்தபடியே இருக்கிறது, புதுப்புது வடிவங்களை அறிமுகப்படுத்தும் வேட்கையோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x